ஆயா சுட்ட வடையை முதலில் அமுக்கியது யார்? Part 3

நிலவிற்கு பயணம் செய்யப் போகும் முதல் மனிதன் யார்...ரஷ்யனா இல்லை அமெரிக்கனா ?

இதுவரை நடந்த எல்லா போட்டியிலும் ரஷ்யா தான் முன்னணியில் இருந்தது. 

Quarter-Final, Semi Final, Eliminator எல்லாம் முடிந்து, சூடான வடையை அப்படியே லபக்கும் ஆவலோடு முந்திப் போனது என்னவோ ரஷ்யா தான்.

GRAND-FINALEகு வந்தாயிற்று.

FINALல் நடந்தது தான் சற்றும் எதிர்பார்க்காத, மிகவும் சுவாரஸ்யமான கதை...!

***********************
5.  'மாத்தி யோசி மாமே'

லூனா-9 மற்றும் சர்வேயர்-1 இரண்டும் நிலவில் போய் அமர்களமாய் தரை இறங்கியதை பார்த்தோம் அல்லவா...ஆனால் லூனா-9 ஒரு தோல்வி project என்பது தான் ஒரு சோகமான விஷயம்.

சர்வேயர்-1 போல் அல்லாமல் லூனா-9க்கு கொடுக்கப்பட்டிருந்த கூடுதலான வேலை....நிலவில் தரை இறங்குவது மட்டும் அல்லாமல் அங்கே கொஞ்சம் இளைப்பாறி அப்படியே சுற்றி பார்த்து விட்டு திரும்ப பூமிக்கு வரவேண்டும். வரும்போது நிலவின் கற்களையும் கொண்டு வர வேண்டும்.

ஆனால், லூனா-9 மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் செத்துப் போனது. காரணம்...பாட்டரி தீர்ந்து போனது தான்.

எவ்வளவு தான் charge ஏத்தி அனுப்பினாலும் ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. நூறு நாட்களுக்கு தேவையான பாட்டரி charge, நிலாவில் ரெண்டு நாள் கூட வரவில்லை. இதை Charge Dissipation என்று சொல்லுவார்கள். தமிழில் 'விரயமாதல்'னு சொல்லலாமா..லாமே...!

கிளம்பும் போது முரட்டு காளையாய் சீறிப் பாய்ந்து போகும் லூனா, நிலவில் தரை இறங்கியதும் தொண்டுக் கிழவனாகி கொஞ்ச நாள் இழுத்துக்கொண்டே இருந்து, சீக்கிரமே செத்துப் போய் விடுகிறது. 

இதற்கு மேல் பாட்டரி எடை கூடினால் விண்கலம் மேலே எழும்பாமல் இங்கேயே படுத்து விடும் நிலை...!

இந்த தோல்வி லூனா-13 வரை தொடர்ந்தது, என்ன இன்னும் கொஞ்சம் அதிக நாள் சுத்திப் பாக்க முடிஞ்சது....அவ்வளவு தான். 

'என்னடா இது, நல்லா போகுது, சூப்பரா தரை இறங்குது, சுத்தியும் பார்க்குது, ஆனா திரும்ப வர மாட்டேங்குதே...! இது கல்லு (Rock Samples) கொண்டு வந்தாத்தானே மேற்கொண்டு ஆராய்ச்சி செஞ்சு, மனிதன் அங்கே போகலாமா வேணாமான்னு முடிவு பண்ண முடியும், இந்த பாட்டரி தொல்லையை எப்படி சமாளிக்கிறது ?' என்று ரஷ்யா மண்டை காய்ந்து கொண்டிருந்தது.

அடுத்த தேசத்துக்கு போகவே எவ்வளவு யோசிக்கிறோம்...தட்ப வெப்ப நிலை, காற்று, தண்ணீர் அப்படின்னு நெறைய விஷயம் இருக்கும் போது, முன் பின் யோசிக்காம நிலாவுக்கு போய்விட முடியுமா...? கொய்யால...அங்க காத்தே கெடையாதே...! தண்ணீர்...சுத்தம்...! 

அதுக்கு தான் அங்கிருந்து சில கல்லு கொண்டு வந்தா இங்கே அதை பிரிச்சு மேஞ்சு பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்...ஆனா லூனா இப்படி சூப்பரா சொதப்புதே...!!

அமெரிக்கர்கள் இதை எல்லாம் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு நடக்கும் விஷயம் நன்றாக தெரிந்து தான் இருந்தது. சர்வேயர்-2வை அனுப்பி பார்த்து தெரிந்து கொண்டார்கள்.

"பூமியில் நூறு நாட்களுக்கு மேல் வரும் பாட்டரி, நிலவில் ரெண்டு நாள் கூட வரவில்லை... ஏதோ ஒன்று நிலாவில் உட்கார்ந்து கொண்டு பாட்டரியில் உள்ள எல்லா Chargeஐயும் அப்படியே ஸ்வாஹா செய்கிறது....அதனால் தரை இறங்கும் விண்கலம் அங்கிருந்து கிளம்ப சக்தி இல்லாமல் செத்துப் போகிறது..! என்ன செய்யலாம்...?

நிச்சயம் நிலவின் மாதிரிகள் வேண்டும்..அதை ஆராயாமல் மனிதனை நிலவுக்கு அனுப்புவது என்பது தற்கொலைக்கு சமம்.

சாப்பிடாமல், தூங்காமல் ரூம் போட்டு யோசித்ததில் ஒரு சின்ன பொறி தட்டியது அமெரிக்க விஞ்யானிகளுக்கு....இப்படி செய்தால் என்ன ?

இது வரை ரஷ்யா என்ன செய்ததோ அதையே பின் பற்றி வந்த அமெரிக்கா கொஞ்சம் 'மாத்தி யோசி மாமே' என ஆரம்பித்தது இங்கிருந்து தான்.

******************************************

6. நீயா நானா 

1967, ஏப்ரல் 17ஆம் தேதி, கோலாகலமாக உலகத்துக்கே 'பாத்துக்கோ பாத்துக்கோ' என்று சொல்லிவிட்டு சர்வேயர்-3 ஐ விண்ணில் செலுத்தியது அமெரிக்கா.

இப்போது ரஷ்யர்கள் காதில் புகை வர, சர்வேயர்-3 இன் வருகைக்காக பல்லை கடித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஒரு நாள்...ரெண்டு நாள்..இப்படியே பத்து நாட்கள் போய் விட்டன. ஆனால் சர்வேயர்-3 திரும்பி வரவே இல்லை.

திரும்பி வரவில்லை என்றால் திரும்பி வரவே இல்லை....! போங்கடா நீங்களும் உங்க சர்வேயரும்' என்று கடுப்படித்துவிட்டு ரஷ்யா மறுபடி பாட்டரி பிரச்சனைக்கு தீர்வு தேடப் போய்விட, அமெரிக்கா தனக்குள்ளேயே ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தது.

அமெரிக்காவின் மாத்தி யோசி Concept..அதாங்க கருத்து...இது தான்...!

சர்வேயர்-3 உண்மையிலேயே பூமிக்கு திரும்பி வருவதற்கான எந்த புதிய தொழில் நுட்பத்துடனும் வடிவமைக்கப் படவில்லை. மாறாக, உயிரோடிருந்த பத்து நாட்களும் நிலவை நன்றாக சுற்றி...விதவிதமான கற்களை எல்லாம் ஆராய்ந்து, ஆராய்ச்சியின் முடிவுகளை மட்டும் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. ஒரு mini Laboratory (சிறிய ஆராய்ச்சி கூடம்) ஒன்றை அதோடு இணைத்து அனுப்பியது தான் அமெரிக்கர்களின் சாமர்த்தியம்.

'இங்கே கொண்டு வா ' (Get It Here) என்கிற ரஷ்ய தத்துவத்தை தொடராமல் 'அங்கேயே வெச்சு செய்' (Do It There) என்பது தான் அமெரிக்கர்கள் மாத்தி யோசித்த விஷயம்.

சர்வேயர்-3 அனுப்பிய ஆராய்ச்சி முடிவுகள் லட்டு லட்டாக வந்து விழுந்தன. பாட்டரி பிரச்சனைக்கு சுலபத்தில் விடை கண்டு கொண்டார்கள். 

பாட்டரி செல்களில் (Battery Cells), நிலவில் இருக்கும் புலப்படாத ஏதோ ஒரு பொருள் (Unknown Substance) கூடி செய்யும் வேதியல் எதிர்வினையே (Chemical Reaction) காரணம். 

பாட்டரி செல்களை வேதியல் எதிர்வினை நடக்காதவாறு பாதுகாப்பாக வைத்து விட்டால்...BINGO...!

ஆனால், அமெரிக்கர்கள் அவசரப்படவே இல்லை..இது வரை எந்த உயிரினமும் போகாத இடம். என்ன ஆகும் எது ஆகும் என்றெல்லாம் தெரியவே தெரியாது. போக வேண்டும் தான். தடம் பதிக்க வேண்டும் தான்..அதையெல்லாம் விட மிக முக்கியம், சிறு சேதாரம் கூட இல்லாமல் திரும்பி வர வேண்டும்...!

அடுத்த 5 மாதத்திலேயே சர்வேயர்-5 நிலவுக்குப் போனது. இதுவும் திரும்பி வரவே இல்லை. ஆனால், சற்றே பெரிய ஆராய்ச்சி கூடத்தோடு, டிவி, கேமரா எல்லாம் கொண்டு போய் நிலவின் மேற்பரப்பை நன்றாக உழுது ஆராய்ந்து முடிவுகளை தொடர்ந்து அனுப்பியது. 'Alpha Particles Decaying Technique' என்ற புதிய ஆராய்ச்சியை செய்து 'மனுஷங்க வர்லாம் ரைட்' என்று விசிலடித்து .

இப்பொழுதும் அமெரிக்கர்கள் அவசரமே படவில்லை. இன்னும் கொஞ்சம் ஆராயலாம் என்றே நினைத்தார்கள். அவர்களுக்கு தெரியும், ரஷ்யர்கள் பாட்டரி விஷயமாக காய்ந்து கொண்டிருகிறார்கள், மேலும் அமெரிக்காவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை..சர்வேயர் எல்லாம் படு தோல்வி என்று நினைத்துக் கொண்டிருகிறார்கள். ஆகவே இப்போது ரஷ்யாவால் ஒன்றும் புடுங்கி விட முடியாது..!

எங்கே ஆமை வரபோகிறது என்று முயல் தூங்கிய கதை தான்...! 

அடுத்து, லூனார் ஆர்பிடர்-5 நிலவின் வட்டப் பாதையில் பயணம் செய்து, தரை இறங்குவதற்கும் திரும்பி கிளம்புவதற்கும் (Landing & Takeoff) தோதான இடங்களை கண்டுபிடித்துச்  சொல்லியது.

1968, டிசம்பர் 21ஆம் தேதி, யாருக்கும் சொல்லாமல் மூன்று மனிதர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் அப்போலோ-8 (Apollo-8) நிலவை நெருங்கியது. 'Frank Bormann, James Lovell, William Anders' என்ற அந்த மூன்று பேர்களும் மூன்று நாள் பயணத்திற்கு பின் நிலவின் வட்டப் பாதையை அடைந்தார்கள். 20 மணி நேரம் சுற்றி வந்து பல ஆராய்சிகள் செய்து நெறைய புகைப்படங்கள் எடுத்து அமைதியாக பூமிக்கு திரும்பி விட்டார்கள், நிலவில் தரை இறங்காமலேயே.

ஏன் தரை இறங்கி இருக்க முடியாதா..? நிச்சயம் முடியும்..ஆனா அதெப்படி பொசுக்குனு போய்  இறங்கறது...ஒரு நாள், நட்சத்திரம் பார்க்க வேணாமா ?

கொஞ்சம் கூட நேரம் கடத்தாமல் உடனே நிலவில் தரை இறங்கும் போது அணிவதற்கு என்று ஒரு பிரத்யேக உடுப்பு தயாரித்தார்கள் (Special  Suite), பிறகு புவி ஈர்ப்பு இல்லாத இடத்தில் எப்படி நடப்பது என்று பயிற்சி எடுத்தார்கள். கூடவே இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் விதமாக ஒரு விண்வெளி சிற்றுந்தும் (Two Seated Spacecraft Bus, to be easily removed from primary shuttle) தயாரித்தார்கள். இதையெல்லாம் அப்போல்லோ-9, 10இல் அனுப்பி பரிசோதித்தும் விட்டிருந்தார்கள்.

எல்லாம் தயார்..! 

முகூர்த்த தேதி குறிக்க வேண்டியது தான்.....பார்த்துடலாம் நீயா நானா ??


7.சொல்லி அடித்த கில்லி 

இப்போது தான் ரஷ்யா தூக்கம் கலைந்து, முழித்துப் பார்த்தது. கடைசீயாக அனுப்பிய லூனா -14லும் சொதப்பிவிட்டது. 

'என்னாது..அவுனுங்க அனுப்பின அப்போல்லோ எல்லாம் திரும்பி வருதா..வர முடியாதே..இந்த அமெரிக்கனுங்க என்ன ஏதாவது மந்திரம் தந்திரம் செய்றாங்களா ? என்று கூர்ந்து கவனிக்கக் தொடங்கினார்கள்.

அப்போல்லோ-10 திரும்பி வந்த பிறகே 'நடந்தது என்ன' என்பது  ரஷ்யர்களுக்கு உரைத்தது. அலறி அடித்துக் கொண்டு லூனா-15ஐ உடனே தயார் செய்தார்கள். பாட்டரி பிரச்சனைக்கு ஒரு விதமாக ஒரு வழியும் கண்டுபிடித்திருந்தார்கள்.

1969, ஜூலை மாதம் 17ஆம் தேதி ஏவப்பட்ட லூனா-15, மூன்று நாட்கள் பயணித்து சரியாக 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதையை சென்றடைந்தது. 

ரஷ்ய விஞ்யானிகள் தீவிரமாக லூனா-15இன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டே இருந்தார்கள். எல்லாம் திருப்தியாக இருக்கவே, பூ மாதிரி தரை இறங்குமாறு அதன் கட்டுபாட்டு அறைக்கு (On Board Control System) கட்டளை போனது.

அதிக பட்ஷம் நான்கே நிமிடங்கள்...! லூனா-15 ஒரு ஏவுகணை போல் நிலவில் மோதி வெடித்ததை ஒட்டுமொத்த ரஷ்யக் கூட்டமும் தலையில் கை வைத்துகொண்டு வேடிக்கை பார்த்தது.

கொஞ்சம் இருங்க...! என்ன நாள் அன்னைக்கு ??

ஜூலை மாசமா...20ஆம் தேதியா, 1969 ஆவது வருஷமா ?

இந்த நாள் உலக சரித்திரத்தில் இடம் பெற்ற நாளாச்சே..!

அதே நாள்....ஒரு 13 மணி நேரத்துக்கு முன்னால...!

திருவாளர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) என்ற அமெரிக்கர், முதன் முதலாக தனது இடது காலை எடுத்து, நிலவின் மேற்பரப்பில் அழுத்தமாக வைத்து, பிறகு ஒரு அமெரிக்க கொடியையும் நட்டு விட்டு...

சற்றே ஆசுவாசமாக 'ஆயா சுட்ட வடையை' சுவைத்துக் கொண்டிருந்தார்...!

'நான் எடுத்து வைத்தது ஒரு சிறிய அடி தான்..ஆனால் இது மனித இனத்திற்கு அமைந்த ஒரு மிகபெரிய உச்சம்..!" என்று அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை....!





மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார் 

ஆயா சுட்ட வடையை முதலில் அமுக்கியது யார்? Part 2

3. பழம் போனாலும் வடை போகக்கூடாது...!

காதில் ரத்தம் வர அமெரிக்கா பார்த்துக் கொண்டிருந்த போதே, ரஷ்யா அடுத்த சிக்சருக்கு தயாரானது...! "இன்னும் என்னையா நாய் பூனைன்னு வேளாண்டிகிட்டு....அனுப்புயா நம்ம ஆளு ஒருத்தங்கள...! 

"என்னாது விண்வெளிக்கு மனுஷன அனுப்பனுமா...?" என்று ரஷ்ய வல்லுநர்கள் அடி வயிறு கலங்க பதறிப் போனார்கள். "லைக்காவிற்கு என்ன ஆச்சு பார்த்தீங்க இல்ல...!" என்று எல்லோரும் லீவு லெட்டர் எழுதி கொடுத்துட்டு வீட்டுக்கு போக நினைத்த பொது, துணிந்து நான் போறேன் என்று வந்தவர் யூரி காகரின் (Yuri Gagarin).

1961 ஏப்ரல் 12ஆம் தேதி, உலகமே பதபதைத்து பார்த்துக்கொண்டிருக்க , யூரி ஏதோ அந்தமான் தீவுக்கு டூர் போவது போல, 'Vostok' எனும் விண்கலத்தில் பூமியின் நீள் வட்டப்பாதையை ஒரு சுற்று சுற்றி, எந்த சேதாரமும் இல்லாமல் முழுதாய் திரும்பி வந்து நாரதரின் 'ஞானப்பழத்தை' கவ்விகொண்டார் (The first human being to visit the space).

செமட்டியால் அடி வாங்கியது போலிருந்தது அமெரிக்காவிற்கு. "ஆஹா பழம் போச்சே..! போனது போச்சு...ஆனா பழம் போனாலும் வடை போகக்கூடாது" என்று அடித்துச் சொன்னார் அதிபர் ஜான் கென்னடி (John F Kennedy). 

யூரி டூர் கிளம்புவதற்கு மூன்று மாதம் முன்னர் (20th January 1961) தான் இவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டிருந்தார். உடனே 240 மில்லியன் டாலர்களை (இன்றைக்கு அதன் மதிப்பு 174 பில்லியன், ருபாய் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் 174000000 X 65 = 11348097300.00) சுளையாய் கொடுத்து 'அப்போலோ' வை (Project Apollo) வேகப்படுத்தினார். 

அப்போலோ என்பது நம்மவூர் ஆஸ்பத்திரி இல்லீங்க...! அது அமெரிக்க அப்போலோ. நாசா (NASA) வின் செல்லக் குழந்தை. லட்சக்கணக்கான கோடிகளை விழுங்கும் ஒரு விண்வெளி ஆராய்ச்சி திட்டம். குறிப்பாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது.

ஒரு மாதம் கூட காத்திருக்கவில்லை அவர்கள்.  1961 மே 5ஆம் தேதி, ஆலன் ஷெப்பர்ட் (Alan Sheppard) என்பவரை விண்வெளிக்கு அனுப்பி நானும் 'ரூட்டுத்தல' தான் என்று காட்டியது அமெரிக்கா.

ஒரு மாதத்திற்குள் அமெரிக்கா சாதிக்கும் என்று ரஷ்யா எதிர் பார்க்கவே இல்லை. ரஷ்யா முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கென்னடி அமெரிக்கர்களுக்கு ஒரு சத்தியம் செய்தார்.

"இனி நாங்கள் சும்மாவெல்லாம் விண்வெளியில் சுற்றப் போவதில்லை. எங்கள் இலக்கு அந்த வடை தான். இன்னும் பத்தே ஆண்டுகளில் நிலவில் அமெரிக்க மனிதக்கால் தடம் பதிய வைப்போம்"  

"ஆயா சுட்ட வடை நமக்கே" என்ற வீர வசனத்தோடு சீறிப் பாயத் தயாரானது அமெரிக்காவின் அப்போலோ.



4. இனிமேல் தான் ஆரம்பம் 

கென்னடியின் வீர சபதத்தை எல்லாம் ரஷ்யா கண்டுக்கவே இல்லை. அடங்காமல் அடுத்த ரவுண்டுக்கு போனார்கள். 

1963 ஜூன் 16ஆம் தேதி, வேலன்டினா விளாடிமிரொவ்னா (Valentina Vladimirovna) விண்வெளிக்கு போன முதல் பெண்மணி (First woman to visit space) என்று சரித்திரத்தில் இடம் பெற்றார். அதோடு நிற்காமல் முன்பு ரஷ்யா ஏவிய, விண்வெளியில் அநாமதேயமாய் சுற்றிக் கொண்டிருந்த வின்கலத்தொடு தொடர்பையும் ஏற்படுத்தி சாதனை செய்தார். 

இங்கு முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டி உள்ளது.

இதுவரை விண்வெளியில் நடந்தவை இந்த ரெண்டு விஷயங்கள் தான்:

1. மனிதர்களை ஏற்றிக் கொண்டு போன விண்கலங்கள், திட்டமிட்டு வகுத்துக் கொடுத்த பாதையில், சமர்த்தாய் பூமியை ஒரு சுற்று சுற்றி விட்டு திரும்ப வந்தன.

2. மனிதர்கள் இல்லாமல் போன விண்கலங்கள், அங்கிங்கெனாதபடி எங்கெலாமோ சுற்றி நிறைய படங்கள் எடுத்து அனுப்பி விட்டு, கடைசீயில், எரி பொருள் தீர்ந்தவுடன் நிலவில் மோதி மாண்டு போயின.

நடக்க முடியாமல் போனவை என்பதும் இரண்டு விஷயங்கள் தான்:

1. நிலவுக்கு அருகில் போகும் விண்கலங்கள், அதன் மீது மோதி அழியாமல் தரை இறங்குவது.

2. பூமியின் நீள் வட்டப் பாதையில் இருந்து விலகி போகும் விண்கலங்கள், மீண்டும் நீள் வட்டப் பாதைக்கு வந்து பூமிக்கே திரும்ப வருவது.

இது இரண்டும் நடந்து விட்டால்...சாதித்து விட்டால்...ஆயா சுட்ட வடை நமக்கே..!

மறுபடியும் ரஷ்யாவும் அமெரிக்காவும் அடித்துக் கொள்ள ஆரம்பித்தன.

நிலவில் யார் முதலில் விண்கலத்தை தரை இறக்குவது என்பதில் இரண்டு நாடுகளுக்குமே ஆரம்பத்தில் மீசையில் மண் தான். மாறி மாறி பட்டாசு தான் வெடித்தது...!

தொடர் தோல்விகளுக்குப் பின் ரஷ்யா, 'நான் தான் பெரியண்ணன்' என்று மறுபடி உலகுக்குக் காட்டியது பிப்ரவரி 3ஆம் தேதி 1966இல். லூனா-9  என்கிற அந்த விண்கலம் ஒரு பறவையை போல் நிலவின் மீது அற்புதமாய் தரை இறங்கியது. 4 மாதத்திற்கு பின் அமெரிக்காவின் சர்வேயர்-1 நிலவில் கால் வைத்தது.

சாத்தியப்படாத இரண்டில் ஒன்று கைகூடி விட்டது, அடுத்து...? 

நிலவிற்கு பயணம் செய்யப் போகும் முதல் மனிதன் யார்...?

இதுவரை நடந்த எல்லா  போட்டியிலும் ரஷ்யா தான் First Prize. 

சூடான வடையை அப்படியே லபக்கும் ஆவலோடு முந்திப் போனது ரஷ்யா தான்.

ஆனால்....!

இதற்குப் பின் நடந்தது தான் சற்றும் எதிர்பார்க்காத, மிகவும் சுவாரஸ்யமான கதை...!

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடரலாம்.

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார் 

உலகின் தலை சிறந்த பத்து பொறியாளர்கள்: Part 3

2. நிகோலா டெஸ்லா (Nikola Tesla):


அது நடந்தது கி.பி 1884ஆம் ஆண்டு. 

உலகத்தையே கலக்கிக் கொண்டிருந்த ஒரு மிகப் பெரிய தொழில் அதிபரிடம் வேலை கேட்டு, Franceஇல் இருந்து அமெரிக்கா வந்தார் ஒருவர். கையோடு ஒரு சிபாரிசு கடிதமும் கொண்டு வந்திருந்தார். கடிதம், தொழில் அதிபருக்கு 'சார்லஸ்' என்கிற மிக நெருங்கிய நண்பரிடமிருந்து வந்திருந்தது. சில வாசகங்களே இருந்தன அந்த கடிதத்தில்...!

"இந்த பிரபஞ்சத்தில் மிகச் சிறந்தவர்களாக நான் நினைப்பது இரண்டு பேரை மட்டுமே. ஒன்று நீங்கள். இன்னொன்று இந்த கடிதம் கொண்டு வந்திருப்பவர்".

தொழில் அதிபரும் மறுபேச்சில்லாமல் வேலையில் சேர்த்துக் கொண்டார். தனது ஆராய்ச்சியில் முடிக்கப்படாமல் இருக்கும் விஷயங்களை முடித்து தருமாறு கேட்டுகொண்டார். 

வேலை கொடுத்தவர் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன், சேர்ந்தவர் பெயர் நிகோலா டெஸ்லா.

தனக்கு வேலை கொடுத்த எடிசனையே பின்னுக்கு தள்ளி விட்டு '20ஆம் நூற்றாண்டை வடிவமைத்த, தன் நிகரில்லாத பொறியாளன்' என்ற புகழோடு இரண்டாம் இடத்தை இந்த டெஸ்லா கெட்டியாக பிடித்து கொண்டதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. உண்மையும் நிதர்சனமும் அது தான். சொல்லபோனால் நமக்கு தெரிந்து, வாழ்ந்து-மறைந்த பொறியாளர்களில் இவர் தான் உலக நாயகன் (World No. 1), இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

இவர் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என்று கேட்டால், ஒரு பெரிய ஆமாம் தான் போட வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் மின்புரட்சிக்கு  (Electrical Revolution) வித்திட்டவர் இவரே.

'மின்சாரம்' என்று சொன்னாலே எடிசன் பெயர் மட்டும் நினைவிற்கு வருவது திட்டமிட்டு  அமெரிக்க ஊடகங்கள் பரப்பிய சதி. சத்தியமாக... உண்மையாக...டெஸ்லா பெயர் தான் நினைவிற்கு வர வேண்டும். ஏன் ?இந்தாளு மட்டும் இல்லன்னா...நமக்கெல்லாம் 'கரண்ட்டு' என்கின்ற ஒன்று எப்படி எல்லாம் பயன்படும்னு முழுசா தெரிஞ்சே இருந்திருக்காது. 

எடிசன் கண்டு புடிச்ச பல்பு மின்சாரத்தை பயன்படுத்தி வெளிச்சம் கொடுக்கும், ரைட்டு...! ஆனா ஊர் முழுக்க நட்டு வெச்ச பல்புகளுக்கு மின்சாரம் எப்படி போய் சேரும் ? அதாங்க...மின் விநியோகம்...! இங்க தான் வர்ரார் நம்ம தலைவர். மின்சாரத்தை சேதாரமில்லாமல் கம்பி வழியாகவும் கம்பி இல்லாமலும் கடத்தும் (Wired & Wireless Transmission of Electricity) வித்தை இவருக்கு தான் கைவந்தது. 

இந்த AC & DC கரண்ட்டு (Alternative Current & Direct Current) கேள்விப்பட்டதுண்டா? ட்ரான்ஸ்பார்மர் (Transformer)? இண்டக்ஷன் மோட்டார் (AC Induction Motor) ? சரி விடுங்க! வெளிச்சத்துக்கு மட்டும்னு இல்லாம, இன்னைக்கு எந்த-எந்த விஷயங்களுக்கு எல்லாம் மின்சாரம் பயன்படுதோ அதெல்லாம் இவரோட கடத்தும் தத்துவத்தின் அடிப்படையில் தான். 

மின்சாரக்கடத்தலின் சூட்ஷமமான 'காந்தப்பாய-அடர்த்தி' (Magnetic Flux Density) இவர் பெயரால் தான் அளக்கப்படுகிறது.

கம்பியில்லா தொடர்பு (Wireless Communication) இவரது கண்டுபிடிப்பே. இது தான் இன்றைய ரிமோட் கண்ட்ரோலுக்கு (Remote Control) ஆதாரத்தத்துவம்.

மின்சாரத்தை உருவாக்கும் ஜெனரேட்டர், டைனமோ, காற்றாலை, மின்சாரத்தை சேமிக்கும் பாட்டரி, மின்சாரத்தை கடத்தும் காந்தச் சுருள், மின்காந்த அலைகள், சூரிய சக்தி/நீர்/அனல்/புனல் மின்நிலையங்களின் கட்டமைப்பு, என இவர் சொல்லி சொல்லி அடித்தது எல்லாமே கில்லி தான்.

எடிசனிடம் இருந்து விலகி, தனியாக ஒரு நிறுவனம் தொடங்கி, பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி, எடிசனுக்கே போட்டியாளர் ஆகி, நின்னு விளையாடி ஜெயிச்சவர் இவர். 

தொழிற்துறையிலும் அரசாங்கத்திலும் அதீத ஆளுமையுடன் இருந்த எடிசனையே வீழ்த்தி நயாகரா நீர்வீழ்ச்சியில் மின்நிலையம் அமைத்தது இவரது வரலாற்று சாதனை.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் எடிசனிடம் இவரது பருப்பு வேகாமல் போனதற்கு ஒரே காரணம்..எடிசனை போன்று சந்தைப்படுத்தி பொருள் ஈட்டும் சாமர்த்தியம் இல்லாமல் போனது தான்...!

ஒருபுறம் எடிசன் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்று செம்மையாக கரன்சிகளை அள்ளிக் கொண்டிருக்க, இவரோ உலகத்துக்கே விலைஇல்லா மின் விநியோகம் செய்கிறேன் பேர்வழி என்று சொந்தக் காசையும், வட்டிக்கு கடன் வாங்கிய காசையும் போட்டு மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையம் (Massive Power Plant) கட்டும் பணியை தொடங்கினார். 

கி.பி 1990ஆம் ஆண்டு, வார்டன்கிளிபே (Wardenclyffe) எனப்படும் அந்த ப்ராஜெக்ட் தொடங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஆனால் சிறிது காலத்திலேயே, ஏடாகூடமாய் பட்ஜெட் எகிறி பாதியில் நின்று போன தமிழ் படம் போலாகி முடங்கிப் போனது. அடி விழுந்தது என்னவோ உண்மை, அது சாதாரண அடியாக இல்லாமல் மரண அடியாக விழுந்தது  தான் மிகப் பெரிய சோகம்.

அதற்கு பிறகு அவருடைய முயற்சிகளுக்கு எந்த ஆதரவும் கிடைக்காமல் போனது. பெயரும் புகழும் நிறைய கிடைத்தது, பொருள் மட்டும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு பைத்தியகாரனை போல் மிச்ச வாழ்கையை கழித்து...ஒரு அனாதையை போல் தனது 86ஆவது வயதில், நியுயார்க்கில் இருந்த ஒரு வாடகை அறையில் செத்துப்போனார். 

ஆனால் டெஸ்லா செய்து விட்டுப் போனது மானுட சமுதாயத்திற்கே ஒரு அளப்பறியா கொடை.

டெஸ்லா என்றொரு மனிதன் பிறக்காமல் போயிருந்தால், மின்சார ரயில் இல்லை, மோட்டார் சாதனங்கள் இல்லை, மின் ஆலைகள் இல்லை, தொழிற் புரட்சி இல்லை, இன்னும் கூட உலகம் சூரிய வெளிச்சதிற்காய் காத்துக் கொண்டு இருந்திருக்கும் என்பது நிதர்சனம். 

சந்தேகமே இல்லாமல், மின்பொறியியல் (Electrical Engineering) துறையின் தந்தை, தாய், தாத்தா, பாட்டி எல்லாம் இவர் தான்.

குறிப்பு 1: செர்பியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர், படிப்பில் படு சுட்டியாயினும், பட்டம் பெற வில்லை. எனினும் அமெரிக்க பல்கலைகழகங்கள்  3 முறை முனைவர் பட்டம் கொடுத்து கவுரவப்படுத்தின.

குறிப்பு 2: இவருக்கும் எடிசனுக்கும் நடந்த 'நீயா நானா' போட்டி என்பது உலகப் பிரசித்தி பெற்ற ஒன்று. ஊடகத்துறை இதனை 'மின்சார யுத்தம்' (War of Currents') என்றே குறிபிடுகின்றது. 

எடிசன் கண்டு புடிச்ச (Direct Current எனும் நேர் கடத்தி மின்சாரத்தை பயன்படுத்தி வெளிச்சம் கொடுக்கும்) பல்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது .

என்ன தான் பல்பு கண்டு புடிச்சாலும் அதனை சந்தையில் விற்று காசு பண்ணுவதற்கு இரண்டு விஷயங்கள் அவருக்கு தடையாக இருந்தன.

1. தொடர்ந்து பல்பு எரிய தேவையான மின்சாரத்தை தயாரிக்கும் ஜெனரேடர் (Direct Current Generator).
2.  தயாரிக்கும் மின்சாரத்தை பல்பு வரை தடையில்லாமல் கொண்டு சேர்ப்பது (Electricity transmission)

 இந்த இரண்டு விஷயங்களையும் சரி படுத்தாவிட்டால் யாரும் பல்பை நயா பைசாவிற்கு கூட வாங்கமாட்டார்கள் என்பதே நிலைமை. தலையில் கைவைத்துக்கொண்டு எடிசன் உட்கார்ந்திருந்த அந்த சமயத்தில், வேலை கேட்டு வந்த டெஸ்லாவிடம் 'சிக்கிடாண்டா சேகரு' என்று மொத்த வேலையையும் தூக்கி கொடுத்து விட்டார்.

ஒரு மாதத்தில் இந்த இரண்டு தடைகளுக்கும் தீர்வை கண்டுபிடித்து விட்டால் $50,000 மொத்தமாய் உனக்கே உனக்கு என்று வேறு எடிசன் ஆசை காட்ட, புலி வேகமாய் களத்தில் குதித்தது. சொன்னபடியே சாதித்தும் காட்டி, காசு கேட்ட போது எகத்தாளமாய் சிரித்தார் எடிசன், "தம்பி போய் வேலைய பாரு.. வேணும்னா மாச சம்பளத்தில் கொஞ்சம் கூட்டி தாரேன்"

தான் எடிசனால் மழுங்க மொட்டை அடிக்கப்பட்டதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. "போயா நீயும் உன் வேலையும்" என்று வெளியேறி பிறகு அவர் கண்டு பிடித்தது தான் மாற்று மின்சாரம் எனும் 'Alternative Current'.

இந்த மாற்று மின்சாரத்தை வைத்துகொண்டு சொந்தமாக ஒரு கம்பெனி தொடங்கி, எடிசனை 10 வருடங்கள் சொல்லி சொல்லி டெஸ்லா அடித்தது தான் 'மின்சார யுத்தம்' (War of Currents').

பிறகு ? அதான் அந்த 'வார்டன்கிளிபே', டெஸ்லாவை சூப்பராக வாரி விட்டதை முன்னம் பார்த்தோமே...!

குறிப்பு 3: ரேடியோவை கண்டு பிடித்தது மார்கோனி, X-Rayவை கண்டு பிடித்தது ரோன்ட்ங்கன். ஆனால் இருவரும் தன்னுடைய ஆராய்சிக் குறிப்புகளை காப்பி அடித்து தான் இதை சாதித்தார்கள் என்று இருவருடனும் டெஸ்லா சண்டை போட்டு இருக்கிறார். 

குறிப்பு 4: மானுட சமூகமே இவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது எதனால் என்றால்...மின்சார ஆராய்ச்சி என்பது மரணத்தோடு விளையாடுவது போன்றது. 27 முறை ஆராய்ச்சியின் போது இவர் தூக்கி வீசப்பட்டிருகிறார். ஒரு முறை 11 மாதங்கள் கோமாவில் இருந்து பிறகு மீண்டிருக்கிறார். பலமுறை மின்சாரம் தாக்கி உடலின் சில பாகங்கள் மரத்துப்போய் அவதிப்பட்டிருக்கிறார், ஆனால்...என்ன ஆனபோதும் தனது ஆராய்சிகளை மட்டும் கை விடவே இல்லை. 

அது தான்...அது ஒன்று தான்....இன்றும் இவர் பெயரை கேட்ட உடன் கையெடுத்து கும்பிட தோன்றுவதற்கு ஒரே காரணம்....!

சரி.... இந்த தண்டி ஆளையே "கொஞ்சம் தள்ளி விளையாடு தம்பி"னு சொல்லிட்டு மொத எடத்துக்கு வந்த அந்த சூப்பர் ஸ்டார் யாருங்க....?

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடரலாம்.

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்