உலகின் தலை சிறந்த பத்து பொறியாளர்கள்: Part 4

1. லியர்னடோ டா வின்சி (Learnado da Vinci):

லியர்னடோ  தன்னை தானே வரைந்து கொடுத்த படம் 
இன்றிலிருந்து சரியாக 563 ஆண்டுகளுக்கு முன்னால், 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி பின்னரவில் இத்தாலியில் 'வின்சி' (Vinci) என்ற சிறு கிராமத்தில் 'அந்தோனியோ டா வின்சி' (Antonio da Vinci) என்கிற ஒரு கோமகனுக்கு 'கத்ரீனா' (கத்ரீனா  கைப்பான்னு எல்லாம் கேட்கக் கூடாது...!) என்ற ஒரு வைப்பாட்டியின் மூலமாக ஒரு குழந்தை பிறந்தது.

கடவுளின் அவதாரமோ தேவதூத பிறப்போ இல்லை. எல்லா பிறப்பையும் போல் அதுவும் ஒரு மானுடப்பிறப்பு தான். ஆனால் மானுடப்பிறப்பிலேயே மகத்தான பிறப்பு. எந்தக் கடவுளும் வந்து ஞானப்பால் ஊட்டாமல், நாவில் எழுதாமல் தன் சுய முயற்சியால் கற்றிந்து (most reliable source of knowledge based on own observation), உலகை உய்விக்க பிறந்த ஞானக்குழந்தை அது.

'லியர்னடோ' என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு, (முறையான திருமணத்தில் பிறக்காததால்) ஆரம்பக்கல்வி மறுக்கப்பட்டுவிட, கடவுளின் கருணையால் (யாருங்க அந்த கடவுள்...?) ஒரு பாதிரியார் மூலம் படிக்கவும் எழுதவும் கற்றுகொடுக்கப்பட்டது. 14ஆவது வயதில் அருகில் இருந்த Florence என்ற நகரத்தில் ‘அண்ட்ரியா டெல் வேரோச்சியோ’ (Andrea del Verroccio) என்ற பள்ளியில் தந்தையால் சேர்த்து விடப்பட்டார். அங்கு அவருக்கு சீட்டு கிடைத்ததென்னவோ யாரும் அவ்வளவாக விரும்பாத ஓவியம் மற்றும் சிற்பத்துறையில் தான். இருபத்திரண்டு வயது வரை அவருக்கு தெரிந்ததெல்லாம் ஓவியம் வரைவது, தூரிகை செய்வது, வெண்கல சிலைகளுக்கு சாயம் பூசுவது மட்டுமே.

சும்மா…சும்மா…..வெறுமனே எவ்வளவு ஓவியம் தான் வரைந்து கொண்டிருப்பது? அவருக்கு ஒரு கட்டத்தில் சலித்து போனது. வேறென்ன செய்யலாம் என்று அவர் யோசித்த அந்த தருணம் தான் இந்த புத்தனுக்கு ஞானம் பிறந்த தருணம்…! கணிதத்தையும் அறிவியலையும் கொண்டு ஓவியத்தில் ஏதாவது புதுமை செய்ய முடியுமா என அறிய அவர் படிக்கத்தொடங்கினார். இது தான்…….இது தான்….தொடக்கம்…! 

படித்தார் என்பது சற்றும் பொருந்தாத வார்த்தை. பத்து வருட 'அசுரப்படிப்பு' என்று தான் சொல்ல வேண்டும். ஒரு விதமான தவம் கூட. "அட...கணிதத்தில் இவ்வளவு விஷயங்களா ? அறிவியலில் இத்தனை பிரிவுகளா ?" எதையும் விடவில்லை அவர். எல்லையே இல்லாமல் எல்லாம் படித்தார், நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படித்தார்..அதற்குப் பிறகும் அவர்...படிப்பதையும் நிறுத்தவில்லை, கற்றதை செயல்படுத்தி பார்க்கவும் தவறவில்லை. கலை வித்தகனாய் இருந்தவர் பொறியாளன் ஆனது இப்படித்தான்.

இங்கு தான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். நமக்கும் இவருக்கும் என்ன வித்யாசம் ? ஒன்றே ஒன்று தான் தோழர்களே...! ஆர்வம்..கற்றுத் தெளியும் வேட்கை...! எல்லாம் தெரிந்து கொள்ள உண்டான வெறி..! அணுஅளவும் சோம்பல் இல்லாத இந்த வெறி தான் எந்த ஒரு சாதாரண மனிதனையும் சாதனையாளனாக்கி காட்டுகிறது. அந்த ஒரு வினாடி தான் எல்லாருடைய விதியையும் தீர்மானிகிறது. தன்னைத் தானே நம்புகிறவன் வேறு பாதைக்கு போகிறான். நம்பாதவன் புள்ளை குட்டி பெற்று செத்துப்போகிறான்...!

வரைவதற்கு தேவையான அட்டையை சரியான அளவில் வெட்ட அவர் கண்டுபிடித்த முதல் பொருள் இன்றும் பயன்பாட்டில் இருக்கும் கத்திரிகோல். "எண்ணையை வண்ணக் கலவையில் கலந்து வரைந்தால் ஓவியம் பளபளக்கிறதே...! ஆஹா....கணித சமன்பாட்டின் படி வரைந்த ஓவியத்தில் முப்பரிமாணம் (3D) தெரிகிறதே...!" ஆக ஒரு துறையில் இன்னொன்றை புகுத்தினால் விளைவு அற்புதம், எனில் எதையும் விடக் கூடாது, எல்லாம் படிக்க வேண்டும், எல்லாவற்றையும் கலக்க வேண்டும். விளைவு...? ஒரு நிலைக்கு மேல் ஆச்சரியங்களே அலுத்துப்போகுமளவு அவர் கற்றுத் தேர்ந்தார் என்றால் அது மிகையல்ல.

சாதனைகளின் தொடக்கத்தில் அவரது ஆர்வம் சற்றே கோளாறாய் போனதில் வியப்பேதும் இல்லை. ஒரு படைப்பை தொடங்குவார், அது முடியுமுன்பே வேறொன்றை தொடங்கி விடுவார். இப்படி அவர் முடிக்காமல் போனது நிறைய்ய. அதற்கு காரணமும் இருந்தது. அவ்வை மூதாட்டியின் 'எல்லாவற்றிலும் இனிது அறிவுள்ளோரை கனவிலும் நினைவிலும் காண்பது தானே' என்பதனை பின்பற்றி பல மேதைகளை தேடி பயணப்பட்டது தான். மிலன் (Milan),  வெனிஸ்(Venice), பொலக்னா (Bologna), ரோம்(Rome) என இத்தாலியின் எல்லா நகரங்களுக்கும் பயணித்தார். பல மேதைகளின் நட்பை சம்பாதித்தார். 

தன் கைப்பட எழுதி வைத்த மிதவை குறிப்பு 
உலகம் 'யார்ரா இவன்' என்று திரும்பி பார்த்தது, 'வான்குடை மிதவை' (Parachute & glider) மற்றும் ஹெலிகாப்ட்டர் (Helicopter) எனும் செங்குத்தாக மேலெழுந்து பறக்கக்கூடிய சில அற்புதங்களை கண்டுபிடித்து காட்டிய போதுதான். சத்தியமாக நண்பர்களே, 500 ஆண்டுகளுக்கு முன்னால் இவர் பறந்து காட்டியது நிஜம் என்றே நம்புகிறது பொறியியல் உலகம்.

இந்த செவிவழி செய்தி பிரான்ஸ் (King Francis-I of France) மன்னன் காதுக்கு எட்டியது என்பதுலியர்னடோவை பொறுத்தவரை 'அதிருஷ்டலட்சுமி வாசக்கதவை தட்டியது' போல தான். பொதுவாக அந்த காலத்து மன்னர்கள் எல்லாருமே 'கூமுட்டைகள்' தானே. இவர் மட்டும் விதிவிலக்கா என்ன?,........மன்னன் பிரான்சிஸ் இவரை கூப்பிட்டு ஒரு சிலை செய்ய சொன்னார். முப்பதே நாட்களில் ஒரு 'சிங்கச்சிலை', அதுவும் முன்னும் பின்னும் சில அடி நடக்க கூடிய அச்சு அசலாய் ஒரு சிங்க உருவம். ஏற்கனவே எந்திர துறையின் (Mechanical Engineering) எல்லா பதிப்புகளையும் ஆராய்ச்சி முடிவுகளையும் கற்று தெளிந்திருந்த இவருக்கு இது ஒரு ஜுஜுபி மேட்டர். இருபது நாளில் முடித்து தந்து விட, மன்னன் விழுந்து கும்பிடாத குறை தான். 

அன்று தொடங்கியது அந்த நட்பு, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப் போல..(பண்டைய சோழ தமிழ் வரலாறு தெரியாதவர்கள், தனுஷ் சிவகார்த்திகேயன் நட்பைப் போல எனக்கொள்க...!) மதிப்பும் மரியாதையோடும் வேண்டிய பொருளுதவியும் கிடைத்தது..வேறென்ன வேண்டும்....! இனி நினைத்ததை எல்லாம் செயல்படுத்த வேண்டியது தான்...!

கால்வாய்கள், அணைகள், மாட மாளிகைகள், சிற்பங்கள், கோபுரங்கள் (Civil Engineering), கருவிகள் (Mechanical & Instrumentation engineering) என அவர் படைத்தது எல்லாமே மனித யோசைனைக்கு அப்பாற்பட்டவையே. இவரை 'பொறியாளர்' என்ற ஒரு சிறு கூட்டிற்குள் அடக்குவது என்பது அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய  துரோகம். 

இசை, நடனம், ஓவியம், கணிதம், வடிவியல், தாவரவியல், உடற்கூறியல்,ஆயுதம், நீர்மூழ்கி, ஒளியியல், நிலவியல், வேதியியல், வானியல், தாவரவியல், எழுத்து, புதைபடிமவியல், வரலாறு மற்றும் வரைபடவியல் என எல்லாத்துறையும் இவரை சொந்தம் கொண்டாடுகின்றன. எல்லாத்துறையிலும் சாதித்தது தான் இந்த மாபெரும் மனிதனின் வெற்றியும் கூட. (கிட்டத்தட்ட நம்ம கமலஹாசன் போலன்னு வெச்சிக்கலாமா...!)

ஆனால் தான் எழுதி வைத்த குறிப்புகளில் தன்னை ஒரு தொடக்கப்பொறியாளன் (Amateur Engineer) என்றே குறிப்பிடுகின்றார் லியர்னடோஏன் எதற்காக தன்னை பொறியாளன் என்று குறிப்பிடுகின்றார்?

பொறியியல் தத்துவம் (Engineering Principle) என்பது என்ன ? முதலில் திட்டமிடுதல் (Plan), பிறகு வடிவமைத்தல் (Design), அடுத்து செயல்படுத்துதல் (Execution) முடிவாக ஆக்குதல் (Construction). இதைதான் இவர் ஓவியம், சிற்பம் முதற்கொண்டு எல்லாத் துறைகளிலும் செயல்படுத்தினார், அதனாலேயே தன்னை ஒரு பொறியாளன் என்றே குறிப்பிட்டார்எல்லாவற்றிலும் வெற்றியும் பெற்றார். 


புருவம் இல்லாத மர்ம புன்னகை
உலகப்புகழ் பெற்ற 'மோனலிசா' ஓவியம் இவரை ஒரு சிறந்த ஓவியராகக்காட்டலாம். ஆனால் அது சாதாரண ஓவியம் மட்டும் இல்லை. அது ஒரு 'ஓவியப்பொறியியல்' (It's a Paint Engineering) என்பது தான் நிஜம்இப்படி அவர் ஆக்கியது எல்லாமே பொறியியல் தத்துவத்தைக்கொண்டுதான்.  



நேற்றைக்கும் இன்றைக்கும் நாளையும் எந்தப்பொறியியல் கல்லூரியில்
அடி எடுத்து  வைத்தாலும், எவருக்கும் முதலில் அறிமுகப்படுத்தப்படுவது Drafter என்னும் கருவி. இது இவர் கொடுத்த கொடையே.
இத்தாலியில் உள்ள வெனிஸ்(Venice) என்னும் நீரில் மிதக்கும் நகரம் (Floating city) இன்றும் அழியாமல் நிலைத்து நிற்க இவரது நீரியல் (Hydraulics) எனும் பொறியியல் தத்துவம் மிகமுக்கியமான அடிப்படை. அந்த நேரத்தில் இவர் கண்டு பிடித்த நீர்அழுத்தமானி (Hydrometer) எனும் கருவி பெரும் பயன்பாட்டிற்கு உள்ளானது. 

Enough...! போதும் நிறைய எழுதியாகிவிட்டது. இவர் பற்றி இணையத்தில் கோடி விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன நண்பர்களே. பார்த்தாலே போதும் படிக்க வேண்டியதே இல்லை..உங்களுக்கே புரியும் ஏன் இவர் முதல் இடத்தில் இருக்கிறார் என்று. 

தேடு...தேடித்தெளிவு பெரு, பெற்றதை பொருளாக்கு, பொருளைக்கொண்டு சாதனை செய், செய்த சாதனையை போதனையாக்கு. புதைந்து போகுமுன் விதைத்து விட்டுப்போ...!

இது தான் இந்த மனிதபுனிதன் நட்டுப்போனது. நமக்காய் விட்டுப்போனது. 

மன்னனின் மடியில் மேதை 
1519 மே மாதம் 2ஆம் தேதி, தனது 67ஆவது வயதில் உயிர் நட்பான King Francis-I இன் மடியில் லியர்னடோவின் உயிர் பிரிந்த போது தனது கற்று அறியும் தாகம் இன்னும் தீரவில்லை என்று சோகமாய் சொல்லிவிட்டுதான் செத்துப் போனார் அவர்.

குறிப்பு 1: வலமிருந்து இடது பக்கம் எழுதும் இடக்கையாளர் இவர். மிக வேகமாய் பின்னிருந்து முன் எழுதுவது ஒரு ஆச்சர்யமான கலை. (முயற்சி செய்து பாருங்களேன்...முடிந்தால்...! )

குறிப்பு 2:  ஒரு பெண்ணின் கர்பத்தில் வளரும் சிசுவின் வளர்ச்சியை தத்ரூபமாய் இவர் வரைந்தது மிகப்பெரிய ஆச்சர்யம். எப்படி அந்த வளர்ச்சியை உணர்ந்து உள்வாங்கி  வரைந்தார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

குறிப்பு 3:  வானில் இருந்து பார்க்கும் கழுகுப்பார்வையில் (Areal View) இவர் தத்ரூபமாக வரைந்த டஸ்கனி (Tuscany) நகரத்தின் வரைபடம் யாருக்குமே புரியாத புதிர். 

குறிப்பு 4: இன மொழி பாகுபாடின்றி, உலகிலேயே அதிக முறை அலசி ஆராயப்பட்டதும், விவாதப் பொருளானதும் இவரும் இவரது கண்டுபிடிப்புகளுமே. மேற்கத்திய நாகரீகத்தின் மிக விசாலமான அறிவுபடைத்த தன்னார்வ மேதையாகவே இன்று உலகம் இவரை அடையாளப்படுத்துகிறது.

குறிப்பு 5: பூமி சூரியனை மையாமாய் சுற்றி வரவில்லை (non-circular path), சூரியக்குடும்பத்தில் பூமி தனித்து இல்லை, நிலவு சூரியக்குடும்பத்தின் அங்கம் இல்லை என்று இவர் போகிற போக்கில் சொன்னவையாவும் 500 ஆண்டுகளுக்கு முன் உளறலாகவே கருதப்பட்டன.

குறிப்பு 6: அவர் தன்னை ஒரு பொறியாளன் என்றே அடையாள படுத்திக்கொண்டாலும் ஓவியத்துறையும் ரசவாதத்துறையும் இவரை துறைதந்தை (Father of the Department) என்றே போற்றுகின்றன. மற்றவர் போற்றுவதை விட ஒரு பொரியாளனுக்கு வேறு என்ன பெரிதாக  வேண்டும் ?

குறிப்பு 7: 1495-1498, இந்த மூன்றாண்டு காலமும் இவர் எந்த புதிய முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவரது ஊனும் உயிரும் ஒரு ஓவியத்தை வரைவதில் முனைப்பாய் இருந்தது. அது தான் பிற்காலத்தில் அழியாப் புகழ் பெற்ற இயேசு கிறிஸ்துவின் 'இறுதி விருந்து' (The Last Supper) என்ற ஓவியம். (The Da Vinci Code  படம் பார்த்து இருக்கீங்களா...!)


எல்லாம் சரி, இந்த பத்து வரிசையும் உண்மையிலேயே சரியானது தானா ? 

ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், கிரகாம் பெல், கலிலியோ, ஸ்டீபன் பிளெம்மிங், இன்னும் நமது பாரத தேசம் தந்த ஆரியபட்டா, ஜெகதீஷ் சந்திர போஸ், ராமானுஜம்,  இவர்கள் எல்லாம் ஏன் இந்த பத்தில் ஒன்றாக இல்லை ?

இங்கு சற்றே கூர்ந்து கவனிக்க வேண்டும் தோழர்களே. நான் வரிசை படுத்தியது பொறியாளர்களை...! விஞ்ஞாநிகளையோ அறிவியல் மேதைகளையோ இல்லை. உலகம் ஏற்றுகொண்ட அதிகம் விமர்சிக்கப்படாத முதல் பத்து பொறியாளர்கள் இவர்கள் தான்....!



மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்