இனியாவது ஒரு விதி செய்வோம்...!



செவ்வானம் மேலேயும் 
பச்சை நிறம் கீழேயும் 
சுழலும் சூரியச்சக்கரம் நடுவிலும் 
எங்கும் தெறிக்கும் தேசத்தின் 
நிறத்தை கண்ணுயர்த்தி 
சுதந்திரத்தை சுவாசிப்போம்....!

வெளிர் நிறத்தில் கீழ்வானம் 
வெளுக்கும் போது 
விடியலுக்கு விழிவைத்து 
காத்திருப்போம்...!

மொழிப்பற்றோடு இந்தியன் என்ற 
முகப்பற்றையும் ஏற்போம்...!
எழுபது ஆண்டுகளுக்கு பிறகாவது 
எழுகின்ற தேசத்தை வார்போம்...!

ரத்தம் தோய்ந்த சரித்திரத்திற்கு 
புள்ளி வைப்போம்...!
சத்தம் இல்லாமல் வேற்றுமைக்கு 
கொள்ளி வைப்போம்...!

திசையின்றி திரிந்தாலும் 
விசையின்றி பறந்தாலும் 
தேனீக்கள் துயில் கொள்வது 
தேன்கூட்டில் தான்...!
நல் இதயம் தோள் சாய்வது 
தாய்நாட்டில் தான்...!

ஏசியும் பேசியும் பிரித்தாலும் 
தேசியம் மட்டும் நினைவிருக்கும்...!
புனிதம் சொல்லி எரித்தாலும் இறுதியில் 
மனிதம் மட்டும் நிலைத்திருக்கும்...!


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

No comments:

Post a Comment