எழுத்தால் மாயம் புரிந்த வித்தகர்கள்...2


இந்தியாவில் பிறந்து, இந்திய சூழலில் வளர்ந்து, திடுமென லண்டனுக்கு வந்துவிட்ட ஒரு சிறுவனின் மனநிலை எப்படி இருக்கும் ? எரிக் (Eric)க்கு முதலில் ஒன்றும் புரியவில்லை....!

ஒரு பிரிட்டிஷ் அரசாங்க ஊழியரின் மகனான தனக்கு இந்தியாவில் கிடைத்த மரியாதை இங்கு ஏன் கிடைக்கவில்லை ?  

அங்கு தான் பார்த்த ஏழை மக்களைப்போல் இங்கே பார்க்க முடியவில்லையே ஏன் ?

எல்லோரும் ஏன் யந்திரங்களை போல ஒரு கட்டுப்பட்ட  வாழ்க்கை வாழ்கிறார்கள் ? 

ஏன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன்னைப் பற்றியும் தங்களது பரம்பரை பற்றியும் இப்படி பீற்றிக்கொள்கிறார்கள் ?

ஏன்..ஏன்..ஏன்...ஐய்யோ.... கடவுளே...!

முற்றிலும் மாறுபட்ட இரு வேறு சூழலை அவன் மனம் ஏற்கவில்லை..உடலும் மனமும் சோர்ந்து போயிற்று....!

அவன் தன்னை தனிமை படுத்திக்கொண்டான்..!

தனக்குள்ளே கற்பனைகளை, கதைகளை, அதன் காட்சிகளை உருவாக்கி கொண்டான்..!

கதை மாந்தர்களோடு பேசத்  தொடங்கினான்..! 

பிறகு...எழுத தொடங்கினான்...!

1914இல், அவன் எழுதிய கவிதை உள்ளூர் செய்தித்தாளில் வெளி வந்த போது அவனுக்கு வயது 11. முதல் அங்கீகாரம்...!

1922இல் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி சேர காசு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பொழுது அவன் கண்களில் பட்டது அந்த விளம்பரம்..! 

'வாருங்கள்..இளைஞர்களே..! இந்தியா இம்பீரியல் போலீஸ் படை உங்களை வரவேற்கிறது..! நல்ல உணவு, தங்க இடம்..குறைந்த நேர வேலை..நல்ல ஊதியம்..!'

விட்ட குறையோ, தோட்ட குறையோ..இந்தியா என்ற பெயர் அவனை சுண்டி இழுக்க..உடனே சேர்ந்து விட்டான்...! ஆனால் அவர்கள் அவனை தரை இறக்கி விட்ட இடம் பர்மா...! 

5 வருட போராட்ட வாழ்விற்குப் பிறகு 'இனி பொறுப்பதில்லை' என வேலையை உதறி விட்டு லண்டன் திரும்பிய போது, எழுதும் உத்வேகம் மட்டும் அவனுக்குள்..மன்னிக்கவும்..அவருக்குள் தீயாய் எரிந்து கொண்டிருந்தது...!

என்ன எழுதுவது..? 

அந்த சமயத்தில் வெளி வந்து கொண்டிருந்தவை எல்லாம் பெரும்பாலும் ஆங்கில அரசுமுறை பற்றியோ, ஆங்கில நாகரீகம் பற்றியோ, போர் மற்றும் வாழ்வு முறை பற்றியோ தான் சொல்லிக் கொண்டிருந்தன...! 

ஆகவே..எரிக் எழுதுபொருளாக எடுத்துக் கொண்டது.......ஏழ்மை மற்றும் வறுமை....அது கொடுக்கும் வலி ....!

1933இல் அவர் எழுதிய முதல் நாவல் புத்தக வடிவில் வெளி வந்தது...! 

மற்ற புத்தகளைப் போல் இதுவும் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களின் வாழ்க்கை முறையை தான் விளக்கி சொன்னது...! ஆனால்...அரசபரம்பரை சார்ந்தவர்களை பற்றியோ..கோமகன்களைப் பற்றியோ அல்ல...!

லண்டனிலும்..பாரிஸிலும்...கையில் காசு இல்லாமல் பிழைப்பு தேடும் பரதேசிகளின் நிரந்தரமில்லாத இருப்பைப் பற்றி (transient existence) பொட்டில் அடித்தாற்போல் சொன்னது அந்தப் புத்தகம் ...! 

குறிப்பாக, அரசர்களும் முதலாளிகளும், உழைப்பை மட்டும் உறிஞ்சி விட்டு, வெளி உலகத்திற்கு காட்டாமல் யாரை மறைத்து வைத்திருந்தார்களோ அந்த குடிமக்களைப் பற்றி...!

எரிக்கிற்கு தெரியும்..! கோமகன்களை காறி உமிழும் இந்தக் கதைக்கு தன் குடும்பத்திற்குள்ளேயே எதிர்ப்பு வரும் என்று...! ஆகவே புனைப்பெயரில் புத்தகத்தை வெளியிட்டார்...!

இது தான் 'எரிக் ஆர்த்தூர் பிளேர் (Eric Arthur Blair)', என்ற மனிதர் 'ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)' ஆன கதை. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் புத்தகமாக கருதப்படும் அந்தப் புத்தகத்தின் பெயர் 'Down and Out in Paris and London, published in 1933'

                                                     9. George Orwell (A.D 1903 - 1950)

'ஆர்வெல்'லுக்கு, முதல் புத்தக வெளியீட்டிலேயே நல்ல தொடக்கமும் வாசக வட்டமும் உருவாகி இருந்தது.

கொஞ்சமும் தாமதிக்காமல் அடுத்த ஆண்டே அவரது இரண்டாம் புத்தகமும் வெளிவந்தது. 'Burmese Days (பர்மாவில் சில நாட்கள்) ' என்ற அந்த புத்தகம் பர்மாவிலும் இந்தியாவிலும் நடந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கறுப்புப் பக்கங்களை கிழித்துக் காட்டியது.

உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு நம்மையே குற்றம் சொல்லும் 'ஆர்வெல்' என்னும் தலைவலியை எப்படி சமாளிப்பது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் மண்டை காய, புத்தகமோ மக்களிடையே பரப்பப்பப்பாக விற்பனை ஆனது.

அதற்கு பிறகு இவர் ஏன் ஸ்பெயின் (Spain) போனார் ?  எதற்கு உள்நாட்டு போரில் பங்கு கொண்டார் ? ஏன் ஸ்பெயின் அரசாங்கத்தால் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு லண்டனுக்கே  விரட்டி அடிக்கப்பட்டார்  என்பதெல்லாம் நமக்கு வேண்டாத விஷயம். ஆனால் போரில் அவர் கழுத்திலும் தோளிலும் கடுமையாய் தாக்கப்பட்டார்.  அதன் காரணமாக நீண்ட நெடிய புத்தகங்களை அவரால் எழுத முடியாமல் போயிற்று.

சிறுகதைகளும், கட்டுரைகளும், விவாத விளக்கங்களும் தான் அவரால் எழுத முடிந்தது.  BBC இல் பணியாற்றி விட்டு, ஒரு சோஷலிச செய்தித்தாளுக்கு ஆசிரியர் ஆன போது அவர் உடல்நிலை மிக மோசமாகி  இருந்தது.

தனது இறுதி நாட்கள் நெருங்குவது அவருக்கு தெரிந்தே இருந்தது. சாவின் வலியை விட தான் இன்னும் பெரிதாய் சாதிக்கவில்லை என்ற வலியே அவரிடம் மிஞ்சி இருந்தது.

1943இல் , தன்னுடைய 40ஆவது வயதில், தான் பார்த்துக்கொண்டு இருந்த அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு, எழுதுவதையே முழு நேர தொழிலாய்  கொண்டார்.

2 வருட உழைப்பில், அதுவும் வியாதிகளின் கடுமையான தாக்கத்தின் இடையில் ஆர்வெல் வெளியிட்ட அந்த புத்தகம் தான் உலகப்புகழ் பெற்ற 'Animal Farm' (விலங்குப் பண்ணை ) published in 1945.

சோவியத் யூனியனின் (இன்றைய ரஷ்யா ) சித்தாந்தத்தை கிண்டலடித்து வெளி வந்த அந்தப் புத்தகத்தின் முக்கிய பாத்திரங்கள் பண்ணையில் உள்ள இரண்டு பன்றிகள்.  ஒன்று ' ஜோஸப்  ஸ்டாலினையும்  (Josef Stalin)', இன்னொன்று 'லியோன் ட்ரொஸ்கியையும் (Leon Trotsky)' பிரதிபலிப்பதாக கருதப்பட்டது.

1945ஆம் வருடத்தில் தான் ஸ்டாலின், நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். 'ட்ரொஸ்கி' ஸ்டாலினை விட்டு பிரிந்து போய், அவரை கடுமையாய் தாக்கிக் கொண்டிருந்தார். கம்யூனிசமும் மார்க்சிஸமும்  மிக தீவிரமாக விவாதிக்கப்படட்டு கொண்டிருந்த நேரத்தில் தான்..அந்த இரண்டு பன்றிகளும் இவ்விரு தத்துவங்களையும் துவைத்துக் காயப்போட்டன அந்தப் புத்தகத்தில்.

மாற்றத்துக்கான சித்தாந்தங்கள் என்று விவாதிக்கப்பட விஷயங்களை விலங்குப் பண்ணையோடு ஒப்பிட்டு ஆர்வெல் செய்த நையாண்டி, அவருக்கு உலகபுகழையும், செல்வத்தையும் தேடிக் கொடுத்தது.

ஆர்வெல்லின் அடுத்த குண்டு என்ன ? எதைப்பற்றி ? என்று ஐரோப்பிய சமூகம் ஆவலாய் காத்துக்கிடக்க ஆரம்பித்தது.

' உங்களின் அடுத்த படைப்பு எதைப்பற்றி ?'

'இப்போது எதுவும் கூற முடியாது. கருப்பொருள் கிடைத்து விட்டது..அதை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்..!

எப்போது வெளியிட யோசித்திருக்கிறீர்கள் ?

நான் சாவதற்குள்...!

நாவலைப் பற்றி ஏதாவது ஒரு துப்பு கொடுங்களேன்?

'1984'.

பேட்டி  கண்டவருக்கு ஒன்றும் புரியவில்லை, அவருடைய கற்பனைக்கு எதுவோ எழுதிவிட்டு போக, என்னவென்று புரியாமல் குழம்பியது உலகம்.

1949ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் பெயர் '1984'.

'ஐரோப்பாவின் கடைசி மனிதன்' என்பது தான் முதலில் வைத்த பெயர். பின்பு '1984' என்று மாற்றி அமைக்கப்பட்டது.

1923-2005 வரை வெளிவந்த புத்தகங்களில், அதிகம் படிக்கப்பட்ட புத்தகங்களின் வரிசையில் 6ஆவது இடத்தைப் பிடித்த சிறப்புக்குரியது அந்தப் புத்தகம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பல இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டிய அந்தப் புத்தகத்தில் தான் உலகப்புகழ் பெற்ற ' THE BIG BROTHER IS WATCHING YOU' என்ற வாசகம் இடம் பெற்றது.

சொல்லப்போனால், மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அந்த நாவல் வெளிவந்தது. தனிப்பட்ட சொந்த எண்ணங்களும் வாழ்க்கையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் போனால், விளையும் விபரீதங்கள் என்னவாக இருக்கும் என்று தெளிவாக கோடிட்டு காட்டினார்  ஆர்வெல்.

உண்மைகளை ஆணித்தரமாய் சொன்னதால், அரசாங்கங்களும் விளைவுகளை புரிந்து கொண்டு, மக்களை கண்காணிக்கும் நோக்கத்தை தளர்த்தின. இது  'ஆர்வெல்' என்கிற ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

நினைத்ததை சாதித்து விட்டதாக எண்ணினாரோ என்னவோ...அடுத்த வருடமே மரணம் அவரது எழுத்துப்பணிக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது.

இன்றும் உலக வாசிப்பாளர்களை பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கும் 'ஆர்வெல்' லின்  எழுத்துகளுக்கு மட்டும் என்றுமே முற்றுப்புள்ளி இல்லை...!

படித்தே ஆகவேண்டிய 'ஆர்வெல்' லின் உலகப்புகழ் படைப்புகள்:

1. 1984
2. Animal Farm
3. Shooting an Elephant
4. Down and Out in Paris and London

முதல் இரண்டு புத்தகங்களையும் கண்டிப்பாக தவற விடாதீர்கள், உங்களிடம் வாசிப்புத்தாகம் இருந்தால்...!

இணையத்தில் தேடினால் ஆர்வெல்' லின் அனைத்துப் படைப்புகளும் கிடைக்கும் இலவசமாக....!

********************************************************************************

மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு மாயம் புரிந்த வித்தகரோடு....!

அதுவரை...!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

No comments:

Post a Comment