ஆயா சுட்ட வடையை முதலில் அமுக்கியது யார்? Part 3

நிலவிற்கு பயணம் செய்யப் போகும் முதல் மனிதன் யார்...ரஷ்யனா இல்லை அமெரிக்கனா ?

இதுவரை நடந்த எல்லா போட்டியிலும் ரஷ்யா தான் முன்னணியில் இருந்தது. 

Quarter-Final, Semi Final, Eliminator எல்லாம் முடிந்து, சூடான வடையை அப்படியே லபக்கும் ஆவலோடு முந்திப் போனது என்னவோ ரஷ்யா தான்.

GRAND-FINALEகு வந்தாயிற்று.

FINALல் நடந்தது தான் சற்றும் எதிர்பார்க்காத, மிகவும் சுவாரஸ்யமான கதை...!

***********************
5.  'மாத்தி யோசி மாமே'

லூனா-9 மற்றும் சர்வேயர்-1 இரண்டும் நிலவில் போய் அமர்களமாய் தரை இறங்கியதை பார்த்தோம் அல்லவா...ஆனால் லூனா-9 ஒரு தோல்வி project என்பது தான் ஒரு சோகமான விஷயம்.

சர்வேயர்-1 போல் அல்லாமல் லூனா-9க்கு கொடுக்கப்பட்டிருந்த கூடுதலான வேலை....நிலவில் தரை இறங்குவது மட்டும் அல்லாமல் அங்கே கொஞ்சம் இளைப்பாறி அப்படியே சுற்றி பார்த்து விட்டு திரும்ப பூமிக்கு வரவேண்டும். வரும்போது நிலவின் கற்களையும் கொண்டு வர வேண்டும்.

ஆனால், லூனா-9 மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் செத்துப் போனது. காரணம்...பாட்டரி தீர்ந்து போனது தான்.

எவ்வளவு தான் charge ஏத்தி அனுப்பினாலும் ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. நூறு நாட்களுக்கு தேவையான பாட்டரி charge, நிலாவில் ரெண்டு நாள் கூட வரவில்லை. இதை Charge Dissipation என்று சொல்லுவார்கள். தமிழில் 'விரயமாதல்'னு சொல்லலாமா..லாமே...!

கிளம்பும் போது முரட்டு காளையாய் சீறிப் பாய்ந்து போகும் லூனா, நிலவில் தரை இறங்கியதும் தொண்டுக் கிழவனாகி கொஞ்ச நாள் இழுத்துக்கொண்டே இருந்து, சீக்கிரமே செத்துப் போய் விடுகிறது. 

இதற்கு மேல் பாட்டரி எடை கூடினால் விண்கலம் மேலே எழும்பாமல் இங்கேயே படுத்து விடும் நிலை...!

இந்த தோல்வி லூனா-13 வரை தொடர்ந்தது, என்ன இன்னும் கொஞ்சம் அதிக நாள் சுத்திப் பாக்க முடிஞ்சது....அவ்வளவு தான். 

'என்னடா இது, நல்லா போகுது, சூப்பரா தரை இறங்குது, சுத்தியும் பார்க்குது, ஆனா திரும்ப வர மாட்டேங்குதே...! இது கல்லு (Rock Samples) கொண்டு வந்தாத்தானே மேற்கொண்டு ஆராய்ச்சி செஞ்சு, மனிதன் அங்கே போகலாமா வேணாமான்னு முடிவு பண்ண முடியும், இந்த பாட்டரி தொல்லையை எப்படி சமாளிக்கிறது ?' என்று ரஷ்யா மண்டை காய்ந்து கொண்டிருந்தது.

அடுத்த தேசத்துக்கு போகவே எவ்வளவு யோசிக்கிறோம்...தட்ப வெப்ப நிலை, காற்று, தண்ணீர் அப்படின்னு நெறைய விஷயம் இருக்கும் போது, முன் பின் யோசிக்காம நிலாவுக்கு போய்விட முடியுமா...? கொய்யால...அங்க காத்தே கெடையாதே...! தண்ணீர்...சுத்தம்...! 

அதுக்கு தான் அங்கிருந்து சில கல்லு கொண்டு வந்தா இங்கே அதை பிரிச்சு மேஞ்சு பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்...ஆனா லூனா இப்படி சூப்பரா சொதப்புதே...!!

அமெரிக்கர்கள் இதை எல்லாம் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு நடக்கும் விஷயம் நன்றாக தெரிந்து தான் இருந்தது. சர்வேயர்-2வை அனுப்பி பார்த்து தெரிந்து கொண்டார்கள்.

"பூமியில் நூறு நாட்களுக்கு மேல் வரும் பாட்டரி, நிலவில் ரெண்டு நாள் கூட வரவில்லை... ஏதோ ஒன்று நிலாவில் உட்கார்ந்து கொண்டு பாட்டரியில் உள்ள எல்லா Chargeஐயும் அப்படியே ஸ்வாஹா செய்கிறது....அதனால் தரை இறங்கும் விண்கலம் அங்கிருந்து கிளம்ப சக்தி இல்லாமல் செத்துப் போகிறது..! என்ன செய்யலாம்...?

நிச்சயம் நிலவின் மாதிரிகள் வேண்டும்..அதை ஆராயாமல் மனிதனை நிலவுக்கு அனுப்புவது என்பது தற்கொலைக்கு சமம்.

சாப்பிடாமல், தூங்காமல் ரூம் போட்டு யோசித்ததில் ஒரு சின்ன பொறி தட்டியது அமெரிக்க விஞ்யானிகளுக்கு....இப்படி செய்தால் என்ன ?

இது வரை ரஷ்யா என்ன செய்ததோ அதையே பின் பற்றி வந்த அமெரிக்கா கொஞ்சம் 'மாத்தி யோசி மாமே' என ஆரம்பித்தது இங்கிருந்து தான்.

******************************************

6. நீயா நானா 

1967, ஏப்ரல் 17ஆம் தேதி, கோலாகலமாக உலகத்துக்கே 'பாத்துக்கோ பாத்துக்கோ' என்று சொல்லிவிட்டு சர்வேயர்-3 ஐ விண்ணில் செலுத்தியது அமெரிக்கா.

இப்போது ரஷ்யர்கள் காதில் புகை வர, சர்வேயர்-3 இன் வருகைக்காக பல்லை கடித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஒரு நாள்...ரெண்டு நாள்..இப்படியே பத்து நாட்கள் போய் விட்டன. ஆனால் சர்வேயர்-3 திரும்பி வரவே இல்லை.

திரும்பி வரவில்லை என்றால் திரும்பி வரவே இல்லை....! போங்கடா நீங்களும் உங்க சர்வேயரும்' என்று கடுப்படித்துவிட்டு ரஷ்யா மறுபடி பாட்டரி பிரச்சனைக்கு தீர்வு தேடப் போய்விட, அமெரிக்கா தனக்குள்ளேயே ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தது.

அமெரிக்காவின் மாத்தி யோசி Concept..அதாங்க கருத்து...இது தான்...!

சர்வேயர்-3 உண்மையிலேயே பூமிக்கு திரும்பி வருவதற்கான எந்த புதிய தொழில் நுட்பத்துடனும் வடிவமைக்கப் படவில்லை. மாறாக, உயிரோடிருந்த பத்து நாட்களும் நிலவை நன்றாக சுற்றி...விதவிதமான கற்களை எல்லாம் ஆராய்ந்து, ஆராய்ச்சியின் முடிவுகளை மட்டும் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. ஒரு mini Laboratory (சிறிய ஆராய்ச்சி கூடம்) ஒன்றை அதோடு இணைத்து அனுப்பியது தான் அமெரிக்கர்களின் சாமர்த்தியம்.

'இங்கே கொண்டு வா ' (Get It Here) என்கிற ரஷ்ய தத்துவத்தை தொடராமல் 'அங்கேயே வெச்சு செய்' (Do It There) என்பது தான் அமெரிக்கர்கள் மாத்தி யோசித்த விஷயம்.

சர்வேயர்-3 அனுப்பிய ஆராய்ச்சி முடிவுகள் லட்டு லட்டாக வந்து விழுந்தன. பாட்டரி பிரச்சனைக்கு சுலபத்தில் விடை கண்டு கொண்டார்கள். 

பாட்டரி செல்களில் (Battery Cells), நிலவில் இருக்கும் புலப்படாத ஏதோ ஒரு பொருள் (Unknown Substance) கூடி செய்யும் வேதியல் எதிர்வினையே (Chemical Reaction) காரணம். 

பாட்டரி செல்களை வேதியல் எதிர்வினை நடக்காதவாறு பாதுகாப்பாக வைத்து விட்டால்...BINGO...!

ஆனால், அமெரிக்கர்கள் அவசரப்படவே இல்லை..இது வரை எந்த உயிரினமும் போகாத இடம். என்ன ஆகும் எது ஆகும் என்றெல்லாம் தெரியவே தெரியாது. போக வேண்டும் தான். தடம் பதிக்க வேண்டும் தான்..அதையெல்லாம் விட மிக முக்கியம், சிறு சேதாரம் கூட இல்லாமல் திரும்பி வர வேண்டும்...!

அடுத்த 5 மாதத்திலேயே சர்வேயர்-5 நிலவுக்குப் போனது. இதுவும் திரும்பி வரவே இல்லை. ஆனால், சற்றே பெரிய ஆராய்ச்சி கூடத்தோடு, டிவி, கேமரா எல்லாம் கொண்டு போய் நிலவின் மேற்பரப்பை நன்றாக உழுது ஆராய்ந்து முடிவுகளை தொடர்ந்து அனுப்பியது. 'Alpha Particles Decaying Technique' என்ற புதிய ஆராய்ச்சியை செய்து 'மனுஷங்க வர்லாம் ரைட்' என்று விசிலடித்து .

இப்பொழுதும் அமெரிக்கர்கள் அவசரமே படவில்லை. இன்னும் கொஞ்சம் ஆராயலாம் என்றே நினைத்தார்கள். அவர்களுக்கு தெரியும், ரஷ்யர்கள் பாட்டரி விஷயமாக காய்ந்து கொண்டிருகிறார்கள், மேலும் அமெரிக்காவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை..சர்வேயர் எல்லாம் படு தோல்வி என்று நினைத்துக் கொண்டிருகிறார்கள். ஆகவே இப்போது ரஷ்யாவால் ஒன்றும் புடுங்கி விட முடியாது..!

எங்கே ஆமை வரபோகிறது என்று முயல் தூங்கிய கதை தான்...! 

அடுத்து, லூனார் ஆர்பிடர்-5 நிலவின் வட்டப் பாதையில் பயணம் செய்து, தரை இறங்குவதற்கும் திரும்பி கிளம்புவதற்கும் (Landing & Takeoff) தோதான இடங்களை கண்டுபிடித்துச்  சொல்லியது.

1968, டிசம்பர் 21ஆம் தேதி, யாருக்கும் சொல்லாமல் மூன்று மனிதர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் அப்போலோ-8 (Apollo-8) நிலவை நெருங்கியது. 'Frank Bormann, James Lovell, William Anders' என்ற அந்த மூன்று பேர்களும் மூன்று நாள் பயணத்திற்கு பின் நிலவின் வட்டப் பாதையை அடைந்தார்கள். 20 மணி நேரம் சுற்றி வந்து பல ஆராய்சிகள் செய்து நெறைய புகைப்படங்கள் எடுத்து அமைதியாக பூமிக்கு திரும்பி விட்டார்கள், நிலவில் தரை இறங்காமலேயே.

ஏன் தரை இறங்கி இருக்க முடியாதா..? நிச்சயம் முடியும்..ஆனா அதெப்படி பொசுக்குனு போய்  இறங்கறது...ஒரு நாள், நட்சத்திரம் பார்க்க வேணாமா ?

கொஞ்சம் கூட நேரம் கடத்தாமல் உடனே நிலவில் தரை இறங்கும் போது அணிவதற்கு என்று ஒரு பிரத்யேக உடுப்பு தயாரித்தார்கள் (Special  Suite), பிறகு புவி ஈர்ப்பு இல்லாத இடத்தில் எப்படி நடப்பது என்று பயிற்சி எடுத்தார்கள். கூடவே இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் விதமாக ஒரு விண்வெளி சிற்றுந்தும் (Two Seated Spacecraft Bus, to be easily removed from primary shuttle) தயாரித்தார்கள். இதையெல்லாம் அப்போல்லோ-9, 10இல் அனுப்பி பரிசோதித்தும் விட்டிருந்தார்கள்.

எல்லாம் தயார்..! 

முகூர்த்த தேதி குறிக்க வேண்டியது தான்.....பார்த்துடலாம் நீயா நானா ??


7.சொல்லி அடித்த கில்லி 

இப்போது தான் ரஷ்யா தூக்கம் கலைந்து, முழித்துப் பார்த்தது. கடைசீயாக அனுப்பிய லூனா -14லும் சொதப்பிவிட்டது. 

'என்னாது..அவுனுங்க அனுப்பின அப்போல்லோ எல்லாம் திரும்பி வருதா..வர முடியாதே..இந்த அமெரிக்கனுங்க என்ன ஏதாவது மந்திரம் தந்திரம் செய்றாங்களா ? என்று கூர்ந்து கவனிக்கக் தொடங்கினார்கள்.

அப்போல்லோ-10 திரும்பி வந்த பிறகே 'நடந்தது என்ன' என்பது  ரஷ்யர்களுக்கு உரைத்தது. அலறி அடித்துக் கொண்டு லூனா-15ஐ உடனே தயார் செய்தார்கள். பாட்டரி பிரச்சனைக்கு ஒரு விதமாக ஒரு வழியும் கண்டுபிடித்திருந்தார்கள்.

1969, ஜூலை மாதம் 17ஆம் தேதி ஏவப்பட்ட லூனா-15, மூன்று நாட்கள் பயணித்து சரியாக 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதையை சென்றடைந்தது. 

ரஷ்ய விஞ்யானிகள் தீவிரமாக லூனா-15இன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டே இருந்தார்கள். எல்லாம் திருப்தியாக இருக்கவே, பூ மாதிரி தரை இறங்குமாறு அதன் கட்டுபாட்டு அறைக்கு (On Board Control System) கட்டளை போனது.

அதிக பட்ஷம் நான்கே நிமிடங்கள்...! லூனா-15 ஒரு ஏவுகணை போல் நிலவில் மோதி வெடித்ததை ஒட்டுமொத்த ரஷ்யக் கூட்டமும் தலையில் கை வைத்துகொண்டு வேடிக்கை பார்த்தது.

கொஞ்சம் இருங்க...! என்ன நாள் அன்னைக்கு ??

ஜூலை மாசமா...20ஆம் தேதியா, 1969 ஆவது வருஷமா ?

இந்த நாள் உலக சரித்திரத்தில் இடம் பெற்ற நாளாச்சே..!

அதே நாள்....ஒரு 13 மணி நேரத்துக்கு முன்னால...!

திருவாளர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) என்ற அமெரிக்கர், முதன் முதலாக தனது இடது காலை எடுத்து, நிலவின் மேற்பரப்பில் அழுத்தமாக வைத்து, பிறகு ஒரு அமெரிக்க கொடியையும் நட்டு விட்டு...

சற்றே ஆசுவாசமாக 'ஆயா சுட்ட வடையை' சுவைத்துக் கொண்டிருந்தார்...!

'நான் எடுத்து வைத்தது ஒரு சிறிய அடி தான்..ஆனால் இது மனித இனத்திற்கு அமைந்த ஒரு மிகபெரிய உச்சம்..!" என்று அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை....!





மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார் 

No comments:

Post a Comment