எல்லாம் கடந்து போகும்(Nov 2016)....!

மோடிஜியின் உள்நாட்டு துல்லியத் தாக்குதல் 

நிச்சயம் இது ஒரு அதிரடியான, யாருமே சற்றும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு. இதன் மூலம் மோடியை மேலும் நாட்டை காக்கும் நாயகனாக விளம்பரப்படுத்தும் ஊடக விஷயங்கள் அதிகப்படுத்தப்பட்ட அதே வேளையில், பொது மக்களிடமிருந்து புகைச்சல்கள் வராமல் இல்லை. படித்தவர்கள் இந்த அறிவிப்பின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டது (??) போல் அமைதியாக இருக்க, பாமரர்கள் தான் பாவம் திண்டாடுகிறார்கள். 

மேம்போக்காக பார்த்தல் நிச்சயம் இது ஒரு கசப்பு மருந்து. கருப்பு மற்றும் கள்ளப் பணவீக்கத்தை கட்டுப்படுத்தப்போகும் மருந்து. ஆனால், கொஞ்சம் உள்ளூர நிதானமாக ஆராய்ந்தால்.....?

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் கருப்பு பண மதிப்பு 14 லக்ஷம் கோடி. என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் (2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அறிவித்த கள்ளப்பணத்தின் மதிப்பு 3.5 லக்ஷம் கோடி ருபாய்). இதில் 77% கள்ளப்பணம் வெளிநாடுகளில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. (மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூரில் மட்டும் 52%). எனவே உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவது 13% மட்டுமே. அதில் பணமாக பதுக்கப்பட்டிருப்பது இன்னும் குறைவு. ஆகவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிப்பது, பெரும்பாலான கருப்பு பணத்தை வெளிக்கொணர உதவப்போவதில்லை.

இந்திய பொருளாதாரத்தை சிதைக்கவும், தீவிரவாத செயல்களுக்கு செலவிடவும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் வழியாக இந்திய சந்தையில் புகுத்தப்பட்டிருக்கும் கள்ள நோட்டுகளின் மதிப்பு சுமார் 30 முதல் 40 ஆயிரம் கோடிகள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவை முற்றிலும் அழிந்து போகும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் இருக்கும் இவை பாமர மக்களிடம் இருந்தால் அதற்குண்டான நஷ்டம் அவர்கள் தலையில் தான் விடியும்.

இந்தியாவில் கருப்பு பணம் என்பது 63% தொழிலதிபர்களிடமும், 37% அரசியல்வாதிகளிடமும் தான் இருக்கிறது. இவர்கள் யாரும் 20% மேலான கருப்பு பணத்தை உள்நாட்டில் பதுக்கி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்த அறிவிப்பால் வேறு எந்த பயனுமே  இல்லையா ? உண்டு..நிச்சயம் உண்டு...!

1. இந்தியாவில் இன்று வரை 67% வியாபார பரிவர்த்தனைகள் நேரடி பணம் மூலமாகவே நடைபெறுகின்றன. இதில் அரசாங்க கணக்கில் வராதவை மட்டும் 35% மேல். இந்த சில வாரங்களில் கணக்கில் வராமல் கொடுக்கப்பட்ட, வாங்கப்பட்ட உள்நாட்டு வியாபார பரிவர்த்தனையில் சிக்கிக்கொண்ட அணைத்து நோட்டுகளும் மாற்றும் வழி தெரியாமல் முடங்கிப்போகும். குறிப்பாக கட்டுமானம், கல்வி, பொழுதுபோக்கு துறைகளின் கணக்கில் வராத செயல்பாடுகள் சில காலத்துக்கு முடங்கிப்போகும். இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

2. இந்திய மக்கள் பொதுவாக, வருமுன் சுதாரிப்போம் என்றில்லாமல் பட்ட பின்பே தெளிந்திடும் வர்கம். காசாக வைத்திருப்பதை விட வங்கியில் கணக்காக வைத்திருப்பதன் பாதுகாப்பை இப்போது நன்கு உணர்ந்துவிட்ட மக்கள் இனி Cashless Transaction  எனப்படும் முறைக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்வார்கள். இதன் மூலம் வருங்காலத்தில் கருப்பு பணத்தின் புழக்கத்தை பெருமளவு தடுக்க முடியும்.

3. வங்கி கணக்கும், வங்கி மூலம் பணபரிவர்தனையும் பெருகும் போது, அரசாங்கத்திற்கு தடுக்கப்பட்ட வரி பெருகி, பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

4. இந்த விஷயத்தில், தொழிலதிபர்களை விட, அரசியல்வாதிகளின் பாடு தான் திண்டாட்டம். தேர்தல் மற்றும் மாநாடு செலவுகளுக்கு என பதுக்கி வைக்கப்பட்ட கணக்கில் இல்லாத நிதி அனைத்தும் கோவிந்தா.

பரபபான அரசியல் நிகழ்வுகள் மூலம் தங்கள் வாக்கை நிர்ணயிக்கும் பெருவாரியான இந்திய சமூகம் இந்த அறிவிப்பை சாதகமாகவே பார்க்கிறது. இது ப.ஜ.க  விற்கு ஒருவிதத்தில் வெற்றியே.

45ஆவது அமெரிக்க கழுகு   

உள்நாட்டு அதிரடிக்கு கொஞ்சம் கூட குறையாத வெளிநாட்டு அதிரடி டொனால்ட் டிரம்ப் பின் வெற்றி. அமெரிக்க தேர்தலை பின்பற்றாமல் இருந்தவர்கள் கூட ஆச்சர்யப்படும் வெற்றியாக இருக்கிறது இவரது வெற்றி.

உலகமே ஹிலாரியை முதல் அமெரிக்க பெண் ஜனாதிபதியாக வரவேற்க தயாரக இருந்த வேளையில்.......என்னதான் ஆச்சு?

வேறொன்றும் இல்லை.........! அமெரிக்கர்கள், நாங்களும் சராசரி மனிதர்கள் தான், எங்களுக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு...நாங்களும் பல ஆண்டுகளாக அரசாங்கத்தை நம்பி மோசம் போனவர்கள் தான் என்று நிரூபித்துளார்கள். அவ்வளவே....!

உலகத்தை காக்கப்போகும், கட்டுப்படுத்தும் பெரியண்ணன் வேண்டாம்..அமெரிக்க வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் வீட்டுத்தலைவன் போதும்..அது தான் இந்த தேர்தலில் அவர்கள் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கும் விஷயம். 

ஐய்யகோ...மோசம் போய்விட்டோமே...என்று ஒரு சாரார் அழுது புலம்பினாலும், அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, பதவி ஏற்க தயாராகிவிட்டார்..டிரம்ப்...! 

இந்த படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும். மத்திய அமெரிக்கா முழுவதும் டிரம்ப் வழித்துக்கொண்டு போய்விட்டார். 'Blue Collar Americans' என்றழைக்கப்படும் சராசரி அமெரிக்க குடிமக்களின்  ஒட்டு மொத்த ஆதரவும் ட்ரம்ப்க்கே. பணக்காரர்கள் மற்றும் வந்தேறிகளின் கூடாரமான இடது பக்கமும், வலது பக்கமும் ஹிலாரிக்கு போனது. அநேகமாக ஊடக கணிப்புகள் பொய்த்துப்போன அமெரிக்க தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். அமெரிக்க மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள், தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதற்கு தகுதியானவர் தானா ?

எந்த அரசியல் பின்புலமும் இல்லாத கொழுத்த பணக்காரர் தான் இந்த டிரம்ப். பல நேரத்தில் கொடியவராகவும், சில நேரத்தில் கோமாளியாகவும் சித்தரிக்கப்பட்ட இவர்...பெரும்பாலான மத்திய அமெரிக்க கண்களுக்கு நாயகனாக தெரிந்தது வியப்பு தான்...!

அமெரிக்க ஊடகம்..அமெரிக்கர்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டுக்கொண்டதாக கடுப்பேற்றினாலும்...பெரும்பாலான அமெரிக்கர்கள் இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் பிதற்றினாலும்...வெற்றி..வெற்றி தான்...!

கவலைக்குரிய விஷயம் என்ன வென்றால்...போகிற போக்கில் டிரம்ப் கொளுத்திப் போட்ட சில வாக்குறுதிகள், ஜனாதிபதி ஆனபின்பு அவரால் கண்டுகொள்ளப்பட்டு விடுமோ என்கிற பயமே...!

1. தெற்கில் மெக்ஸிக்கோவை பிரிக்க நீங்க நெடிய சுவர்...அதுவும் மெக்ஸிகோவின் செலவிலேயே 
2.  வெளிநாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவிற்கு போகும் வேலைவாய்ப்புகளை தடுப்பது 
3. முறையான அனுமதி இன்றி அமெரிக்காவில் தங்கி இருக்கும் வந்தேறிகளை வெளியேற்றுவது 
4. முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதை தடுப்பது 

இன்னும் இதுபோல் நிறைய்ய...!

பூமாலை கொடுக்கப்பட்டு விட்டது...! கொடுக்கப்பட்டது யானையின் கையில் என்றால் அது கோவிலுக்கு போகும்...! குரங்கின் கையில் என்றால் ??

டிரம்ப் யானையா குரங்கா ? போகபோகத்தான் தெரியும்....!

வேண்டாமே வீண் புகழ் 

அற்புதம் பாரீர்...! 1330 குறளில் உலகை அடக்கிய வள்ளுவர், ஒவ்வொருவரின் வாழ்க்கை கணக்கையும் அதே 1330 இல் அடக்கி விட்ட அதிசயம் பாரீர்...!

1330 இல் இருந்து உங்கள் சரியான வயதை கழியுங்கள். அதோடு 686 ஐ கூடினால், நீங்கள் பிறந்த வருடம் துல்லியமாக வரும்...! இது திருக்குறள் தரும் மங்காத மகத்துவம்...!

உதாரணத்திற்கு: உங்கள் வயது 32 எனில், 1330-32+686 = 1984, இது தான் நீங்கள் பிறந்த வருடம்...! திருக்குறளின் தெரியாத பெருமை...!

இப்படி ஒரு கூற்று whatsupலும், மற்ற சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது...!

உண்மையா பார்த்தா...இது கணிதம்..! அது தரும் ஆச்சர்யமே தவிர, இதற்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...!

ஏன்னா, 1220 இல் இருந்து உங்க சரியான வயதி கழித்து, 796 ஐ கூட்டினாலும், நீங்க பிறந்த வருடம் துல்லியமா வரும்...!

திருக்குறளின் மறைக்க முடியாத பெருமை நிறைய இருக்க, இந்த வீண் வெற்று பெருமை வேண்டாமே ......!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்