எல்லாம் கடந்து போகும்(Nov 2016)....!

மோடிஜியின் உள்நாட்டு துல்லியத் தாக்குதல் 

நிச்சயம் இது ஒரு அதிரடியான, யாருமே சற்றும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு. இதன் மூலம் மோடியை மேலும் நாட்டை காக்கும் நாயகனாக விளம்பரப்படுத்தும் ஊடக விஷயங்கள் அதிகப்படுத்தப்பட்ட அதே வேளையில், பொது மக்களிடமிருந்து புகைச்சல்கள் வராமல் இல்லை. படித்தவர்கள் இந்த அறிவிப்பின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டது (??) போல் அமைதியாக இருக்க, பாமரர்கள் தான் பாவம் திண்டாடுகிறார்கள். 

மேம்போக்காக பார்த்தல் நிச்சயம் இது ஒரு கசப்பு மருந்து. கருப்பு மற்றும் கள்ளப் பணவீக்கத்தை கட்டுப்படுத்தப்போகும் மருந்து. ஆனால், கொஞ்சம் உள்ளூர நிதானமாக ஆராய்ந்தால்.....?

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் கருப்பு பண மதிப்பு 14 லக்ஷம் கோடி. என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் (2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அறிவித்த கள்ளப்பணத்தின் மதிப்பு 3.5 லக்ஷம் கோடி ருபாய்). இதில் 77% கள்ளப்பணம் வெளிநாடுகளில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. (மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூரில் மட்டும் 52%). எனவே உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவது 13% மட்டுமே. அதில் பணமாக பதுக்கப்பட்டிருப்பது இன்னும் குறைவு. ஆகவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிப்பது, பெரும்பாலான கருப்பு பணத்தை வெளிக்கொணர உதவப்போவதில்லை.

இந்திய பொருளாதாரத்தை சிதைக்கவும், தீவிரவாத செயல்களுக்கு செலவிடவும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் வழியாக இந்திய சந்தையில் புகுத்தப்பட்டிருக்கும் கள்ள நோட்டுகளின் மதிப்பு சுமார் 30 முதல் 40 ஆயிரம் கோடிகள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவை முற்றிலும் அழிந்து போகும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் இருக்கும் இவை பாமர மக்களிடம் இருந்தால் அதற்குண்டான நஷ்டம் அவர்கள் தலையில் தான் விடியும்.

இந்தியாவில் கருப்பு பணம் என்பது 63% தொழிலதிபர்களிடமும், 37% அரசியல்வாதிகளிடமும் தான் இருக்கிறது. இவர்கள் யாரும் 20% மேலான கருப்பு பணத்தை உள்நாட்டில் பதுக்கி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்த அறிவிப்பால் வேறு எந்த பயனுமே  இல்லையா ? உண்டு..நிச்சயம் உண்டு...!

1. இந்தியாவில் இன்று வரை 67% வியாபார பரிவர்த்தனைகள் நேரடி பணம் மூலமாகவே நடைபெறுகின்றன. இதில் அரசாங்க கணக்கில் வராதவை மட்டும் 35% மேல். இந்த சில வாரங்களில் கணக்கில் வராமல் கொடுக்கப்பட்ட, வாங்கப்பட்ட உள்நாட்டு வியாபார பரிவர்த்தனையில் சிக்கிக்கொண்ட அணைத்து நோட்டுகளும் மாற்றும் வழி தெரியாமல் முடங்கிப்போகும். குறிப்பாக கட்டுமானம், கல்வி, பொழுதுபோக்கு துறைகளின் கணக்கில் வராத செயல்பாடுகள் சில காலத்துக்கு முடங்கிப்போகும். இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

2. இந்திய மக்கள் பொதுவாக, வருமுன் சுதாரிப்போம் என்றில்லாமல் பட்ட பின்பே தெளிந்திடும் வர்கம். காசாக வைத்திருப்பதை விட வங்கியில் கணக்காக வைத்திருப்பதன் பாதுகாப்பை இப்போது நன்கு உணர்ந்துவிட்ட மக்கள் இனி Cashless Transaction  எனப்படும் முறைக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்வார்கள். இதன் மூலம் வருங்காலத்தில் கருப்பு பணத்தின் புழக்கத்தை பெருமளவு தடுக்க முடியும்.

3. வங்கி கணக்கும், வங்கி மூலம் பணபரிவர்தனையும் பெருகும் போது, அரசாங்கத்திற்கு தடுக்கப்பட்ட வரி பெருகி, பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

4. இந்த விஷயத்தில், தொழிலதிபர்களை விட, அரசியல்வாதிகளின் பாடு தான் திண்டாட்டம். தேர்தல் மற்றும் மாநாடு செலவுகளுக்கு என பதுக்கி வைக்கப்பட்ட கணக்கில் இல்லாத நிதி அனைத்தும் கோவிந்தா.

பரபபான அரசியல் நிகழ்வுகள் மூலம் தங்கள் வாக்கை நிர்ணயிக்கும் பெருவாரியான இந்திய சமூகம் இந்த அறிவிப்பை சாதகமாகவே பார்க்கிறது. இது ப.ஜ.க  விற்கு ஒருவிதத்தில் வெற்றியே.

45ஆவது அமெரிக்க கழுகு   

உள்நாட்டு அதிரடிக்கு கொஞ்சம் கூட குறையாத வெளிநாட்டு அதிரடி டொனால்ட் டிரம்ப் பின் வெற்றி. அமெரிக்க தேர்தலை பின்பற்றாமல் இருந்தவர்கள் கூட ஆச்சர்யப்படும் வெற்றியாக இருக்கிறது இவரது வெற்றி.

உலகமே ஹிலாரியை முதல் அமெரிக்க பெண் ஜனாதிபதியாக வரவேற்க தயாரக இருந்த வேளையில்.......என்னதான் ஆச்சு?

வேறொன்றும் இல்லை.........! அமெரிக்கர்கள், நாங்களும் சராசரி மனிதர்கள் தான், எங்களுக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு...நாங்களும் பல ஆண்டுகளாக அரசாங்கத்தை நம்பி மோசம் போனவர்கள் தான் என்று நிரூபித்துளார்கள். அவ்வளவே....!

உலகத்தை காக்கப்போகும், கட்டுப்படுத்தும் பெரியண்ணன் வேண்டாம்..அமெரிக்க வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் வீட்டுத்தலைவன் போதும்..அது தான் இந்த தேர்தலில் அவர்கள் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கும் விஷயம். 

ஐய்யகோ...மோசம் போய்விட்டோமே...என்று ஒரு சாரார் அழுது புலம்பினாலும், அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு, பதவி ஏற்க தயாராகிவிட்டார்..டிரம்ப்...! 

இந்த படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும். மத்திய அமெரிக்கா முழுவதும் டிரம்ப் வழித்துக்கொண்டு போய்விட்டார். 'Blue Collar Americans' என்றழைக்கப்படும் சராசரி அமெரிக்க குடிமக்களின்  ஒட்டு மொத்த ஆதரவும் ட்ரம்ப்க்கே. பணக்காரர்கள் மற்றும் வந்தேறிகளின் கூடாரமான இடது பக்கமும், வலது பக்கமும் ஹிலாரிக்கு போனது. அநேகமாக ஊடக கணிப்புகள் பொய்த்துப்போன அமெரிக்க தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். அமெரிக்க மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள், தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதற்கு தகுதியானவர் தானா ?

எந்த அரசியல் பின்புலமும் இல்லாத கொழுத்த பணக்காரர் தான் இந்த டிரம்ப். பல நேரத்தில் கொடியவராகவும், சில நேரத்தில் கோமாளியாகவும் சித்தரிக்கப்பட்ட இவர்...பெரும்பாலான மத்திய அமெரிக்க கண்களுக்கு நாயகனாக தெரிந்தது வியப்பு தான்...!

அமெரிக்க ஊடகம்..அமெரிக்கர்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டுக்கொண்டதாக கடுப்பேற்றினாலும்...பெரும்பாலான அமெரிக்கர்கள் இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் பிதற்றினாலும்...வெற்றி..வெற்றி தான்...!

கவலைக்குரிய விஷயம் என்ன வென்றால்...போகிற போக்கில் டிரம்ப் கொளுத்திப் போட்ட சில வாக்குறுதிகள், ஜனாதிபதி ஆனபின்பு அவரால் கண்டுகொள்ளப்பட்டு விடுமோ என்கிற பயமே...!

1. தெற்கில் மெக்ஸிக்கோவை பிரிக்க நீங்க நெடிய சுவர்...அதுவும் மெக்ஸிகோவின் செலவிலேயே 
2.  வெளிநாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவிற்கு போகும் வேலைவாய்ப்புகளை தடுப்பது 
3. முறையான அனுமதி இன்றி அமெரிக்காவில் தங்கி இருக்கும் வந்தேறிகளை வெளியேற்றுவது 
4. முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதை தடுப்பது 

இன்னும் இதுபோல் நிறைய்ய...!

பூமாலை கொடுக்கப்பட்டு விட்டது...! கொடுக்கப்பட்டது யானையின் கையில் என்றால் அது கோவிலுக்கு போகும்...! குரங்கின் கையில் என்றால் ??

டிரம்ப் யானையா குரங்கா ? போகபோகத்தான் தெரியும்....!

வேண்டாமே வீண் புகழ் 

அற்புதம் பாரீர்...! 1330 குறளில் உலகை அடக்கிய வள்ளுவர், ஒவ்வொருவரின் வாழ்க்கை கணக்கையும் அதே 1330 இல் அடக்கி விட்ட அதிசயம் பாரீர்...!

1330 இல் இருந்து உங்கள் சரியான வயதை கழியுங்கள். அதோடு 686 ஐ கூடினால், நீங்கள் பிறந்த வருடம் துல்லியமாக வரும்...! இது திருக்குறள் தரும் மங்காத மகத்துவம்...!

உதாரணத்திற்கு: உங்கள் வயது 32 எனில், 1330-32+686 = 1984, இது தான் நீங்கள் பிறந்த வருடம்...! திருக்குறளின் தெரியாத பெருமை...!

இப்படி ஒரு கூற்று whatsupலும், மற்ற சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது...!

உண்மையா பார்த்தா...இது கணிதம்..! அது தரும் ஆச்சர்யமே தவிர, இதற்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...!

ஏன்னா, 1220 இல் இருந்து உங்க சரியான வயதி கழித்து, 796 ஐ கூட்டினாலும், நீங்க பிறந்த வருடம் துல்லியமா வரும்...!

திருக்குறளின் மறைக்க முடியாத பெருமை நிறைய இருக்க, இந்த வீண் வெற்று பெருமை வேண்டாமே ......!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

எல்லாம் கடந்து போகும்(Sept 2016)....!

சங்க காலத்து யுத்தம்ன்னாலே, அதோட பயங்கரத்த உணர்த்த 'ரத்த ஆறு' ஒடியதுன்னு சொல்வாங்க...! நாம படிச்சிருப்போம்...!

ஆனா நிஜமாவே ரத்த ஆறு ஓடி பாத்திருக்கீங்களா...! அதுவும் சமீபத்துல...?

கொஞ்சம் நஞ்சம் இல்ல...! 3 கிலோமீட்டருக்கு மேல ஓடிச்சு...! 

அந்த ரத்த நதி பாய்ஞ்சது பக்கத்துல இருக்கிற பங்களாதேஷ் தலைநகர் 'டாக்கா'வில தான். 

ஈத் பண்டிகைக்காக முஸ்லீம் சகோதரர்கள் குர்பானி கொடுக்கறது வழக்கம் தான்னாலும், கண்ட எடத்துல வெட்டாம, அதுக்குன்னு இடம் ஒதுக்கி கொடுத்திருந்தது காவல் துறை. 

பண்டிகைன்னா நம்ம ஆளுங்க சட்டத்தையெல்லாம் மதிப்பங்களா...! சகட்டு மேனிக்கு வீட்டு வெளிய, கார் பர்கிங்க்ல னு வெட்டி தள்ளிப்புட்டாங்க. 

பத்தாததுக்கு கொஞ்ச நேரத்துல நல்ல மழை வேற பெய்ய...பாருங்க நிஜ ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடின அழகை..!

Youtubeல தேடினா HD Video வாவே  பார்க்கலாங்க...! 

ரத்தத்த பார்த்தாவே மயக்கம் வர்ற ஆளுங்க மட்டும் ஒதுங்கி போய்டுங்க...!

சுத்தமும் சுகாதாரமும் பண்டிகை சந்தோஷத்தை விட ரொம்ப முக்கியம்னு அரசாங்கம் எவ்வளவு தான் புலம்பினாலும், எங்க கேக்கறாங்க..! ஏற்கனவே சுத்தம்னா கிலோ என்ன விலைன்னு கேக்கற டாக்கா காரங்க, இந்த சுகாதார சீர்கேட்டால ஏற்படப்போற பரவப்போற வியாதிகளையும் எதிர்கொண்டாக வேண்டி இருக்கு...!

*************************

'பசங்க வீட்டுக்கு வெளிய வந்து விளையாடினாங்க' அப்படிங்கறது ரொம்ப சாதாரணமா நடக்க கூடிய விஷயம். 
'ஒரு நாள் முழுக்க விளையாடினாங்க' அப்படினா ஏதாவது விடுமுறை நாளா இருக்கும்...சீதோஷ்ண நிலை சரியா இருக்கவே நாள் முழுக்க விளையாடி இருப்பாங்க..இதுல என்னையா விஷேஷம்...?

ஆனா சர்வதேச செய்திகள்ல இந்த வாரம் மொத இடம் பிடிச்சிருக்கறது இந்த விஷயம் தான். உலகமே 'அப்புடியா சந்தோஷமா விளைடாடுங்க', இது நிலைக்கணும்னு வாழ்த்து சொன்னது ஆச்சர்யமான விஷயம் தானே.

சிரியாவை பத்தி கேள்விப்படிருப்பீங்க. அரசாங்கத்துக்கு ரஷ்யா சப்போட்டு, அரசாங்கத்த எதிர்க்கறவங்க அத்தனை பேருக்கும் அமெரிக்கா சப்போட்டு. உள்நாட்டு போராலயும், ஐஸிஸ்சோட  புண்ணியத்தாலும் 4 வருஷமா கொத்துபரோட்டா போடப்பட்ட மக்களுக்கு சதோஷம்கிறது ஏது. பசங்கள பத்தி சொல்லவே வேணாம். 

ஏதோ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, ரஷ்யாவும் அமெரிக்காவும் கொஞ்சம் ஓய்வெடுக்க நினைச்சாங்க போல...கொஞ்ச நாளா குண்டு எதுவும் வெடிக்கல. யாரும் காணாம போகல. 

கிடைச்ச கொஞ்சநஞ்ச நேரத்தையும் வீணாக்க கூடாதுன்னு எல்லா குழந்தைகளும் வீட்ட விட்டு வெளிய வந்து நாள் முழுக்க விளையாடி கொண்டாடி இருக்காங்க...!

எந்தப்பக்கம் பார்த்தாலும் இடிஞ்சு கெடக்கற வீடுகளுக்கு மத்தில அவங்க விளையாடின அழகை உலகமே சந்தோஷமா பார்க்குது....!






ஆனா, இவங்க சந்தோஷம் நிச்சயமா நிரந்தரம் இல்ல. அமெரிக்காவும் ரஷ்யாவும் லீவு முடிஞ்சு திரும்ப எந்த நேரமும் வரலாம். எதனாலயோ கம்முன்னு கிடைக்கற ஐஸிஸ் அரக்கனுங்க மறுபடியும் நாட்டை ரத்தக்களரி ஆக்கலாம். 

அடுத்த நிமிஷம் உயிரோட இருப்போமான்னே தெரியாத நிலையிலும் கெடச்ச கொஞ்ச சந்தோஷத்தையும் இழக்க இந்த குழந்தைங்க விரும்பல.  பாருங்க..அவங்க முகத்துல காட்டற உணர்ச்சிகளுக்கு விலையே கிடையாது.

இவங்க நெலமைக்கு, நாமெல்லாம் கொசுக்கடியோட வாழ்ந்தாலும் சொர்க்கத்துல வாழறோம் சாமியோவ்....!
***********************************

மானதமிழ் சமூகத்துக்கு 'சரக்கு' ஒரு இன்றிமையாத விஷயம். (மலேசியா சரக்கு இல்லீங்க), அரசாங்கமே விக்குதுன்னாலும் கொஞ்சம் கூட சுணங்காம சரக்க வாங்கி போதை ஏத்திக்கறது நம்ம ஆளுங்களோட அன்றாட பழக்கம். 

இந்தப்பக்கம் பார்த்தா...புருஷன் குடியிலேர்ந்து விடுபடணும்னு நாகாத்தம்மனுக்கு விரதம் இருபாங்க மான தமிழச்சிங்க. பாம்பு சம்மந்தம் இல்லாத கடவுளே நம்ம கோவில்ல கெடையாதுங்கறதாலே கும்பிட்ட திக்கெல்லாம் நாகம் தான் முன்னால நிக்குது.

ஆனா, சீனாவுல ஆரம்பிச்சு இன்னைக்கு கொரியா, வியட்நாம்ல சக்க போடு போடற 'கிக்கான' மேட்டர் என்ன தெரியுங்களா? சரக்குக்கும் சற்பத்துக்கும் கொடுத்த கனெக்ஷன் தாங்க...!

இது கொஞ்சம் சரக்கு அதிகமா போய் கொத்து உட்டு வாந்தி எடுக்குற மேட்டர் தான். சுதாரிச்சிக்கிட்டு மேற்கொண்டு படிங்க....!

ஓரளவுக்கு மேல சாராய போதை சலிச்சுப்போன சில பக்கிக, ஓடுற பாம்பை எடுத்து சாராயத்துல முக்கி வெக்க, இது தெரியாம வேற ஒரு பக்கி வந்து அத குடிச்சு பாத்துட்டு, மயங்கி விழ....உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான கண்டுபுடிப்பான 'பாம்பு சாராயம்' உருவானது....!

'ஒரு குடுவையில் சாராயத்தை அளவாக ஊற்ற வேண்டும். பிற்பாடு உயிரோடு இருக்கும் கொடிய விஷமுள்ள நல்ல பாம்பை அந்த குடுவையில் இட்டு, மூன்று மாதங்களுக்கு மூடி வைத்து விட வேண்டும்' னு  கிட்டத்தட்ட 23ஆம் புலிகேசி பார்முலா தான்னாலும் கற்பனை இல்ல....உண்மை...! அப்படி தான் உருவாச்சு இந்த பாம்பு சாராயம். இன்னைக்கு உலக அளவுல முப்பது மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி ஆகுற பணம் கொழிக்கிற விஷயம்ங்க இது...!

100 வருஷ பழமையான ஸ்காட்ச் கொடுக்கிற போதைய விட இந்த பாம்பு சாராயம் கொடுக்கிற போதை பலமடங்கு அதிகம்னு குடிச்சு பார்த்தவங்க சொல்லறாங்க . எந்த விளம்பரமும் இல்லாம வாய்மொழி விளம்பரத்திலியே சக்க போடு போடும் வியாபாரமாகிடுச்சு இந்த விஷயம்.

கொடுமை என்னனா கூடவே மெடிக்கல் சர்டிபிகேட்டும் இலவசமா சேர்த்து வெச்சு விக்கறாங்க....அதாகப்பட்டது இந்த சரக்கு போதை ஏத்துமே தவிர உயிருக்கு தீங்கு விளைவிக்காது அப்படீன்னு.

வியட்நாம்ல தயார் ஆனாலும், சீனா வழியா இது அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியானு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு...பாவம் பாம்புகளோட ஜனத்தொகை தான் கணிசமா கொறஞ்சுகிட்டு வருது.

செய்முறை எல்லாம் ரொம்ப சாதாரணம். கண்ணாடி குடுவை நெறைய சரக்கு..அது எந்த கருமாந்திர சரக்காவது இருந்துட்டு போகட்டும்...! 5 வயசுக்கு மீறாத நல்ல பாம்பை, கவனிக்கணும் கொடூர விஷத்தன்மை உள்ள நல்ல பாம்பை அந்த குடுவைக்குள்ள போட்டு மூடிடனும். சுவாசிக்க காத்து கிடைக்காத அவஸ்தையில  பாம்பு படமெடுத்து ஜாடிக்குள்ளையே டான்ஸ் ஆடும்..ஆடி...ஆடி..செத்தும் போய்டும்..அப்புறம் தான் மேட்டரே...அடுத்த மூணு மாசத்துல பாம்போட உடல் சாராயத்துல ஊறி ஊறி...போதும் உவ்வே...!

விஞ்ஞானிகள் இதை ஆராய்ஞ்சு பாத்துட்டு...அதிக போதை எல்லாம் இல்லீங்க, பாம்பு விஷம் ஊறின சரக்கு என்பது கொடுக்கும் உளவியல் ரீதியான போதை தான் இது...வேற ஒண்ணும் இல்ல அப்படீன்னு சொல்லிட்டாலும்...சரக்கு விற்பனை என்னவோ அமோகம்..!

என்ன..சும்மா ஒருக்கா..ஒரு கல்பு அடிச்சு பார்க்கலாமான்னு யோசிக்கிறீங்களா, வெலை அதிகமில்லை ஜென்டில்மேன்....ஒரு பாட்டில் ஆரம்ப விலை 35,000 ரூபாய் தான்...!

பல அரசாங்கங்கள் இதுக்கு தடை போட்டாலும், இன்டர்நெட்லயும் கள்ள மார்கெட்லயும் வித்துக்கிட்டு தான் இருக்காங்க...திருட்டு dvd மாதிரி...!

இவங்க டார்கெட்டே மேற்கத்திய பேச்சுலர் பார்ட்டி தான். நண்பர்களுக்கு ஷாக் கொடுக்க நினைக்கும் வெள்ளை வெத்து வேட்டுங்களுக்கு  $500 பெரிய விஷயமில்லை தானுங்களே...!

இப்போ 2016ல புதுசா வந்திருக்கிற சரக்கு ரொம்ப டாப்பு...பாம்போட கருந்தேளையும் சேர்த்து விட்டுட்டாங்க பக்கிக...! செம்ம சூடா விற்பனை ஆகிகிட்டு இருக்கு இந்த அதிரி புதிரி காம்பினேஷன் .....!
************************************


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

எல்லாம் கடந்து போகும்....!

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொது கொஞ்சம் கிலி ஏற்படுத்தினார்...!

"25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்...!

அவருடைய வார்த்தைகள் முழுவதும் எனக்கு உடன்படாவிட்டாலும், அதில் நிதர்சனம் இருக்கிறது என்றே பட்டது.

1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. 

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் அந்த நண்பரோட ( நான் ஒத்துக்கொண்ட) வாதம்....!

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.! 

உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?

'Ubar'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...! 

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  IPC Sectionஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...! 

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?

ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப துறைல 15 வருஷமா இருக்கறதால நான் 100% நம்புகிற ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க...!

2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.  எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ? 

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.

அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..ஆனா வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும்.  மொத்தத்துல, சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும் அப்பு...! புரிஞ்சு நடத்துக்குங்க..சொல்லிட்டேன்...!


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

பாரக் ஒபாமா சாதித்தது என்ன ?

எட்டாண்டுகளுக்கு முன்......!

ஐக்கிய அமெரிக்க அரசியல் களத்தில் கருப்பு நட்சத்திரம் ஒன்று ஒளி வீசத்தொடங்கிய வரலாற்று நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட, அது ஒட்டுமொத்த உலகின் புரட்சியாகவே பார்க்கப்பட்டது..பரப்பப்பட்டது.

அசாதாரணமான அரசியல் சூழலின் முடிவில், ஒரு கருப்பினத்தை பின்புலமாக கொண்ட தலைவர், வரலாற்றில் முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் அடி எடுத்து வைத்தார். 

கைமுட்டியை உயர்த்தி அவர் எழுப்பிய 'மாற்றத்தை விதைப்போம், அதைக்கொண்டு தேசத்தை வளர்ப்போம்' என்ற மந்திர வார்த்தை, கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கருப்பார்களோடு, குளிர்கால கோட்டு போட்ட படாடோப வெள்ளையர்களையும் சேர்த்து வசீகரித்தது. 

மாற்றத்திற்கான புதிய நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்த பேரின்பத்தோடும் புத்துணர்ச்சியோடும், ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஜனாதிபதி ஆனார் 'பாரக் ஹுஸைன் ஒபாமா'.

அரசியல் விடிவெள்ளி, கறுப்பின காவலன், உலக அமைதிக்கு வித்திடபோகும் உத்தமன்...! இன்னும் என்னவெல்லாமோ வாழ்த்தொலிகள்.

எழுந்த அத்தனை ஒலிகளையும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்குள்  பிரவேசித்தார் ஒபாமா.

எட்டாண்டுகளுக்கு பின்......!

நெருக்கடியான பதவிக்காலத்தின் கடைசீ நாட்களை நரைத்துப்போன வெள்ளை தலைமுடியுடன் கழித்துவருகிறார் அவர், எந்தப்பேரின்பமும் புத்துணர்ச்சியும் இல்லாமல். 

சக்தி வாய்ந்த பிரச்சாரத்திற்கும் உண்மையான நிதர்சனத்திற்கும் உள்ள இடைவெளியை அவர் புரிந்து கொண்டவராகவே காணப்படுகிறார், ஓட்டுப்போட காத்திருக்கும் அமெரிக்கர்களைப்போலவே.

பிளவு படுத்தப்பட்ட, ஒட்டாத பல செயல்திட்டங்களினால் அமெரிக்காவை பின் நோக்கி தள்ளி விட்டதாய் எழும் கடுமையான விமர்சனங்களை மவுனமாய் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், காத்திருக்கிறார் ஒபாமா.

இனி, அமெரிக்க வரலாற்றில் ஒரு குறிப்பாய் கோடிடப்பட்டு காணாமல் போகப்போகும் திரு. ஒபாமா அவர்கள் இதுவரை சாதித்தது என்ன?

தாம் முன்வைத்த அரசியல் தத்துவத்தை பின்பற்றி தனது நிர்வாகத்தை சரியாக கட்டமைத்ததாக அவரால் மார்தட்டிக்கொள்ள முடியுமா?

மாற்றத்தை விதைத்து, அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக உலகம் ஒத்துக்கொள்ளுமா ?

ஒபாமா சொன்னது என்ன ? சாதித்தது என்ன ?

**********

2007ஆம் ஆண்டு, அமெரிக்க தேசிய கொடியின் வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்த உதய சூரியன் (ஆமாம் உதய சூரியன் தான்) சின்னத்தின் பின்புலத்தில், நரைக்காத கருப்பு தலைமுடியோடு, தான் விரும்பும் மாற்றமும், அதனால் நாடு பெறப்போகும் ஏற்றத்தையும்..ஒரு நீண்ட பட்டியலில் வெளியிட்டார் ஒபாமா. அதில் மிக முக்கியமானவை:

1. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் உலகளாவிய மருத்துவக்காப்பீடு.
2. அமெரிக்கர்களின் வாழ்வில் ஏழ்மைக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி.
3. மேம்படுத்திய பொருளாதார கொள்கைகள் மூலம் வருமான உற்பத்தி.
4.  உலக வெப்பமயமாதலை தடுக்கும் தீவிர பன்னாட்டு முயற்சி 
5.  வந்தேறிகளுக்கான புதிய சீர்மையான கொள்கை 
6.  போர் சூழல்களை தடுக்கும் அமைதிக்கான அந்நிய மேம்பாட்டுக்கொள்கை.

முதல் மூன்று அமெரிக்க நிலை சார்ந்தது. அடுத்த மூன்று உலக நிலை சார்ந்தது.

இந்த ஆறு அம்சங்களின் இலக்குகளை நோக்கி ஒபாமா கடந்து வந்திருக்கும் தூரம் தான் அவருடைய செயல்திறனை சீராய்வு செய்யும் காரணி என்பது உலக மதிப்பீட்டாளர்களின் ஒப்பீடு.

1. உலகளாவிய மருத்துவக்காப்பீடு:

2010இல் சட்டமாக்கப்பட்டு, 2014இல் செயல்முறைக்கு வந்த 'ஒபாமாகேர் (ObamaCare)' காப்பீடு திட்டம் கோடிக்கணக்கான அமெரிக்கர்களை காப்பீட்டு கட்டத்திற்குள் கொண்டு வந்து, ஒபாமாவை அமெரிக்கர்களின் நடுவே உயர்த்திக்காட்டியது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விமர்சனங்கள் எழுந்தாலும், இத்திட்டத்தின் பரவல், 2012இல் மறுபடியும் ஒபாமாவின் வெற்றிவாய்பை உறுதிப்படுத்தியது.

5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே முறையான மருத்துவக்காப்பீடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை தனது மிகப்பெரிய சாதனையாக குறிப்பிடும் ஒபாமா ஐரோப்பிய நாடுகள் இந்த காப்பீட்டு விஷயத்தில் என்றோ தன்னிறைவு பெற்று விட்டன என்பதை ஏனோ வெளிகாட்டிக்கொள்ளவில்லை..

2016 வந்த பின்பும், அந்த 'உலகளாவிய' என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது அமெரிக்கர்களுக்கு.

2. ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி:

அனைத்து அரசியல்வாதிகளும், பொதுவில் வைக்கும் வாக்குறுதியாகவே பார்க்கப்பட்டு அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த 'ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி', இங்கு மட்டும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கப்பட்டது..சொன்னது ஒபாமாவாக இருந்ததால்.

மற்ற நாடுகளின் ஏழ்மை நிலைக்கும் அமெரிக்க ஏழ்மை நிலைக்கும் அதிக வித்யாசம் உண்டு. இங்கு ஏழ்மை என்ற வார்த்தைக்கு பூர்வ குடி கறுப்பின மக்கள் என்றே பொருள்படும். மொத்த ஜனத்தொகையில் 13% மேல் இருக்கும் இவர்களுக்கு அமெரிக்க ஆடம்பர வாழ்க்கை என்பது எட்டாக்கனி.

முதலாளித்துவ கோட்பாடுகளை எதிர்த்து, இவர்களுக்கு ஒபாமாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை அமெரிக்க ஊடகங்கள் ஒத்துக்கொள்கின்றன. நிற வெறியை உடைத்த ஒபாமாவின் எட்டாண்டு வெள்ளை மாளிகை வாசம் மட்டுமே தங்களுக்கு கிடைத்த அதிகப்படியான பலன் என்பதை வேதனையோடு அந்த சமூகம் பார்க்கிறது.

2016இல், ஹிலாரி கிளின்டனின் வாக்குறுதிகளில் மறுபடியும் காணக்கிடைக்கிறது...இந்த ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி.

3. புதிய பொருளாதார கொள்கைகள்:

மிக மோசமான அமெரிக்க பொருளாதார சூழலின் நடுவே தான் ஒபாமா பதவி ஏற்றார். 2008இல் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டம் எட்டு சதவிகிதத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. பம்பரமாய் சுழலபோவதாய் காட்டிக்கொண்ட ஒபாமா அரசு நிதானமாகவே செயல்பட்டது.

வருமானத்தில் ஏற்றமில்லாமல் ஐந்து சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்ட வேலையின்மை, அமெரிக்க மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. பழைய முதலாளித்துவத்தின் பிரதிபலிப்பாக வெளிவந்த புதிய பொருளாதார கொள்கைகள் அவர்களின் பொறுமையை சோதித்தன. முடிவு, ஒபாமா மீது வைத்திருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கின.

2016இல், அமெரிக்க பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஒபாமா கருப்புத்தோல் போர்த்திய வெள்ளைப்புலியாகவே கருதவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

4. புவி வெப்பமயமாதல்:

அமரிக்கா ஜனாதிபதி என்பதை மீறி உலகம் ஒபாமாவை உற்று நோக்கியது இந்த விஷயத்தில் தான். Global Warming என்பது வெத்து விஞ்ஞானிகள் கூறும் புரட்டு கதை என்று உலக சாமானியர்கள் ஒதுக்கி வந்த வேளையில் தான் வீறு கொண்டு இதைப்  பற்றி பேசினார் ஒபாமா.

உலகத்தலைவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தியபோது உலகமே இதனை தீவிரமாக எதிர்நோக்கியது, ஒபாமாவுடன் சேர்ந்து கவலைப்பட்டது. தடுப்பதற்குண்டான தீர்வுகளை ஆராய்ந்தது.

ஆனால், அமெரிக்க மோட்டார் வாகன கூட்டமைப்பின் எச்சரிக்கைக்கு பணிந்து, கார்பன் கழிவுகளை கட்டுப்படுத்தும் மசோதாவிற்கு ஒபாமா அரசு தடை விதித்த பொது, நரியின் சாயம் வெளுத்துப்போனது.

2016இல், ஒபாமா Global Warming பற்றி மூச்சு கூட விடுவதில்லை....!

5. வாழவைக்கும் வந்தேறிகளுக்கு ஜே:

இது ரொம்ப முக்கியமான விஷயம். அமெரிக்க கட்டமைப்பின் அடிப்படையையே ஆட்டுவிக்கக்கூடிய விஷயம். அமெரிக்காவை பொறுத்தவரை இது ஒருவிதமான முட்கள் நிறைந்த சோலைவனம்.

சோலைவனத்தின் பூக்கள் அமெரிக்க வளர்ச்சியில் இன்றியமையாத தேவை. ஆனால் முட்கள் களையெடுக்கப்பட வேண்டியவை.

ஒபாமாவின் மிதவாத தத்துவம் முட்களை மட்டும் கண்டுகொண்டு பூக்களாக மாற்ற முயன்றது. ஒரு கோடிக்கும் மேலாக மண்டிக்கிடந்த மெக்ஸிகோ மற்றும் ஸ்பானிய (español) முட்களை அமெரிக்க பூக்களாக மாற்றும் முயற்சியில் பூத்துகுலுங்கும் ஆசியப்பூக்களை  அவர் அதிகம் கண்டுகொள்ளாமால் போனது காலக்கொடுமை.

சம்பாதிக்க வந்தவர்களிடமிருந்தும் வரப்போகிறவர்களிடமிருந்தும் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தது ஒபாமாவின் அரசு. அமெரிக்க கல்வியும், தொழிலும், வாழ்வும் அதிக விலையில் விற்பனைக்காக உலகச்சந்தையில் வைக்கப்பட்டு மதிப்பிழக்கும் நிலை மட்டுமே மிஞ்சியது.

2016இல் தராதரமின்றி காசிருக்கும் யாரும் இங்கே படிக்க வரலாம். தகுதியின் தரம் குன்றிப் போனாலும், சொந்தக்காசில் ஐந்து வருடம் வரை வெட்டியாய் வேலை தேடலாம்.

6. அந்நிய மேம்பாட்டுக்கொள்கை

பதவியேற்கும் எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் சொல்லி அடிக்கும் கில்லியான துறை இது. உலகளாவிய பார்வையில் தன்னை உயர்த்திக்  காட்டவும், உள்நாட்டு தோல்விகளை மறைக்கவும், மத்திய கிழக்கு நாடுகளை பர்கர் ரொட்டிக்குள் நுழைத்து, பார்பிகியூ ஸாஸ் ஊற்றி சாப்பிடுவது அவர்களுக்கு கை, கால் எல்லாம் வந்த கலை.

உருப்படியாக எதுவும் செய்வதற்கு முன்பே 'நோபல்' பரிசு தேடி வந்தது ஒபாமாவிடம். 'டாஸ்'ஸில் பெற்ற வெற்றியோடு ஆட்டத்தை இவர் முடித்துக்கொண்டதாகவே சொல்கிறது உலக ஊடகவியல்.

ஆனால், உண்மையில் 20 ஆண்டு அமெரிக்க வெளிநாட்டு அரசியல் பாணியில் இருந்து ஒபாமா சற்று விலகி நின்று தனது தனித்துவத்தை நிச்சயம் வெளிப்படுத்தினார் என்றே கருதவேண்டியிருக்கிறது...!

புஷ்ஷின் முட்டாள்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, இராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற்று, இவர் ஏற்படுத்திய நிம்மதி பெருமூச்சு..இன்னும் நிலைத்து நிற்கிறது. ஆயினும், அதுவே 'ஐஸிஸ்' அசுரனை வளர வழி செய்ததென்கிற விமர்சனத்தை தவிர்க்க முடியவில்லை.

வேறெந்த அதிபராக இருந்திருந்தாலும், ஆயுத சந்தையின் வளர்ச்சிக்காக 'சிரியா'வின் மீது நிச்சயம் அமெரிக்கா போர் தொடுத்திருக்கும், அணு ஆயுத வளர்ச்சியை தடுப்பதாக சொல்லிக்கொண்டு ஈரானுக்குள் நுழைந்திருக்கும். ஆனால் ஒபாமா அதை செய்யவில்லை.

ரஷ்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், என்று அமெரிக்க அதிபர்கள் எச்சில் துப்பும் எந்த தேசத்தோடும் ஒபாமா முறுக்கிக்கொள்ளாமல் காட்டிய மென்மையான போக்கு, பதுங்கி இருந்த சீனப்பாம்பு படமெடுத்து ஆடுவதற்கும் காரணமாகிப்போனது.

அமைதியை அழுத்திப்பிடித்து உயர்த்தி நிறுத்தியதில், ஒபாமா இந்த விஷயத்தில் நிச்சயம் ஒரு கதாநாயகன்.

2016இல், உள்நாட்டில் வெடிக்கும் துப்பாக்கி கலாச்சாரதையும், தீவிரவாத அச்சுறுத்தல்களையும், அடுத்து வரும் அதிபருக்கு விட்டு செல்ல காத்திருக்குறார் ஒபாமா.

*********************************

8 வருட ஆட்சியின் முடிவில், ஒபாமா தன்னை ஒரு நல்ல மிதவாதியாகவே வெளிப்படுத்தி யிருக்கிறார். 'உலகத்திற்கு பொதுவான அமெரிக்க தலைவன்' என்ற.....தான் உருவாக்கிய அந்த நேர்மறை பிம்பத்தை (Positive Image) விட்டு அவர் வெளியே வரவில்லை. 

ஒபாமா, ஒரு தனித்துவமான அம்பு. எந்த வில்லில் இருந்தும் புறப்படாத, மிகச்சிறந்த இலக்குகளை குறிவைத்து தானே தன்னை செலுத்திக்கொண்டு, வீறுகொண்டு சீறிப்பாய்ந்த அம்பு. ஆனால், பாய்ந்த அம்பு இலக்கு வட்டத்தை தைக்காமல், கொஞ்சம் முன்னாலேயே தொய்ந்து தரையில் வீழ்ந்து போனது வரலாற்றின் பரிதாபம்.

கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நடைபயின்ற அவரது கம்பீரம், கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது. இப்பொது தான் தெரிகிறது, பின்னால் கட்டிக்கொண்டிருந்த கைகளில் இருக்கும் அமெரிக்க முதலாளித்துவ காப்பு. அது விரும்பிய பொது மட்டுமே ஒபாமாவால் கை உயர்த்தி மக்கள் கூட்டத்தை பார்த்து ஆர்ப்பரிக்க முடிந்திருக்கிறது.

கம்பீரமாய், பிரமிப்பாய் காணக்கிடைத்த ஒபாமா இப்போது பாவமாய், அப்பாவியாய் கண்டுகொள்ளப்படுகிறார்...!

சில நாட்களுக்கு முன் இப்படி சொன்னார் ஒபாமா:

'என்னை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை...ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்..நான்...அப்பாவி இல்லை...!'

பாவம்..ஒபாமாவிற்கு தெரியவில்லை போலும்..அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று....!

*********************************

நிச்சயமாக, இந்தக்கட்டுரை எனது சொந்த பார்வை அல்ல. எழுத்துக்கள் மட்டுமே என்னுடையது. எண்ணங்கள் எல்லாம் என்னுடைய 5 வருட அமெரிக்க வாழ்வில் கிடைத்த நண்பர்களுடையது. வெள்ளையும், கருப்பும், இந்தியமும் கலந்த நட்புக்கூட்டம் அது. ஆனால், சிந்தனையிலும், செயலிலும் அனைவரும் மனிதர்களே என்று எனக்கு அடிக்கடி உணர்த்தும் கூட்டம். என் அடி நெஞ்சில் இருந்து புறப்படும் நன்றிகள் அவர்களுக்கு.

நிதர்சனங்களை சொல்லுங்கள்..உங்கள் சுய விருப்பு வெறுப்பு வேண்டாம், என்ற என் கோரிக்கையை ஏற்று..அவர்கள் கொடுத்த எண்ணத்தொகுப்பின் எழுதுவடிவமே இந்த பதிவு...!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்



இனியாவது ஒரு விதி செய்வோம்...!



செவ்வானம் மேலேயும் 
பச்சை நிறம் கீழேயும் 
சுழலும் சூரியச்சக்கரம் நடுவிலும் 
எங்கும் தெறிக்கும் தேசத்தின் 
நிறத்தை கண்ணுயர்த்தி 
சுதந்திரத்தை சுவாசிப்போம்....!

வெளிர் நிறத்தில் கீழ்வானம் 
வெளுக்கும் போது 
விடியலுக்கு விழிவைத்து 
காத்திருப்போம்...!

மொழிப்பற்றோடு இந்தியன் என்ற 
முகப்பற்றையும் ஏற்போம்...!
எழுபது ஆண்டுகளுக்கு பிறகாவது 
எழுகின்ற தேசத்தை வார்போம்...!

ரத்தம் தோய்ந்த சரித்திரத்திற்கு 
புள்ளி வைப்போம்...!
சத்தம் இல்லாமல் வேற்றுமைக்கு 
கொள்ளி வைப்போம்...!

திசையின்றி திரிந்தாலும் 
விசையின்றி பறந்தாலும் 
தேனீக்கள் துயில் கொள்வது 
தேன்கூட்டில் தான்...!
நல் இதயம் தோள் சாய்வது 
தாய்நாட்டில் தான்...!

ஏசியும் பேசியும் பிரித்தாலும் 
தேசியம் மட்டும் நினைவிருக்கும்...!
புனிதம் சொல்லி எரித்தாலும் இறுதியில் 
மனிதம் மட்டும் நிலைத்திருக்கும்...!


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

கபாலியும் கடந்து போகும்...!

ஐந்து நாட்களாய் அகிலமெங்கும் கபாலி தான்...தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் கபாலிக்கே. விவாதத்திற்கு வேறொரு பொருளின்றி தனித்து நிற்கிறான் கபாலி...!

அதிகம் காசு வைத்து விற்றது, காரித்துப்பிய நீல சட்டையை இணையத்திலேயே கழுவி ஊற்றியது, பிற சாந்தும், இந்து கிருஷ்ணாவும் கபாலிக்கு மொட்டை அடித்தது, இடையில் அதிரடியாய் சிவாவின் முத்து சிதறல்கள் என்று எல்லா  விஷயங்களையும் தாண்டி, தமிழ் ரசிகனுக்கு குறிப்பாக ரஜினி ரசிகனுக்கு கபாலி தொடர்ந்து விருந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறது...!

'தெறி'யும், 'வேதாள'மும் வெற்றிக்கொடி கட்டிய தமிழ் கூறும் நல்லுலகில் கபாலி தறிகெட்டு ஓடுவது மிகையே அல்ல...! கபாலி கல்லா கட்டவில்லை என்றால் தான் கவலை பட வேண்டும்.

லிங்காவில் கற்ற பாடம் கைப்பெற, கபாலியின்  கலெக்ஷனுக்கு கட்டயம் கூறுகின்றது  (காத தூரம் நோக்கினும் காணக்கிடைக்கவில்லை யாதொரு சிங்காரவேலனும்.) கலைபுலியின் கடைவாய் ஓரப்புன்னகை...!

கோச்சடையானும், லிங்காவும், ஏற்படுத்திய அஜீரணத்திற்கு, கபாலி எனும் மருந்து குடித்து விட்டார் ரஜினி, ஏப்பமாய் அறிக்கை வெளியிட்டவாறே.

ஆனால் ரஞ்சித் என்ற படைப்பாளிக்கு ?

நிச்சயம் இது தோல்வி. விடு பூக்களை அழகிய மாலையாய் தொடுக்காமல் வரிசை மட்டுமே படுத்தி...படுத்தி எடுத்து விட்டதன் விளைவு...! கருத்தியலின் கழுத்தறுக்கப்பட்டு விட்டது கபாலியில் என்பதே நிதர்சனம்.

ஒடுக்கப்பட்ட மலேசிய தமிழ் மக்களின் அடுக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு, ரஞ்சித்தின் தீர்வு.....அசடு வழிகிறது கபாலியின் துப்பாக்கியை போலவே...!

முன்னேற முடியாமல் தவிக்கும் தமிழ் சமூகத்தின் முகத்தில் உமிழ்ந்த எச்சிலின் மிச்சத்தை கடல் கடந்து காசாக்கி விட்டதுடன் முடித்து போகும் இவர்களின் சமூக அக்கறை...!

இனி என்ன? 

கபாலியின் கங்குல் இன்னும் கொஞ்ச நாள் மட்டுமே....!

சூடு தணிந்ததும் தணிந்து விடும் மலேசிய தமிழர்களின் வாழ்வுரிமை கவலைகள்...! உள்ளூர் பிரச்சனைகள் ஓராயிரம் இருக்க,  இனி உச்சு கொட்ட மட்டுமே உதவும் இவர்களின் வாழ்க்கை போராட்டம்...ஈழத்தமிழினம் போல...!

கை கொட்டி ரசிக்க நமக்கு கலைப்படைப்புகளா இல்லை..! அடுத்தடுத்து வரிசை கட்டும் காட்சிப்பொருட்களிடையே கூடிய சீக்கிரம் கபாலியும் காணாமல் போகும்...!

அடுத்து, தமிழ் கூறும் நல்லுலகம் இனி காத்துக் கிடக்கும் 2.0 காய்..!

ஆம்..கூடிய விரைவில், இன்னொரு முறை...இன்னொரு படைப்பு..இன்றிலிருந்தே தயாராய் இருங்கள் தோழர்களே..பிரம்மாண்டத்தின் உச்சம்...! யந்திரத்தின் இரண்டாம் பாகம்.

உங்களுக்குள் கருவாகி காத்திருக்கும் கனல், இன்னொரு முறை நெருப்பாகும்...அது வரை காத்திருப்போம்..கபாலி கடந்து போகும் பாதையிலேயே...!

*********************************************************************************

                                                                                                                                 ஸ்ரீராம் சம்பத்குமார்

கடவுளின் காதல் (மண்டை ஓடும் சில வைரங்களும்....!)

டேமியன் ஹிர்ஸ்ட் ( Damien Hirst)னு ஒரு ஆங்கிலக் கலைஞர்.  51 வயசான முக்காலே மூணு வீசம் ஒரு தாத்தா...!

கலைஞர்னா.....என்ன குறளோவியம், நெஞ்சுக்கு நீதி மாதிரி ஏதாவது எழுதுவாரா?....அதெல்லாம் இல்ல..!

ஒண்ணுக்கும் உதவாதுன்னு தூக்கிப்போட்ட பழங்கால பொருட்கள சேகரிச்சு, அதவெச்சு  புதுசா வித்யாசமா  எதையாவது உருவாக்கி ஏலம் விட்டு சம்பாதிக்கிறவர்.

உலகத்துல எல்லாரும் ஏதாவது ஒரு வேலை செஞ்சு தான் பொழைக்கிறாங்க..அதுல இந்த ஆளும் ஒண்ணு, இப்ப எதுக்கு இந்த ஆள பத்தி ஒரு பதிவுன்னு தானே யோசிக்கிறீங்க....கொஞ்சம் பொறுங்க விஷயம் இருக்கு.

இந்த ஆளு கிறுக்குத்தனமா எதையாவது செஞ்சு வைக்க, அதை இந்த புத்திசாலி உலகம் கொண்டாடுதான்னு யோசிக்கறதுக்கெல்லாம் முன்னாடி....!

2015ஆம் ஆண்டு கடைசீல, tax கட்டி இவரு கணக்கு காட்டின சொத்து மதிப்பு மட்டும் நம்ம காசுல சுமார் 20,000 கோடி.

என்ன மெய்யாலுமா ? அட..சாத்தியமாங்க...!

இவரு ஒண்ணும் அம்பானி,  டாடா, பிர்லா மாதிரி பெரிய தொழிலதிபர் எல்லாம் இல்லீங்களே...அப்புறம் எப்புடி இம்பூட்டு காசு ?

அதத்தான் விரிவா பார்க்கலாம்...இல்ல..இல்ல..படிக்கலாம்....வாங்க...!

ஆரம்பமெல்லாம் ரொம்ப சாதாரணம் தான். ஏதோ படிச்சாரு, ஏதோ செய்தாரு, ரெண்டு வாட்டி திருடி மாட்டிகிட்டு ஜெயிலுக்கு கூட போனாரு.

அப்படியே கூட்டத்தோட கோவிந்தா போடாம, வாழ்க்கை, வியாதி, வலி, மரணம் இதெல்லாம் என்னனு, கொஞ்சம் வித்யாசமா சிந்திக்க ஆரம்பிச்சது தான் திருப்புமுனை.

மேலே சொன்ன வா, வி, வ, ம, இதையெல்லாம் கலைப்பொருளாக்கி உணர்ச்சிபூர்வமா உணரவச்சா எப்படி இருக்கும் ? நல்லா தான் இருக்கும்..ஆனா..எதையும் ஆரம்பிக்க காசு வேணுமே...!

முட்டி மோதி பார்த்ததுல, சல்லிக்காசு தேறலை. எதிலேயும் சம்ப்ரதாயம் பார்க்கிற ஆங்கில சமூகம்  'வலி' டா, 'வியாதி' டா, 'சாவு' டா னு இவரு போட்ட  சத்தத்துக்கு இவரை நாடு கடத்தாதது தான் மிச்சம்.

எல்லார்க்கும் வாழ்க்கைல ஒரு முறையாவது ஒரு 'குஞ்சுமோன்' மாட்டுவார், இயக்குனர் ஷங்கருக்கு வாய்ச்சாமாதிரி, அத correctஆ பயன் படுத்திக்கணும்.

1991ல நம்ம ஆளுக்கும் Charlesனு ஒருத்தர் மாட்டினார். அவரு கிட்ட அடிச்ச காசை எடுத்துக்கிட்டு உடனே இவரு போய் பார்த்தது ஒரு ஆஸ்திரேலிய மீனவரை.

சில மாசங்களுக்கு பிறகு, Charles, Londonல நடத்துன 'young British Artists Show'ல இவரு வெச்ச ஒரு காட்சிப்பொருள் உடனே தீயா பத்திக்கிச்சு.

Showக்கு வந்த மொத்த கூட்டமும் இங்க தான் மொய்க்குது.

'யென்னாயா இது? ன்னு கேட்டதுக்கு சிரிச்சிகிட்டே Damien  சொன்னாரு:

'The Physical Impossibility of Death in the Mind of Someone Living'

அது ஒரு 14அடி நீள கண்ணாடி பெட்டி. பெட்டிக்குள்ள முழுசா வாயை திறந்துகிட்டு ஒரு நிஜ சுறா மெதக்குது. சத்தியமா அதுக்கு உயிர் இல்ல, பொம்மையுமில்ல. சிலிகானும் எஃகும் கலந்து அருமையா பாடம் பண்ணி வெச்ச ஒரு செத்த மீன். வாய் வழியா பார்த்தா, வால் முனை வரைக்கும் தெரியற மாதிரி அமைப்பு. கடுமையான உழைப்போட கொஞ்சம் கற்பனையும் கலந்து செஞ்ச கலவை.

இதுவரைக்கும், டைனோசரையே தத்ரூபமா சிலையா வடிச்சு வெச்சா கூட, இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாம்னு 'review comment' போட்டுட்டு போய்கிட்டே இருந்த சமூகம்,  உயிரில்லாத ஆனா உண்மையான உடம்ப பார்த்து மெர்சலானது.



இதுக்கப்புறம், கண்ணாடி பெட்டில இந்த ஆளு வெச்ச எல்லாமே அதிரி புதிரி ஹிட்டு. எல்லாமே உயிரோட வாழ்ந்த, வாழ போராடின...உயிர் இல்லாத உண்மையான ஜீவராசிகள்..ஆனா அதுல ஜீவன் இருந்துச்சு...அதோட வலி அந்த பெட்டிக்குள்ள மிச்சம் இருந்துச்சு...!

'Formaldehyde'ங்கற ஒரு திரவக்கலவை நிரம்பின அந்த கண்ணாடி பெட்டிக்குள்ள, முகத்துல இருக்குற சுருக்கம், சின்ன சின்ன முடி கூட மாறாம இவரு பாடம் பண்ற விதம் தான் 'Secret of his Success' னு சொல்லலாம்.


அஞ்சே வருஷத்துல, இவரோட படைப்புகள் எல்லாம் தெறி ஹிட்டாக, 1995ல டர்னர் விருது தேடி வந்துச்சு . இந்த விருது சினிமாக்கு ஆஸ்க்கார் எப்படியோ, பத்திரிக்கைகளுக்கு புலிட்ஸர் விருது எப்படியோ அப்புடி. '

தொழில்' தொடங்கி அஞ்சே வருஷத்துல டர்னர் விருது வாங்கிறதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனா நம்ம ஆளு அசால்ட்டா வாங்கினாரு .

இதுக்கு அப்புறம் இவரோட சாமான் இல்லாத மியூசியமோ, கண்காட்சியோ உலகத்துல எங்கயும் இல்லன்னு சொல்ற அளவுக்கு அவ்வளவு பிரபலமாயிட்டாரு.

சரி...பிரபலமெல்லாம் ஆகியாச்சு...ஆனா முக்கியமான விஷயம்..அதாங்க காசு..கொஞ்சம் நஞ்சம் இல்ல..20,000 கோடி..அதெப்புடி வந்துச்சு?

அங்க தான் இதுவரைக்கும் வெளியே வராத Damien  என்கிற வியாபாரி வெளிச்சத்துக்கு வராரு...!

'உன்னோட மியூசியதுல  என் பொருள வச்சிக்கோ..ஒரு பிரச்சனையும் இல்ல..உங்க மியூசியதோட 'Entry Fees' என்ன? 10 யூரோவா..சரி, என் பொருள வெச்சா 15யூரோ, மிச்சம் 5 யூரோ எனக்கு...!'

'எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க..அடுத்து நான் செய்யப்போறது, எந்த கண்காட்சிலயும் வெக்கறதுக்கு முன்னாடி உங்க வீட்ல இருக்கணுமா..இப்பவே ஏலம் எடுக்கலாம்.. of course, யாரு அதிகமா ஏலம் எடுக்கறாங்களோ அவங்களுக்கு இது சொந்தம்...!

பத்தாததுக்கு, அவரோட சொந்த கண்காட்சில இருந்த பொருள்கள் எல்லாத்தையும் 2008ல ஏலம் விட்டாரு...பாருங்க..அங்க தான் நின்னு ஜெயிச்சாரு நம்ம ஆளு...! செம்ம விற்பனை...! 'Natural History Museum' னு  பேர போட்டுக்கிட்டு உலகம் பூரா சம்பாதிச்சுக்கிட்டு இருந்த அத்தனை பேரும் இவரோட itemகள வாங்கி குவிச்சிட்டாங்க....!

அதென்ன..செத்துப்போன உயிரினங்களை பாடம் பண்ணி வெச்சா போதுமா..எல்லாரும் கிறங்கி மயங்கிப்போய் கோடிக்கணக்கா கொட்டிக்கொடுத்து வாங்கிடுவாங்களா அப்புடின்னு நீங்க நெனச்சா..ஐயோ..ஐயோ...!

நம்மளால யோசிக்கக் கூட முடியாத பல படைப்புகள் இவரால செய்ய முடிஞ்சுது..ஒண்ணே ஒண்ணு மட்டும் பார்ப்போம்...!

2007ல நம்ம ஆளு வெச்சு செஞ்ச 'அந்நியன்' தான் கடவுளின் காதல் (Love of God). அப்பாடி ஒரு வழியா பதிவோட தலைப்புக்கு வந்தாச்சு...!

பேரு, புகழ், பணம், எல்லாம் வந்தாச்சு..அடுத்தது என்ன? (for the love of god, what you are going to do next) என்று அம்மா கேட்க, அம்மா கேட்ட அந்த கடவுளின் காதல் என்கிற சமாச்சாரத்தை வச்சு மறுபடியும் மொதலேர்ந்து ஆரம்பிச்சாரு Damien.

தேடி தேடி அலைஞ்சப்ப, பழம்பொருள் விற்பனை நிலையத்துல ரொம்ப சல்லிசா அவருக்கு கிடைச்சது..ஒரு மண்டைஓடு...!

தடயவியல் ஆய்வுக்கு அப்புறம், அது 1720-1810 வருடத்திற்கிடைப்பட்ட, 35 வயதே நிரம்பிய ஒரு ஆண்மகனின் வாழ்க்கையின் எச்சம்னு தெரிஞ்சுது...!

300 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்து செத்துப்போன பேர் தெரியாத அந்த மனிதனுக்கு உயிர் கொடுக்க முடிவு செஞ்சாரு Damien ...சும்மா இல்ல, முழுக்க முழுக்க வைரத்தால...அத்தனையும் 18 காரட் வெள்ளி வைரம்..மொத்தமா 1106 வைரம்.அதுல ஒண்ணு நடு நாயகமா..ரொம்ப பெரிசா...!

பெல்ஜியம் வைரம், அந்த வைரத்தை பதிக்க, மண்டையோடு மேல பூச பிளாட்டினம்.(தங்கத்தை விட costly), இன்னும் சில கருவிகள்னு, ரொம்ப high budget..! ஆனா result  என்னவோ சூப்பர் ஹிட்.

ரெண்டே மாசத்துல, அந்த எதுக்கும் உதவாத மண்டைஓடு இப்படி ஆகிப்போச்சு...!



எல்லாம் முடிஞ்சு, காட்சிக்கு வந்தபோது, அந்த மண்டைஓட்டின் மதிப்பு, உலக சந்தையில் $100 மில்லியன் (675 கோடி ரூபாய்).

(2008இல், Amsterdam Rijksmuseumஇல், நேரில் பார்த்த போது, எனக்கு கண்ணிமைக்க நெடு நேரம் ஆனது)

அப்படி தொடங்கி பெருகியது தான் Damien Hirst என்கிற நம்ம ஆளோட வங்கி கணக்கு..இப்ப கிட்டத்தட்ட 25,000 கோடி கிட்ட வந்து நிக்குது....!

ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, னு  இவரோட படைப்புகள், சொல்லி சொல்லி கில்லி அடிக்குது...! அண்ணன் கணக்குல கரன்சி ஏறிகிட்டே இருக்கு...!

2016ல, 51 வயசுல ஐயா சந்தோஷமா ஓய்வெடுத்துகிட்டு இருக்காரு..அமெரிக்க காதலியோட..!

தன்னோட கலைப்படைப்புகள வெச்சு ஒரு கல்வி மன்றம் ஆரம்பிச்சு, நெறைய Damien Hirst ங்கள உருவாக்கி கிட்டு இருக்காரு...!

மேற்கொண்டு இணையத்துல தேடுனா, இவர பத்தி நெறய தெரிஞ்சுப்பீங்க..!

இவ்வளவு நீளமா இவரோட வெற்றி கதைய சொன்னதுக்கு ஒரே காரணம் தாங்க.....கொஞ்சம் மாத்தி யோசிச்சா..உலகம்..உங்கள வரவேற்கும்..காசு கொடுத்து..கௌரவிக்கும்....!

தனித்திறமைங்கறது, எல்லார்கிட்டயும் இருக்கு..அதை வெளிக்கொண்டு வர்றதுல தான் இருக்கு ஒரு மனுஷனோட வெற்றியும் தோல்வியும்....!
********************************************************************************

இது, ஏற்கனவே பதிவிட்ட ஏ.க.போ.ல மூணாவது தலைப்பா வந்திருக்க வேண்டியது..! கொஞ்சம் நீளமா போய்ட்டதால தனிப்பதிவா போட வேண்டியதாயிடுச்சு..!  தொடர்ந்து, உங்கள் நல்லாதரவை நல்கும்.....!


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

எல்லாம் கடந்து போகும்...!

என்னய்யா இந்த கபாலிக்கு வந்த சோதனை ...!

ரெண்டே நாள்ள தீர்ப்பு வந்திருச்சுருச்சு...! 16.5 லட்சம் வழக்குகள் நிலுவைல இருக்கு..ஆனா காபலிக்காக மட்டும் ஏன் சட்டத்துறை இவ்வளவு வேகமா செயல்பட்டுச்சுன்னு, நீதிமன்றத்தையே கேள்வி கேக்கறாங்க ஒரு க்ரூப்பு.

எனக்கென்னவோ கொஞ்சம் யோசிச்சு பாத்தா...சாட்சிகளை விசாரிச்சு, ஆதாரங்களை அலசி ஆராய்ஞ்சு தீர்ப்பு கொடுக்கவேண்டிய வழக்குகளோட, இந்த கபாலி வழக்கை சேத்துப் பார்க்கறது சரியா படலை...!

225 இணைய தளங்களை முடக்குங்கனு நீதிபதி சாட்டையை சுழற்றி இருக்காரு. நல்ல தீர்ப்பு ரெண்டு நாள்ள வந்தா என்ன ? ரெண்டு வருஷம் கழிச்சு வந்தா என்ன? 

ஆனா, இந்த தீர்ப்பால ஏதாவது உள்ளபடியே பயன் இருக்கான்னு பார்த்தா சந்தேகமா தான் இருக்கு. 120 ரூபாய்க்கு மேல தியேட்டர்ல ticket விலை இருக்கக்கூடாதுன்னு ஏற்கனவே ஒரு தீர்ப்பு இருக்கே.. அதுக்கே ஒரு பலனும் இல்ல..புதுசா வந்த தீர்ப்புக்கு மட்டும்....???

IP Addressஐ மாத்தறதெல்லாம் அதர  பழசு. இலவசமாவே VPNகள் கொட்டிக் கெடக்கிற இன்றைய இணையத்தளத்துல...முடக்கமாவது ஒண்ணாவது போங்க boss ...!

அதே நேரத்துல, கபாலிக்கு ஆப்பு வெச்சே தீருவோம்னு இன்னொரு குரூப்பு, FDFS - அதாங்க  First Day First Show இணையத்துல வெளியிட்டே தீருவோம்னு சவால் விட்ருக்காங்களாம் ...! 

என்னய்யா இந்த கபாலிக்கு வந்த சோதனை ...?

எ.க.போ Special: இங்க (Germany) மட்டும் 20 தியேட்டர்ல கபாலி release ஆகப்போகுது. 22ஆம் தேதி night show ticket விலை €20-25, கிட்டத்தட்ட 1500 ரூபாய். 

ஒரு showக்கு 100 ticketனு பார்த்தா கூட, வெள்ளிக்கிழமை single show collection மட்டும் 30 லட்ச ரூபாய். இதுல தெலுங்கு release தனி. 

கபாலி collection  இப்பவே கண்ண கட்டுதே...!

*********************************************************************************

வத்தி வெச்சிட்டியே பரட்டை....!

AMCA..அதாகப்பட்டது... American Mosquito Control Association, அமெரிக்காவோட கொசு ஒழிப்பு வாரியம், நெறைய ஆராச்சியெல்லாம் செஞ்சு, 5 வருஷத்துல அமெரிக்கர்களை கடிக்கிற கொசுவோட எண்ணிக்கையை 3% கொறச்சிட்டாங்க. மின்னணு கருவிகள் மூலமாவும், சுற்றுச்சூழலை சுகாதாரமா வச்சிக்கிட்டு மக்கள் கொடுத்த ஆதரவினாலும் தான் இதை சாதிக்க முடிஞ்சுதுன்னு சொல்லி இருக்காங்க .

அவங்க செஞ்ச மொத விஷயமே, இந்த கொசுவத்தி சுருள்களை தடை செஞ்சது தான். கண்ணுக்கு தெரிஞ்சோ தெரியாமையோ புகை விடும் எந்தப்பொருளும் கொசுவை நிரந்தரமா அழிக்க பயன்படாது. மாறாக, கொசுக்கள் அதோட சேர்ந்து வாழ பழகிடும், ஆனா அந்தப்புகையால மக்களுக்கு தான் வியாதி பரவும்கிறது அவங்க கணக்கு.
அமெரிக்க அரசாங்கமும் தடை பண்ணிடுச்சு. நம்ம ஊர்ல ஏன் இன்னும் தடை வரலைன்னு கேக்கறீங்களா? அட போங்க..!

சென்னைல மட்டும் கொசுவத்தி சுருள்களின் ஒரு நாள் விற்பனை தோராயமா மூன்று கோடி ரூபாய். தமிழ்நாடு முழுக்க, இந்தியா முழுக்க என்ன வருமானம் வரும்னு யோசிச்சுப்பாருங்க. தங்க முட்டை போடற வாத்தை யாராவது கொல்லுவாங்களா?

*********************************************************************************


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

ரஜினிகாந்த் எனும் மாய நதி...! (ஒரு உளவியல் பார்வை)

மஹாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து, திரைப்பிழைப்பு தேடி தமிழகம் வந்த 'சிவாஜி ராவ் கெய்க்வாட்'க்கு இப்பொழுது 65 வயது என்பதும், அவர் பேரன் பேத்திகள் கண்ட குடும்பஸ்தர் என்பதும், முடி கொட்டி நரை தட்டிப்போன ஒரு முதியவர் என்பதும், இன்ன பிற என்பதுமான நிதர்சனங்கள் எல்லாம் ஏனோ பெரும்பாலும் கண்டு கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு, தமிழ் சார்ந்த நல்லுலகத்தால் 'ரஜினிகாந்த்' என்கிற பிம்பம் மட்டும் முன் நிறுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.....!

ஊடகங்கள், 'மாபெரும் கலைஞன்' என்று போற்றிப்பேசினாலும், 'வெற்றுக் கூத்தாடி' என்று தூற்றிப்பேசினாலும், நிதர்சனத்தை மாற்றிப்பேசினாலும், எதற்கும் அசராமல் நீண்டகாலமாக நிலைத்திருக்கிறது அந்த பிம்பம்....மக்கள் மனதில்....!

அந்த பிம்பத்திற்கு உச்சத்தில் ஒரு இடம் கொடுத்து உட்காரவைத்திருக்கிறது தமிழகம்...! இது உளவியல் ரீதியான அங்கீகாரத்தின் விளைவால் கொடுக்கப்பட்ட இடம்..! மேதைகளுக்கும், சிந்தனையாளர்களுக்கும் கூட கொடுக்கப்படாத இடம்...! இன்னும் சொல்லபோனால் சினிமா, பொழுதுபோக்கு, நடிப்பு, இவற்றுக்கெல்லாம் கூட அப்பாற்பட்ட ஒரு இடம்...!
கூகுளில் 'Rajinikanth' என்று தேடினால், கிடைக்கும் 1.8 கோடிக்கு அதிகமான தேடல் முடிவுகள், வேறு எந்த இந்திய திரை பிரபலத்துக்கும்  இது வரை கிடைக்கவே இல்லை..! 
இடம் கொடுக்கப்பட்டு விட்டது...! கொடுத்தது ஏற்றுக்கொள்ளப்பட்டும் விட்டது...! இந்த கொடுத்தலுக்கும், ஏற்றலுக்கும் இடையிலான பந்தம் / பிணைப்பு என்பது ரஜினிகாந்த் என்ற நடிகன் விரும்பி வாங்கிய வரம்...அதுவே ரஜினிகாந்த் என்ற மனிதன் விரும்பாமல் பெற்ற சாபம்...!

உச்சத்தில் ஒரு இடம் என்பது, காரணமில்லாமல் கொடுக்கப்படவில்லை. காரணமும் மிக எளிதான ஒன்று தான்.

திரையில் அவன் அப்பாவி, நல்லவன், கருப்பு நிற காவலன்,. அருமையான காதலன், அநீதி கண்டு பொங்கி எழுபவன். வாரி வழங்கும் வள்ளல், அதர்மத்தை அழிப்பவன்..எப்பொழுதும் வெல்பவன்...! ஆகவே தமிழன் தனித்தனியாய் காணும் கனவுகளின் மொத்தத்தொகுப்பு அவன்..!

நிஜஉருவில், அவன் எளிமையானவன், பக்தியுள்ளவன், பகுத்தறிவு பேசாதவன், மிக மிக நல்லவனாய் காட்டிக்கொள்பவன்...!  ஆகவே மொத்தத்தமிழனின் முழு உருவமாய் நிற்பவன்...!

உள்ளேயும், புறத்தேயும் முற்றுமாய் ஒத்துப்போனதால் தமிழகம் தானே விரும்பி கொடுத்தது தான்..இந்த வரமும் சாபமும்...!

ஏழாவது வயதில் எனக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால் இதுதான்.

நீ இந்த sideஆ அந்த sideஆ ? ரஜினியா கமலா ?

நண்பன் ஒருவன் சொன்னான்: 'கண்ண மூடு..யோசி..எந்த உருவம் உன் மனசுல தெரியுதோ நீ அந்த side.

கண்ணை மூடி நான் கண்ட உருவம் கருப்பாக இருந்தது...! என்னைப்போலவே...!
ரஜினிகாந்த் என்ற ப்ரதிமை (Icon) உருவான விதத்தை மூன்று பரிமாணங்களாக அணுகலாம். மூன்றுமே சமூக மானுடவியல் அடிப்படையில் முக்கியமானவை. முதல் பரிணாமம்: ரஜினி தன்னளவில் செய்த பங்களிப்பு. இரண்டாவது: மக்கள் ஆதரவு மற்றும் ரசிக மனோபாவங்களின் இயக்கம். மூன்றாவது: வணிக ஊடகங்களின் பிம்ப உருவகத்தேவை மற்றும் ஆற்றல். இவை மூன்றும் இணைந்ததாலேயே ரஜினிகாந்த் என்ற ப்ரதிமை சாத்தியமாயிற்று.
காலத்தை வென்றவன் - இந்தியா ட்டுடே   
எனக்கு ரஜினிகாந்த் என்ற பிம்பம் பெருந்திரையில் அறிமுகமானது 'தளபதி' படத்தின்போது. அந்த மாயத்தோற்றம் என்னுள் இறங்கி செய்த வித்தைகள் ஏராளம்...! எனக்கு மட்டுமே அந்த மாயம் நிகழ்ந்தது என்று நினைக்க நான் ஒன்றும் முட்டாளில்லை. ஏனெனில் அந்த மாயத்தோற்றம் தளபதிக்கு முன்னும் பின்னுமாக, கோடிக்கணக்கான மனங்களில் ஊடுருவி வித்தைகள் செய்து கொண்டுதான் இருக்கிறதெம்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

அந்த உளவியல் வித்தை ஒரு தொடர் சங்கிலி....! அது ஒரு விதமான போதை...! போதையேறியவன், புதிதாய் வருபவனுக்கு  கற்றுக்கொடுத்தே தீருவான்....! இது உலக நியதி...!

Cricket விளையாட்டின் இடையே கொஞ்சம் ஓய்வு எடுத்த போது தம்பி ஒருவன் என்னிடம் வந்தான்.

'என்னாண்ணே சும்மா சும்மா ரஜினி பேர பெனாத்திக்கினே  இருக்கிற...! அப்டி என்னா அந்தாளு பெரிய சூப்பர் ஸ்டார்' ?

தம்பி...நீ படையப்பா படத்த தியேட்டர்ல போய் பார்த்தியா ?

எங்கணே...காசு கேட்டாலே அப்பா உதைக்கிறாரு...!

சரி வா.................நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்..படம் பார்த்துட்டு சொல்லு...அவரு சூப்பர் ஸ்டாரா இல்லையான்னு...!

'டோய்..அண்ணன் நம்மள நாளைக்கு படையப்பா கூட்டிட்டு போறாறாம்லே...!

ஒண்ணே ஒண்ணு  என்று நான் நினைத்தது பல்கி பெருகினாலும், சளைக்காது அத்தனை பேரையும் கூட்டிபோனேன்.

படம் முடிந்து அவன் சொன்னான்...!

'ஒத்துக்கறேண்ணே, இந்தாளு அப்புடியே நம்மள முழுங்கறார்ணே ..கைல காசு மட்டும் இருந்தா உங்கள மாதிரியே நானும் பத்து பேரையாவது படம் பாக்க கூட்டியாருவேன்ணே..! தலைவன்ணே, தெய்வம்ணே...!

திருப்தியோடு அவனை வாழ்த்தி வழி அனுப்பிவைத்தேன்.   எனக்கொருவன் கிடைத்தது போல் அவனுக்கு நான். இப்படி எத்தனையோ...!

இந்த தொடர் சங்கிலியின் முற்றுப்பெறாத எழுச்சி தான் மேலே சொன்ன அந்த இடம்...ரஜினி என்ற பிம்பத்திற்கு கொடுக்கப்பட்ட இடம்...! A default parallel execution...!

Style என்கிற  வார்த்தைக்கு ஆங்கில அகராதியில் வேறு பொருள். தமிழ் அகராதியில் வேறு பொருள். ஆங்கில வாசனையே தெரியாத தமிழ் சமூகத்திற்கும் இந்த வார்த்தை தெரியும் அதன் அர்த்தமும் புரியும். 

இரண்டு முறை இந்தத்தொடர் சங்கிலி சற்றே விடுபட்டுப் போனதுண்டு..!

ஒன்று ' பாபா ' இன்னொன்று 'லிங்கா' (குசேலன் & கோச்சடையானை பொதுவார்ந்த தமிழ் சமூகம் ரஜினி படமாக ஏற்கவில்லை)

மக்களுக்குப் பிடித்தவற்றை செய்து காட்டியதால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார். இதை விடுத்து, தனக்கு என்ன பிடிக்குமோ அதை மக்களிடம் திணிக்க முயன்று தோற்றது தான் பாபா.

லிங்கா ?

லிங்கா அக்மார்க் ரஜினி படம் தான். சொல்லப்போனால் வெற்றிப்படமும் கூட..! (காசுக்காக சில சிங்காரவேலர்கள் கூவியதை நாம் பொருட்படுத்த தேவையில்லை)

ஆனால், என்னைப்பொறுத்த வரை, ரஜினியைப் பொறுத்தவரை அது தோல்விப்படம் தான்...! நேற்றைய, இன்றைய, ரசிகனுக்கு விருந்தாக இல்லாமல் போனாலும், ஓரளவு பசியாற்றிய 'லிங்கா', நாளைய ரசிகனுக்கு எட்டிக்காயாய் கசந்து துப்ப வைத்தது...!

'படையப்பா' பார்த்துவிட்டு என்னால் ரஜினி ரசிகனான ஒருவனின் தொடர்ச்சி ரசிகன், தன் இளைய கூட்டத்திற்கு 'லிங்காவை' காட்டி தோற்றுப்போனான்...! வாழ்த்தி வழி அனுப்ப வேண்டியவன், வசை வாங்கி ஒடுங்கிபோனான்...!

ஆனால், சங்கிலி விடுபட்டுபோனதே தவிர அறுபட்டுபோகவில்லை..! ரஜினி என்கிற அந்த பிம்பம் அறுபட்டுப்போகவும் விடாது...! விடுபட்டதை கூட உடனே ஒட்டிவிடும்...!

ரஜினி என்கிற குதிரை, விழுந்தவுடன் சோர்ந்து போகாது, சட்டென்று எழுந்து சந்திரமுகியாக பெருக்கெடுத்து ஓடிக்காட்டியது வரலாறு. கிழ குதிரையானாலும் இன்றும் அதனால் சட்டென்று எழுந்து ஓடமுடியும்..! ஓடவேண்டும்...!

M.G.R. என்ற பிம்பம் தமிழ் சமூகத்தின் மீது கொண்டிருந்த ஆளுமை என்பது ரஜினியால் கூட கைப்பெற முடியாத ஒன்று. அதேபோல் ரஜினி என்ற பிம்பம் தமிழ் சமூகத்தின் மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கிற தாக்கம் என்பது இனி வேறு எவராலும் கைப்பெற முடியாத ஒன்று...!

பள்ளி, கல்லூரிக்காலங்களின் கிளர்ச்சியில், விசிலடித்து, கைத்தட்டி கொண்டாடியதெல்லாம் இப்போது நகைப்பை கொடுத்தாலும், காலம் கொடுத்த முதிர்ச்சி, ரஜினி என்ற பெயரை கேட்டவுடனேயே என்னை அடிக்கடி ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்குகிறது...!

நிச்சயம் 'ரஜினிகாந்த்' ஒரு மாய நதி...!

எங்கு தொடங்கியது, எங்கு முடியும் என்றெல்லாம் தெரியாமல், பூப்பாதையிலும் போக முடியாமல், சிங்கபாதையில் மட்டுமே பயணிக்கும் மாய நதி...!

கண்மூடினால் மட்டுமே காணப்பெறும் இந்த நதியில் மூழ்கி நனைந்து போக காத்துக்கிடக்கிறது தமிழ் சமூகம். அந்த கற்பனை குளியலிலேயே  குற்றாலத்தின் குளிர்ச்சியையும் காண்கிறது....!

உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு, ஒரு கூட்டம் அந்த நதியில் சாமி கும்பிடுவது தான் சகிக்க முடியவில்லையே தவிர, நதி தூய்மையாய் தான் இருக்கிறது....!

மூன்று தலைமுறைகளாய் ரஜினி என்ற இந்த மாய நதியில் அவ்வப்பொழுது நடைபெறும் மகாமகம் இன்னொரு முறை நிகழவிருக்கிறது, கபாலி என்ற பெயரில்.

வீழ்ந்து கிடக்கும் குதிரை எழுந்தாகவேண்டும். சென்ற முறை போல் இது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல. இந்த முறை ஏற்படப்போகும் எழுச்சி என்பது ரஜினிக்கு மட்டுமல்ல, அவருடைய ரசிகர்களுக்கும் முக்கியமானது. ஏனெனில், எழுச்சியில் கொஞ்சம் சுணங்கினாலும் கொத்திகுதற சில வல்லூறுகள் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன.

கே.வி.ஆனந்திடம் முதலில் பேசி, பிறகு கௌதம் மேனனிடம் கதை கேட்டு, முடிவில் யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழ் திரையுலகின் பாலகனான ரஞ்சித்தின் கரம் பற்றியிருக்கிறது இந்த கபாலி குதிரை...எழுவதற்கு.

உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்தாலும், 40 வருட திரை அனுபவம் நம்பிக்கை அளிக்கவே செய்கிறது, இந்தக்குதிரை எழுந்து ஓடுமென்று.

மாய நதி தான்.....கற்பனை தான்....! ஆனாலும்..ஏனோ மனம் இன்னும் அந்த நதிக்கரையை விட்டு நீங்க மறுக்கிறது...! அதிசயமாய் இந்த நதியில் மட்டும் அலைகள்....! பாய்ந்து வரும் அலைகள், கால்களை நனைக்க, உச்சி வரை குதூகலிக்கிறது...! 'ஓ' வென உரக்க கத்த வேண்டும்போல் இருக்கிறது...!

எல்லா நதிகளின் விதியைப் போல, இந்த நதியும் கடலை நோக்கித்தான் பயணிக்கும். விரைவில் கடலில் கலந்து காணாமல் போகக்கூடும்...! அதுவரைக்குமாவது நனைந்து கொண்டிரு மனமே....!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

எழுத்தால் மாயம் புரிந்த வித்தகர்கள்...2


இந்தியாவில் பிறந்து, இந்திய சூழலில் வளர்ந்து, திடுமென லண்டனுக்கு வந்துவிட்ட ஒரு சிறுவனின் மனநிலை எப்படி இருக்கும் ? எரிக் (Eric)க்கு முதலில் ஒன்றும் புரியவில்லை....!

ஒரு பிரிட்டிஷ் அரசாங்க ஊழியரின் மகனான தனக்கு இந்தியாவில் கிடைத்த மரியாதை இங்கு ஏன் கிடைக்கவில்லை ?  

அங்கு தான் பார்த்த ஏழை மக்களைப்போல் இங்கே பார்க்க முடியவில்லையே ஏன் ?

எல்லோரும் ஏன் யந்திரங்களை போல ஒரு கட்டுப்பட்ட  வாழ்க்கை வாழ்கிறார்கள் ? 

ஏன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன்னைப் பற்றியும் தங்களது பரம்பரை பற்றியும் இப்படி பீற்றிக்கொள்கிறார்கள் ?

ஏன்..ஏன்..ஏன்...ஐய்யோ.... கடவுளே...!

முற்றிலும் மாறுபட்ட இரு வேறு சூழலை அவன் மனம் ஏற்கவில்லை..உடலும் மனமும் சோர்ந்து போயிற்று....!

அவன் தன்னை தனிமை படுத்திக்கொண்டான்..!

தனக்குள்ளே கற்பனைகளை, கதைகளை, அதன் காட்சிகளை உருவாக்கி கொண்டான்..!

கதை மாந்தர்களோடு பேசத்  தொடங்கினான்..! 

பிறகு...எழுத தொடங்கினான்...!

1914இல், அவன் எழுதிய கவிதை உள்ளூர் செய்தித்தாளில் வெளி வந்த போது அவனுக்கு வயது 11. முதல் அங்கீகாரம்...!

1922இல் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி சேர காசு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பொழுது அவன் கண்களில் பட்டது அந்த விளம்பரம்..! 

'வாருங்கள்..இளைஞர்களே..! இந்தியா இம்பீரியல் போலீஸ் படை உங்களை வரவேற்கிறது..! நல்ல உணவு, தங்க இடம்..குறைந்த நேர வேலை..நல்ல ஊதியம்..!'

விட்ட குறையோ, தோட்ட குறையோ..இந்தியா என்ற பெயர் அவனை சுண்டி இழுக்க..உடனே சேர்ந்து விட்டான்...! ஆனால் அவர்கள் அவனை தரை இறக்கி விட்ட இடம் பர்மா...! 

5 வருட போராட்ட வாழ்விற்குப் பிறகு 'இனி பொறுப்பதில்லை' என வேலையை உதறி விட்டு லண்டன் திரும்பிய போது, எழுதும் உத்வேகம் மட்டும் அவனுக்குள்..மன்னிக்கவும்..அவருக்குள் தீயாய் எரிந்து கொண்டிருந்தது...!

என்ன எழுதுவது..? 

அந்த சமயத்தில் வெளி வந்து கொண்டிருந்தவை எல்லாம் பெரும்பாலும் ஆங்கில அரசுமுறை பற்றியோ, ஆங்கில நாகரீகம் பற்றியோ, போர் மற்றும் வாழ்வு முறை பற்றியோ தான் சொல்லிக் கொண்டிருந்தன...! 

ஆகவே..எரிக் எழுதுபொருளாக எடுத்துக் கொண்டது.......ஏழ்மை மற்றும் வறுமை....அது கொடுக்கும் வலி ....!

1933இல் அவர் எழுதிய முதல் நாவல் புத்தக வடிவில் வெளி வந்தது...! 

மற்ற புத்தகளைப் போல் இதுவும் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களின் வாழ்க்கை முறையை தான் விளக்கி சொன்னது...! ஆனால்...அரசபரம்பரை சார்ந்தவர்களை பற்றியோ..கோமகன்களைப் பற்றியோ அல்ல...!

லண்டனிலும்..பாரிஸிலும்...கையில் காசு இல்லாமல் பிழைப்பு தேடும் பரதேசிகளின் நிரந்தரமில்லாத இருப்பைப் பற்றி (transient existence) பொட்டில் அடித்தாற்போல் சொன்னது அந்தப் புத்தகம் ...! 

குறிப்பாக, அரசர்களும் முதலாளிகளும், உழைப்பை மட்டும் உறிஞ்சி விட்டு, வெளி உலகத்திற்கு காட்டாமல் யாரை மறைத்து வைத்திருந்தார்களோ அந்த குடிமக்களைப் பற்றி...!

எரிக்கிற்கு தெரியும்..! கோமகன்களை காறி உமிழும் இந்தக் கதைக்கு தன் குடும்பத்திற்குள்ளேயே எதிர்ப்பு வரும் என்று...! ஆகவே புனைப்பெயரில் புத்தகத்தை வெளியிட்டார்...!

இது தான் 'எரிக் ஆர்த்தூர் பிளேர் (Eric Arthur Blair)', என்ற மனிதர் 'ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)' ஆன கதை. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் புத்தகமாக கருதப்படும் அந்தப் புத்தகத்தின் பெயர் 'Down and Out in Paris and London, published in 1933'

                                                     9. George Orwell (A.D 1903 - 1950)

'ஆர்வெல்'லுக்கு, முதல் புத்தக வெளியீட்டிலேயே நல்ல தொடக்கமும் வாசக வட்டமும் உருவாகி இருந்தது.

கொஞ்சமும் தாமதிக்காமல் அடுத்த ஆண்டே அவரது இரண்டாம் புத்தகமும் வெளிவந்தது. 'Burmese Days (பர்மாவில் சில நாட்கள்) ' என்ற அந்த புத்தகம் பர்மாவிலும் இந்தியாவிலும் நடந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கறுப்புப் பக்கங்களை கிழித்துக் காட்டியது.

உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு நம்மையே குற்றம் சொல்லும் 'ஆர்வெல்' என்னும் தலைவலியை எப்படி சமாளிப்பது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் மண்டை காய, புத்தகமோ மக்களிடையே பரப்பப்பப்பாக விற்பனை ஆனது.

அதற்கு பிறகு இவர் ஏன் ஸ்பெயின் (Spain) போனார் ?  எதற்கு உள்நாட்டு போரில் பங்கு கொண்டார் ? ஏன் ஸ்பெயின் அரசாங்கத்தால் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு லண்டனுக்கே  விரட்டி அடிக்கப்பட்டார்  என்பதெல்லாம் நமக்கு வேண்டாத விஷயம். ஆனால் போரில் அவர் கழுத்திலும் தோளிலும் கடுமையாய் தாக்கப்பட்டார்.  அதன் காரணமாக நீண்ட நெடிய புத்தகங்களை அவரால் எழுத முடியாமல் போயிற்று.

சிறுகதைகளும், கட்டுரைகளும், விவாத விளக்கங்களும் தான் அவரால் எழுத முடிந்தது.  BBC இல் பணியாற்றி விட்டு, ஒரு சோஷலிச செய்தித்தாளுக்கு ஆசிரியர் ஆன போது அவர் உடல்நிலை மிக மோசமாகி  இருந்தது.

தனது இறுதி நாட்கள் நெருங்குவது அவருக்கு தெரிந்தே இருந்தது. சாவின் வலியை விட தான் இன்னும் பெரிதாய் சாதிக்கவில்லை என்ற வலியே அவரிடம் மிஞ்சி இருந்தது.

1943இல் , தன்னுடைய 40ஆவது வயதில், தான் பார்த்துக்கொண்டு இருந்த அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு, எழுதுவதையே முழு நேர தொழிலாய்  கொண்டார்.

2 வருட உழைப்பில், அதுவும் வியாதிகளின் கடுமையான தாக்கத்தின் இடையில் ஆர்வெல் வெளியிட்ட அந்த புத்தகம் தான் உலகப்புகழ் பெற்ற 'Animal Farm' (விலங்குப் பண்ணை ) published in 1945.

சோவியத் யூனியனின் (இன்றைய ரஷ்யா ) சித்தாந்தத்தை கிண்டலடித்து வெளி வந்த அந்தப் புத்தகத்தின் முக்கிய பாத்திரங்கள் பண்ணையில் உள்ள இரண்டு பன்றிகள்.  ஒன்று ' ஜோஸப்  ஸ்டாலினையும்  (Josef Stalin)', இன்னொன்று 'லியோன் ட்ரொஸ்கியையும் (Leon Trotsky)' பிரதிபலிப்பதாக கருதப்பட்டது.

1945ஆம் வருடத்தில் தான் ஸ்டாலின், நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். 'ட்ரொஸ்கி' ஸ்டாலினை விட்டு பிரிந்து போய், அவரை கடுமையாய் தாக்கிக் கொண்டிருந்தார். கம்யூனிசமும் மார்க்சிஸமும்  மிக தீவிரமாக விவாதிக்கப்படட்டு கொண்டிருந்த நேரத்தில் தான்..அந்த இரண்டு பன்றிகளும் இவ்விரு தத்துவங்களையும் துவைத்துக் காயப்போட்டன அந்தப் புத்தகத்தில்.

மாற்றத்துக்கான சித்தாந்தங்கள் என்று விவாதிக்கப்பட விஷயங்களை விலங்குப் பண்ணையோடு ஒப்பிட்டு ஆர்வெல் செய்த நையாண்டி, அவருக்கு உலகபுகழையும், செல்வத்தையும் தேடிக் கொடுத்தது.

ஆர்வெல்லின் அடுத்த குண்டு என்ன ? எதைப்பற்றி ? என்று ஐரோப்பிய சமூகம் ஆவலாய் காத்துக்கிடக்க ஆரம்பித்தது.

' உங்களின் அடுத்த படைப்பு எதைப்பற்றி ?'

'இப்போது எதுவும் கூற முடியாது. கருப்பொருள் கிடைத்து விட்டது..அதை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்..!

எப்போது வெளியிட யோசித்திருக்கிறீர்கள் ?

நான் சாவதற்குள்...!

நாவலைப் பற்றி ஏதாவது ஒரு துப்பு கொடுங்களேன்?

'1984'.

பேட்டி  கண்டவருக்கு ஒன்றும் புரியவில்லை, அவருடைய கற்பனைக்கு எதுவோ எழுதிவிட்டு போக, என்னவென்று புரியாமல் குழம்பியது உலகம்.

1949ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் பெயர் '1984'.

'ஐரோப்பாவின் கடைசி மனிதன்' என்பது தான் முதலில் வைத்த பெயர். பின்பு '1984' என்று மாற்றி அமைக்கப்பட்டது.

1923-2005 வரை வெளிவந்த புத்தகங்களில், அதிகம் படிக்கப்பட்ட புத்தகங்களின் வரிசையில் 6ஆவது இடத்தைப் பிடித்த சிறப்புக்குரியது அந்தப் புத்தகம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பல இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டிய அந்தப் புத்தகத்தில் தான் உலகப்புகழ் பெற்ற ' THE BIG BROTHER IS WATCHING YOU' என்ற வாசகம் இடம் பெற்றது.

சொல்லப்போனால், மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அந்த நாவல் வெளிவந்தது. தனிப்பட்ட சொந்த எண்ணங்களும் வாழ்க்கையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் போனால், விளையும் விபரீதங்கள் என்னவாக இருக்கும் என்று தெளிவாக கோடிட்டு காட்டினார்  ஆர்வெல்.

உண்மைகளை ஆணித்தரமாய் சொன்னதால், அரசாங்கங்களும் விளைவுகளை புரிந்து கொண்டு, மக்களை கண்காணிக்கும் நோக்கத்தை தளர்த்தின. இது  'ஆர்வெல்' என்கிற ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

நினைத்ததை சாதித்து விட்டதாக எண்ணினாரோ என்னவோ...அடுத்த வருடமே மரணம் அவரது எழுத்துப்பணிக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது.

இன்றும் உலக வாசிப்பாளர்களை பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கும் 'ஆர்வெல்' லின்  எழுத்துகளுக்கு மட்டும் என்றுமே முற்றுப்புள்ளி இல்லை...!

படித்தே ஆகவேண்டிய 'ஆர்வெல்' லின் உலகப்புகழ் படைப்புகள்:

1. 1984
2. Animal Farm
3. Shooting an Elephant
4. Down and Out in Paris and London

முதல் இரண்டு புத்தகங்களையும் கண்டிப்பாக தவற விடாதீர்கள், உங்களிடம் வாசிப்புத்தாகம் இருந்தால்...!

இணையத்தில் தேடினால் ஆர்வெல்' லின் அனைத்துப் படைப்புகளும் கிடைக்கும் இலவசமாக....!

********************************************************************************

மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு மாயம் புரிந்த வித்தகரோடு....!

அதுவரை...!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்