2017 - ஆக்கமும் தாக்கமும்...!


வலை நட்புக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....!

நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பது நேரமும் நமது எண்ணங்களும் தான்...! தடுக்கவே முடியாத, தவிர்க்கவே முடியாத...முதுமை நோக்கிய பயணத்தின் ஊடே நாமும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம்....!

பிறந்து, உண்டு, கழித்து, வளர்ந்து, வளர்த்து, வீழ்ந்து போகும் இந்த வாழ்க்கை நாம் அறிந்ததே. நாம் விரும்பி நாட்கள் கழிவதில்லை. ஆண்டுகளும் தான். நேற்று - வரலாறு, இன்று - நிதர்சனம், நாளை- சவால், என இப்படியே போகும் இந்த பிறப்பில், நமது புரிதல்களுக்கும் கொஞ்சம் இடம் அளிப்போம்....!

வரப்போகும் ஆண்டின் சவால்களை எதிர்நோக்கும் இந்த வேளையில், கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்ப்போம், இளைப்பாறும் எண்ணத்தில்.

திரும்பிப் பார்த்து, தெரிந்து கொள்வது, தெளிந்து கொள்வது தேவை, எதிர்காலத்தை கட்டமைத்துக்கொள்ள.

2017 - ஆக்கமும் தாக்கமும் - அலசுவது தான் என் நோக்கமும் கூட. இந்த அலசலை உலகம் தழுவாமல், தேசம் தழுவாமல், நம் நாடு எனும் வட்டத்திற்குள் மட்டுமே நடத்த விரும்புகின்றேன்...! 

ஆண்டின் தொடக்கமே சோகமாய் தான் ஆரம்பித்தது நம் நாட்டிற்கு. ஜெயலலிதா என்கிற ஆளுமையை தொலைத்து விட்டு, கூட்டத்தில் தொலைந்த குழந்தை யாரை தேடுகிறோம் என்றே தெரியாமல் அழுதுகொண்டே தேடுவது போல, சோக பொங்கல் வைத்தது தமிழினம்.

அன்று தொடங்கி இன்று வைகுண்ட வாசலில் நிற்கும் வரை, பரபரத்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏகப்பட்டவை. வாருங்கள் அலசுவோம்...!

*******************************************************************************

2017 - தமிழகத்தின் தலையெழுத்தை திருப்பிப் போட்ட சம்பவம்:

1. ஜல்லிக்கட்டிற்கு தடை. பொங்கி எழுந்தது தமிழினம்.  நூற்றான்டு பழமை வாய்ந்த மெரினா, இப்படி ஒரு புரட்சிப் படையை பார்த்ததில்லை. ஜாதியும், மதமும் சரிந்து போய், இன உணர்வு பெருகி கட்டுப்படுத்த முடியாத எழுச்சியால், அதிகார வர்கத்தையே அடிபணிய வைத்த அற்புதமான சம்பவம் இது. அடித்து துரத்தப்பட்டாலும், எரித்து விலக்கப்பட்டாலும் - வெற்றி வாகை சூடியது தமிழினம்.

2. இவர் நமது முதல்வர்..! இதை இட்லி என்று சொன்னால் சட்னியே கூட நம்பாது தான். 'ஆண்டான் அடிமைக்கு' ஆகபொருந்தி, அடக்கம் பதவியுள் உய்க்கும் விதமாக இருந்த சாது, இனி பதவி இல்லை என்றானபோது, மிரண்டு போய் அம்மா சமாதியில் த்யானம் செய்தது. தியானத்தின் பலனாய் தர்மயுத்தம் தொடங்கப்பட்டது.

3.  'அக்காவுக்கு' சேவகம் மட்டுமே செய்ததாக சின்னம்மா சாதித்த போதும், முதல்வியாகும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஊழலுக்கான ஊதியத்தை கூட்டுகளவாணிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்தது உச்ச நீதிமன்றம். அடுத்த அடிமையாய் எடப்பாடிக்கு முடிசூட்டிவிட்டு, செத்தும் கெடுத்த அக்காவின் சமாதியில் சத்தியம் செய்துவிட்டு சிறைக்குப் போனார் சின்னம்மா.

4. சின்னம்மா கை காட்டிவிட்டு போன அண்ணனின் அதிரடியில், அரண்டுபோய் இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம். கட்சியும் சின்னமும் முடங்கிப்போக, R.K நகரவாசிகள் கொஞ்ச நாள் பணக்காரர்கள் ஆனது மட்டும் தான் மிச்சம்.

5. 'வருவேன் வருவேன்' என்று உசுப்பேத்தியே உடலை ரணகளமாக்கிய சூப்பர் ஸ்டாருக்கு முன்னால், 'வந்தே தீருவேன்' என்று வலது காலை ட்விட்டரில் எடுத்து வைத்தார் உலக நாயகன். ஆனால் பாவம், இதுவரைக்கும் ட்விட்டருக்குளேயே முடங்கி போய் கிடக்கிறது, இவரது அரசியல் வியூகம்.

6. தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தமிழினத்தின் தலையையும் நன்றாக தடவி நக்கியது GST.

7. இதற்குத்தானா இத்தனை அலப்பறை என்று அப்பாவி தமிழன் மூக்கின் மேல் விரல் வைக்கும் விதமாக, துணை முதல்வர் பதவி ஏற்புடன் இனிதே முடிந்து போனது தர்ம யுத்தம். TTVயை ஆதரித்த 18 சட்ட மன்ற உறுப்பினர்களை குற்ற உணர்வோடு நீக்கியது தான் ஒரே சாதனை.

8. சுத்தமும் சுகாதாரமும் தமிழ் சமூகத்தின் இரு கண்கள். தெரியாதா பின்னே ? அரசும், நகராட்சியும் 'டெங்கு'வை ஒழித்த விதமே போதும். கல்வெட்டில் பொறித்து வைத்து, எதிர்கால சந்ததிகள் அறிந்து கொள்ள வெட்டி ஒட்டி வைக்கலாம்.

9. உலக மகா RAID என்பதை தமிழினம் இதுவரை கேள்விப்பட்டு மட்டுமே இருந்தது. மத்திய அரசின் புண்ணியத்தில் இந்த முறை அனுபவித்து பார்த்தது. RAID நடந்தது, நடத்தப்பட்டது எல்லாம் சரி, ஆனால் பலன் மட்டும் பூஜ்யம். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக உச்சு கொட்டியபடி பேப்பரை மடித்து வைத்து விட்டு, பஜ்ஜி சாப்பிட புறப்பட்டு விட்டான் தமிழன். 

10. ஒட்டுமொத்த தமிழகத்தை பரபரப்பாகிய R.K நகர் இடைத்தேர்தல். விஷாலை junior comedian ஆக்கி, திமுகவை main  comedian ஆக்கி, அதிமுகவை வில்லனாகி, TTV தினகரனை கதாநாயகனாகிய இந்த தேர்தலின் முடிவு நமக்கு வரமா சாபமா ? 2Gஇல் திமுக தப்பித்தது கூட மழுங்கடிக்கப்பட்ட மகத்தான சம்பவம் இது.

மேற்குறிப்பிட்ட 10 சம்பவங்களில், தமிழினம் மறக்க கூடாத, மறக்க முடியாத, என்றென்றும் பதித்து வைக்கப்போகும் இரு சம்பவம் இது தான்:


இந்த இரு சம்பவங்கள் தான் வரப்போகும் ஆண்டு மட்டுமல்ல, அதையும் தாண்டி நமது நாட்டிற்குள் தாக்கம் ஏற்படுத்தப்போகும் வரலாற்று பதிவு.

*********************************************************

2017 - திரைகடல் தேடி தெம்பு கொள் 

கலையின்றி தமிழினம் எது ? கலைத்தாய் கொடுத்த பிள்ளைகளை தான் நாம் இதுவரை ஆளக்கொடுத்திருக்கிறோம். இனியும் கொடுப்போமா தெரியாது. எனவே அடுத்த அலசப்போவது, 2017இல் வெளிவந்த திரைப்படங்கள்.

 5. விக்ரம் வேதா: திருடன் போலீஸ் கதை தான். ஆனால், சொன்ன விதத்திலும், துரோகதிற்கு புதிய வடிவம் கொடுத்ததிலும், நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது இந்த படம்.  

4. தீரன், அதிகாரம் ஒன்று:  இது படம் அல்ல, பாடம். திராவிட கட்சிகளின் கேவலமான அரசியலையும், கட்டுப்படுத்தப்பட்ட காவல்துரையின் செயல்பாடுகளையும் கண் முன்னே நிறுத்திய படிப்பினை இந்த திரைப்படம்.

3. அறம்: இன்னொரு பாடம். அதே திராவிட கட்சிகளின் கேவலமான அரசியல். ஏழை எளிய மக்களை வாழ்விக்க ஓட்டு கேட்கும் அரசியலுக்கு, அவர்களை ஏழை எளிய நிலையிலேயே தான் வைத்திருக்க வேண்டும், அதற்கு அரசு எந்திரம் துணை போகும் என சொல்லிய விதம், பொட்டில் அடித்த பதிவு. 

2. அருவி: இது இந்த தலைமுறை மட்டுமின்றி, அடுத்த தலைமுறையும் கொண்டாடவேண்டிய படிப்பினை. திரை ஊடகத்தின் தேவையை தெளிவாய் பயன்படுத்திய விஷயத்தில், கடலாய் ஆர்பரிக்கிறாள் இந்த அருவி.

1. பாஹுபலி 2: பாடம் எல்லாம் இல்லை. வெறும் பொழுது போக்கு மட்டுமே. ஆனால், பார்த்து முடிக்கும் வரை தமிழகத்தை மட்டுமின்றி இந்திய தேசத்தையே தூங்க விடாமல் செய்த பெருமை இந்த படத்திற்கு உண்டு. உயிர் அக்கட தேசத்திலிருந்து வந்தது என்றாலும், கொண்டாடி தீர்த்தது தமிழகம்.

*********************************************************

2017 தமிழகத்தை அச்சுறுத்திய பிரச்சனைகள் 

5. கந்து வட்டியால் கொளுத்திக்கொண்ட குடும்பம்: வாயின் வழியே சுடுகம்பி நுழைத்து இதயத்தை குதறிய கொடுமை இது. பெற்றோர் கொண்ட துயரத்தில், ஏதுமறியா இரு பிஞ்சுகள் கருகிப்போனது. நெஞ்சு வெடித்துப்போனது, இந்த நிலை கெட்ட சமூகத்தை நினைத்து. கருகிய குடும்பத்திற்கு கருமாதி செய்ததோடு முடிந்து போனது எல்லாம். 

4. அடகு போன தமிழகம்: கெயில், Hydro-carbon, GST என அம்மா அண்டவே விடாத அனைத்திற்கும் 'ஆமாம் சாமி' போட்ட அடிமைகள் கூடாரம், அனிதாவை தூக்கிலிட்டு 'NEET' தாகத்தை தணித்துக்கொண்டது.  தேசிய நலன் சொல்லி, மாநில தேவைகளுக்கும், நாட்டு மீனவர்களுக்கும் பசுபிக் பெருங்கடலில் பிண்டம் வைத்த பெருமை இன்னும் தொடர்வது கொடுமை.

3. கொள்ளை போகும் நாட்டு வளம்: மணல், நீர், சாராயம், பால், கனிம வளங்கள் - இவை தான் ஆள்பவர்களுக்கு கரன்சியை கறக்கும் காமதேனு பசுக்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும், நில வளம் சுரண்டல் என்பது நிதர்சனம். இந்த ஆண்டும் மொட்டை கூட்டணியால் செய்வனே செய்யப்பட்டன. 

2. காசு கொடு, இல்ல ஓடு: தட்டியோ, அதட்டியோ கேட்டும் நிலையில் அரசும் இல்லை, மக்களும் இல்லை. அதனால், பிணம் தின்னி கழுகுகளுக்கோ ஆண்டு முழுவதும் தீபாவளி. லஞ்சத்தை அரசாணையில் கொண்டு வராதது மட்டுமே குறை. மற்றபடி குறையொன்றும் இல்லை. 

1. தலைவன் இல்லாத தமிழினம்: இதுவோ அதுவோ..எதுவாயினும் ஒரு ஆளுமை இருந்தது இதுவரை. இப்பொழுதோ தலை இல்லாத வால்களின் ஆட்டம் சகிக்கவில்லை. குழம்பிக்கிடக்கும் இந்த சமூகத்தை குட்டை என நினைத்து மீன் பிடிக்க தூண்டிலோடு நிறைய பேர் காத்துக்கிடக்கிறார்கள். வேதனையோடு வேடிக்கை பார்க்கிறது தமிழ் சமூகம்.

 *************************************************************

2017 - தமிழகம் இழந்தது என்ன 

5. மாண்புமிகு, இதய தெய்வம், புரட்சி தலைவி, டாக்டர் அம்மா அவர்கள், 2016ஆம் ஆண்டு நடத்திய GIM (Global Investors Meet)இல், பன்னாட்டு தொழில் முனைவர்களோடு பேசியதன் பலனாக, தமிழக வருவாயாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஒரு லட்சம் கோடி ருபாய்.  2017ஆம் ஆண்டில் குறிப்பாக HCL நிறுவனம் 2000 கோடி ரூபாயும், YAMAHA நிறுவனம் 1000 கோடி ரூபாயும், M&M நிறுவனம் 700 கோடி ரூபாயும் உடனடியாக முதலீடு செய்யும் என எதிர்பார்க்கபட்டது. இன்றும் எதிர்பார்க்க பட்டுக்கொண்டிருக்கிறது...!

4. மணல் தேவைக்கு மாற்றாக M-Sand மற்றும் ஏற்றுமதி மணல்: தமிழகத்தின் மணல் தேவை என்பது சிறு வீடு கனவோடு இருக்கும் மக்களிடம் இல்லை. உடனடி கொள்ளைக்கு வித்திடும் அரசியல் வியாபாரிகளிடம் உள்ளது. விலை குறைத்து விற்க தயாராக இல்லாத கூட்டம், உள்நாட்டு வளத்தை சுரண்டும் விஷயத்தில் தெளிவாக இருக்க,  ஆளும் அரசின் கவனம் கமிஷனில் மட்டுமே இருந்ததால் M-Sand மற்றும் ஏற்றுமதி மணல்....எல்லாம் தடை...! கோவிந்ததா  கோவிந்தா...!

3.  சாராய சாம்ராஜ்யம்: ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், மாரி  பொழியுமோ இல்லையோ, சாராயம் பொழியும். காசு கொழிக்கும். எல்லா ஆண்டும் இது தான் நிலைமை. இந்த ஆண்டும்  எல்லா சரக்கும்  கொள்முதல் செய்யப்பட்டது திராவிட கட்சிகளின் பினாமி ஆலைகளில் இருந்து தான். இந்த சரக்குகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய ஐரோப்பிய நிறுவனம் ஒன்று, இதைவிட பலமடங்கு தரமான, விலையும் மலிவான சரக்கு சப்பளை செய்ய டெண்டர் கேட்க, பொங்கி எழுந்த திராவிட உணர்வு, அவர்களை ஐரோப்பிய எல்லை வரை விரட்டி அடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்த்தது.

2. மத்திய அரசின் கல்விக்கொள்கை மாற்றங்கள், மாநில நலன் பாதிக்கும்படியாக இருப்பின், பெரும் எதிர்ப்பை பதிவு செய்வது தென்னிந்தியாவில் தமிழகம் மட்டுமே. காட்டுக்கத்தல் கத்தியும் ஆளுமை இல்லாத ஆட்சியின் கீழ், அரசு கல்லூரிகளில் மருத்துவம் மற்றும்  IITயில் பொறியியல் படிக்கும் வாய்ப்பு தமிழனுக்கு குறைந்து போனது.

1. 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தேசிய ஆட்சியில் தமிழகத்தின் பங்கு மிக குறைவு. இதனால், வரவேண்டிய, வரவிடாமல் தடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏராளம். குறிப்பாக விவசாயம் நலிந்து, தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்த புறக்கணிப்பையே அறுவடை செய்தார்கள்.

******************************************************

மாற்றம் ஒன்று தான் மாறாதது. வரும் புத்தாண்டிலாவது தமிழகத்தின் தலையெழுத்து மாறுமா ?

காசுக்கு விலை போகாத கண்ணிய சமூகம் உருவாகுமா ?

தன்னலம் கருதாத, பொதுநலன் சார்ந்த சிந்தனையோடு ஒரு தன்னிகரில்லாத தலைவன் கிடைப்பானா ?

நல்லதே நடக்குமென்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை...!



மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

இனி இது மோடி இந்தியா - நமக்கு வரமா சாபமா ?

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவில், பஞ்சாப்பில் படு தோல்வி, கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸை முந்த முடியாத நிலை என்ற நிதர்சனல்களை மீறி, உத்ரகாண்டில் பெற்ற வெற்றியை விட...மோடி & அமித் ஷா கூட்டணியின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு மிக மிக முக்கிய காரணம் உத்தர பிரதேசத்தில் கிடைத்திருக்கும் மாபெரும் மக்கள் ஆதரவு.

5 மாநிலங்களில் தேர்தல் என்றாலும், மோடியும் அமித் ஷாவும் குறிவைத்த துல்லிய இலக்கு உத்தர பிரதேசம் தான். 2014 மக்களவை தேர்தலில் 71 எம்.பிக்களை பா.ஜ.க விற்கு வாரிக்கொடுத்த பூமி இது. 

இந்த வெற்றி என்பது, ஏற்கனவே கொஞ்சம் எதிர்பார்த்தது தான் என்றாலும் மோடி அரசின் தற்போதய சில பல சொதப்பல்கள் தேர்தல் முடிவில் எதிரொலிக்குமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்ததென்னவோ உண்மை. அது மோடியின் அசுர பிரச்சாரத்தில் பிரதிபலிக்கவே செய்தது.  ஆனால், உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். நாங்கள் உங்கள் பக்கம் தான் என்று சொல்லி அடித்திருக்கிறார்கள் 8 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள்.

"வளர்ச்சியை நிலைப்பாடாக கொண்ட புதிய இந்தியா உருவாகி வருகிறது" என்று மோடி சொன்னாலும், "பா.ஜ.க வின் கொள்கைகளை நிலைப்பாடாக கொண்ட மோடி இந்தியா உருவாகிறது" என்பதே உண்மை.

இந்த மோடி இந்தியாவின் உருவாக்கத்திற்கு இதுவரை இருந்த அத்தனை தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தற்போது கிடைத்திருக்கும் உத்தர பிரதேச வெற்றி முற்றிலுமாக தகர்த்து விட்டது. 

மக்களவை மட்டுமின்றி, மாநிலங்களவையிலும் அறுதி பெரும்பான்மையோடு, கூடிய விரைவில் ஜனாதிபதி மாளிகையும் ஒரு தேசியக்கட்சியின் கைக்குள் வரப்போகிற நிலை என்பது  கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகார அரசு முறைக்கான திறவு கோல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அடுத்த 2 ஆண்டுகள் மோடி அரசு செயல்படுத்த நினைக்கும் எந்த திட்டங்களையும், சட்டங்களையும், செயல்பாடுகளையும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, மோடி உருவாக்கும் இந்த இந்தியா சாமானிய மக்களுக்கு வரமா சாபமா ?

சற்று பின்னோக்கி போய், தொடக்கத்திலிருந்து அலசவேண்டிய விஷயம் இது..தொடங்கலாமா ?

*********************************************************************************

26 மே 2014 ஆம் தேதி, 'நரேந்திர தாமோதர் தாஸ் மோடி ஆகிய நான்' என்ற அறிவிப்போடும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பெரும்பான்மை பலத்தோடும் சுதந்திர இந்தியாவின் பதினான்காவது பிரதமராக திரு. மோடி அவர்கள் பதவி ஏற்றபொது ஒட்டுமொத்த உலகமே இந்தியர்களோடு சேர்ந்து அவரை உற்சாகமாக வரவேற்றது.

முந்தய கூட்டணி அரசின் கையாலாகாத்தனமும், ஊழல்களும், அதற்கு நேர்மாறான குஜராத் மாநிலத்தின் அசுர வளர்ச்சியும், இவரின் இந்துத்துவ முகத்தை மறக்கடித்து, இந்திய தேசத்தை நல்வழியில் முன்னேற்றப்போகும் நாயகனாக, மக்கள் முன்னால் நிற்கவைத்து.

இவரால் மக்களின் மனதில் கனவுகளை விதைக்க முடிந்தது. தன்னால் மட்டுமே, எண்ணிப்பார்க்க முடியாத தேசிய வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும் என்று உறக்கச்சொல்லி நம்ப வைக்க முடிந்தது. திட்டமிட்ட பிரச்சாரத்தாலும், ஊடக விளம்பரங்களாலும் சாமானியர்களை சரிகட்ட முடிந்தது. அதுவே இறுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு விளைந்த மாபெரும் வெற்றியில் முடிந்தது.
பத்தாண்டு கால பசியோடு இருந்தவர்களுக்கு மோடி இனிப்புகள் கொடுத்தார். என்னை ஆளவிட்டால் உங்களுக்கு விருந்தே போடுவேன் என்று வார்த்தை ஜாலம் காட்டினார்...! 
இதை நம்பியது இந்திய மக்களின் விதியா  இல்லை காலத்தின் சதியா  ..?
 50 வருட அரசியல் வாழ்க்கையின் மூலம், லால் கிருஷ்ண அத்வானியால் கூட பெற முடியாத ஒட்டுமொத்த தேசிய மக்களின் நம்பிக்கையை, கற்பனை வளர்ச்சி எனும் கடை பரப்பி, குஜராத் என்னும் பொம்மையை காட்சிப்பொருளாக்கி, 282 மக்களவை தொகுதிகளாக இவர் அறுவடை செய்தது...இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

அழுத்தமாய் அவர் மீது முத்திரை இடப்பட்ட காவிக்கரையை வெற்றியோடு மோடி கழுவிப் போட்டபோதே முளைத்து வளரத்தொடங்கி விட்டன, இவர் விதைத்த இந்தியக்கனவுகள்.

இந்த 2.10 வருட மோடி ஆட்சியின் செயல் திறன், இந்திய அளவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பின் அதிர்வுகள் என்ன என்பது நமக்கு மிக முக்கியமானவை. இதனை கொஞ்சம் கவனத்தோடு ஆழ உழுது பார்க்கவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இவை தான் மீதமிருக்கும் 2.2 வருடத்தின் விளைவுகளை நிர்ணயிக்கபோகிறவை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் பதவி என்பது, கையில் மந்திரக்கோல் வைத்துக்கொண்டு மாயாஜாலம் நிகழ்த்தக்கூடிய சாத்தியக்கூறுகள் அற்ற ஒரு பொறுப்பு என்பது நிதர்சனம். 

மொழியால் வேறுபட்ட, காலத்தால் ஒன்றிணைந்த ஒரு தேசத்தில் அமையும் மத்திய அரசு என்பது நியாயமான வளர்ச்சியின் மீது  அக்கறை கொண்டிருக்குமானால், மேற்கொண்டு பயணிக்க  இரண்டு வேறுபட்ட பாதைகளில் ஒன்றை தேர்வு செய்தே ஆகவேண்டியிருந்தது. 

ஒன்று: தற்போது இருக்கும் இயல்பு நிலையோடு பயணித்து, மேலும் சந்தையை விரிவு படுத்தி, வேலை வாய்ப்புகளை பெருக்கி, மக்களின் வாங்கும் திறனும் பணப்புழக்கமும் அதிகரித்து, பிறகு உள்கட்டமைப்பை சீரமைப்பது.

இரண்டு: தற்போதிருக்கும் நிலையை மாற்றி, அடிப்படை தேவைகளை தேசிய அளவில் நிறைவேற்றி, அழுத்தமான உள்கட்டமைப்புகளின் மூலம் உற்பத்தியை பெருக்கி நாட்டின் வளத்தை சீராக்குவது.

முதல் பாதையில் பயணிப்பதாய் தான் மன்மோகன் சிங் சொன்னார். அதற்காகவே பா.ஜா.க வால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மோடிக்கும் அவர் சார்ந்த கட்சியின் கொள்கைகளுக்கும் முரண்பாடான இரண்டாம் பாதை இந்திய இறையாண்மையை கொஞ்சம் காவு வாங்கக்கூடியது..!

ஆனால் பிரச்சாரங்களில் மோடி தன்னை முற்போக்கு சிந்தனாவாதியாகவே காட்டிக்கொண்டார். நான் எல்லோர்க்கும் பொதுவானவன் என்றார்.

ஜாதி, மதம், சமயம் மூலம் நாட்டை துண்டாடும் சக்திகளை, துண்டுதுண்டாக்கும் சக்தியை எனக்கு கொடுங்கள்.  ஏழை இந்துக்களும் ஏழை முஸ்லிம்களும் தங்களுக்கு எதிராக அல்ல..ஏழ்மைக்கு எதிராகவே போராட விரும்புகிறார்கள்....! 
திரு. நரேந்திர மோடி,
 ஹூங்கார் ராலி, பாட்னா 27அக்டோபர் 2013.

தனது ஆட்சி, முதல் பாதையிலேயே பயணிக்கும் என்ற மோடியின் சூசக நம்பிக்கைகள் ஏனோ பா.ஜ.க மற்றும் ஜன சங்கங்களால் கண்டுகொள்ளப்படவே இல்லை. மோடியை பேசவிட்டு அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள், உதட்டோர புன்னகையோடு. மக்களில் ஒரு சாறார் மட்டும் இதனை தீவிரமாக பார்த்தார்கள். நம்பினார்கள் என்று கூட கொள்ளலாம்.

தேர்தல் முடிந்து பதவி ஏற்பின் போது வெளிப்பட்டதோ வேறு முகம். 'பொருளாதார சீர்திருத்தங்களால் மட்டுமே இந்திய வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும்' என்ற மோடியின் பேச்சு, அவர் தேர்ந்தெடுத்த பாதையை தெளிவு படுத்தி, பிரச்சாரங்களில் அவர் பூசிக்கொண்ட முகப்பூச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

அதற்கு பிறகு மோடி பேசவே இல்லை..தனது செயல்பாட்டின் மூலமாகவே தான் பயணிக்கும் பாதையை வரையறுக்கிறார்...அவர் போகும் பாதை சரிதானா என்கிற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது.

'என்னால் தான் பா.ஜ.க, பா.ஜ.க வால் நான் இல்லை' என்று ஒதுக்கி விட்டு அவரால் வேறு பாதையை தேர்ந்தெடுத்திருக்க முடியும். எனினும் ஜன சங்கங்களின் சேவக முகமூடியை கழற்ற மோடியால் முடியவில்லை. அது உடன் பிறந்து ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பு காட்டிய 'முற்போக்கு சிந்தனையாளன்' என்ற முகத்தையும் மோடியால் முற்றிலுமாக துறக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் கடுமையை காட்டாமல், தள்ளிப்போனார்..எளிமையாக தவிர்க்கிறார்..!

உள்கட்டமைப்புகளை புரட்டும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லவே இல்லை..என்பதை பிரதமரான மூன்றே மாதத்தில் பறக்க தொடங்கிய மோடியின் சர்வதேச விமானம்  கட்டியம் கூறியது. அடுத்த வருடத்தில் அது இந்தியாவில் தரை இறங்கவே இல்லை. 2017இல் கொஞ்சம் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது மீண்டும் பறக்க. 

150 நாட்களுக்கும் மேல் மோடி இந்தியாவிலேயே இல்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட மோடியின் பயணங்களின் பலன்கள் இது வரை பொறுமையை சோதிப்பதாகவே இருக்கிறது.

தான் போட்ட இரண்டாங்கெட்டான் முகமூடியை தனது அமைச்சரவைக்கு மோடியால் போட முடியவில்லை. இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே பறந்து போனதாய் வெளியான மாற்றுப்பிரச்சாரங்கள் மக்களின் கவனத்தை கவர்ந்தன என்பதே உண்மை.

காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலைத்திட்டம், ஆதார் அடையாள அட்டை, போன்றவற்றை கடுமையாக எதிர்த்த மோடி, பிரதமரான பின் இவற்றை ஒதுக்காமல், தனது அரசாங்கம் இவைகளை முறைபடுத்தி செம்மையாக செயல்படுத்தும் என்று சொன்னபோது, மன் மோகன் சிங்கின் மறு உருவமே வெளிப்பட்டது.....!
-ராஜ் செங்கப்பா இந்தியா டுடே  

மோடி அரசு வகுத்துக்கொடுத்த  இந்தியாவின் மூன்றாம் ஆண்டின் முடிவு நிலைமை என்ன? நடுநிலை பொருளாதார நிபுணர்களின் முடிவு இதுதான்:




பளிச்சென மேலே தெரியும் பல பச்சைகள் தனது அரசாங்கத்தின் சாதனைகளாக மோடி சொல்லிக்கொள்ளலாம். ஆனால் இவை பெரும்பான்மை கொண்ட அரசின் இயல்பு நிலையே என்ற எதிர்வாதத்தை தவிர்க்க முடியாது.

கல்வியறிவு வளர்கிறது. வளர்ச்சிக்கடன்கள் பெருகி இருக்கிறது, சம்பளம் உயர்வதால் மக்களின் வாங்கும் திறன் வளர்ந்திருக்கிறது.  அதனால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்திருக்கிறது. இவை எல்லாம் வரவேற்கப்படவேண்டிய விஷயங்கள்.

ஆனால், ஏற்றுமதியின் வீழ்ச்சியும், விவசாயத்தின் வீழ்ச்சியும் இங்கே மிக முக்கியம். இவை தான் நமது தேசத்தின் அடிநாதங்கள். பெண் குழந்தையின் பசிக்கு உணவு கொடுக்காமல், அவள் திருமணத்திற்கு பொருள் சேர்த்து வைப்பது நிச்சயம் முட்டாள்தனம்.

மோடி அரசு, இது வரை தனது திட்டங்களின் மாநிலங்களைவை ஒப்புதலுக்கு, பிற கட்சிகளை நம்பி இருக்கவேண்டி இருந்தது...! அதையே பல முறை குற்றச்சாட்டாகவும் வைத்தது...! 

*********************************************************************************

மீண்டும் வருவோம்.  தற்போதைய நிலை மாறிவிட்டது. இனி அனைத்தும் பா.ஜ க விடம் தான்.

என்ன செய்யப்போகிறார் மோடி ?

சாவின் விளிம்பில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மோடி காட்டப்போகும் வளர்ச்சிப்பாதை என்ன?

உலக சந்தையில் இந்தியப்பொருட்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்தி, ஏற்றுமதியை பெருக்க (மென்-பொருள் தவிர்த்து) என்ன செய்யப்போகிறார் மோடி?

Demonetization எனப்படும் பண மாற்றத்தின் மூலம், மக்களின் கையிருப்புகள் வங்கிகளுக்கு வந்து விட்டன. அரசிடம் அதிக நிதி குவிந்திருக்கிறது. இனி இந்த நிதியை வளர்ச்சிப்பாதையில் திருப்பிவிட மோடி அரசாங்கத்திற்கு எந்தத்தடையும் இல்லை...!

மோடி, தனது ஆட்சி முறையை சற்றே மாற்றி, தீவிர வளர்ச்சி திட்டங்களை  கொண்டு வந்து செயல்படுத்தினால்..அதுவே சாமானிய இந்தியனுக்கு வரம்...! 

அப்படி இல்லாமல் கிடைத்திருக்கும் பெரும்பான்மையை கொண்டு, 3 ஆண்டு ஓட்டத்தின் களைப்பு தீர மிச்சமிருக்கும் 2  ஆண்டுகளில் ஓய்வெடுக்கும் நிலையை மோடி தேர்ந்தெடுத்தால்...அதுவே சாமானிய இந்தியனுக்கு சாபம்...!

வாரமோ சாபமோ...போகப்போக தெரிந்து விடும்...! நம்பிக்கையோடு காத்திருப்பது மட்டுமே இன்றைய இந்தியனின் நிலை...!


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்








இது தான்....இது தான்....இனி வருங்கால தமிழகம்....!

ஐந்து நாட்களை தாண்டி ஆறாவது நாளாக வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது நம் தமிழ் சமூகம், ஒட்டு மொத்த தமிழகத்தில்.........குறிப்பாக மெரினா கடற்கரையில்.....!

பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டியாவை இவை எல்லாம்:

1. உலக வரலாற்றில் இதுவரை கூடிய மிகப்பெரிய கூட்டத்தில் 'ஒழுக்கம்' என்பது 100% கடைபிடிக்கப்பட்டது இங்கு தான்..இங்கு மட்டும் தான்..!

2. பெண்கள்...இளம் பெண்கள்...தாய்மார்கள்..வக்கிரமான சீண்டல்கள் தொடுதல்கள் இல்லாமல் சுதந்திரமாக தமது உடன்பிறப்புகளோடு இருப்பது போல் உணர்ந்து, இருந்து போராடுவது...சத்தியமாக உலகத்தில் இதுதான் முதல் முறை...! (தமிழனாய் பிறந்த எல்லோரும் மார்தட்டி கொள்வோம் ) 
மெரினா கடற்கரையில் இளம் பெண்ணொருத்தி அமர இடமின்றி, அருகில் இருந்தவன் மடியில் அமர்கிறாள், அவனும் தன் மடி கொடுக்கிறான்..!...இருவருக்கும் இடையே தமிழுணர்வு கொடுத்தது சகோதர பாசம் மட்டுமே..அண்ணா உட்காரட்டுமா...தங்கச்சி உக்காரும்மா.....காமம் கடந்த பாசம், அது தான் தமிழினத்தின் பெருமை..பலம்...!

3. யார் கொடுத்தார்..யவர் கொடுத்தார்...என்ன கொடுத்தார்..எதற்காக கொடுத்தார்...அதெல்லாம் தெரியாது...தாகம் எனில் எங்கிருந்தோ தண்ணீர் வந்தது...பசி எனில் எங்கிருந்தோ உணவு வந்தது...மயக்கம் எனில் எங்கிருந்தோ மருந்து வந்தது...தேவைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்ட ஒரே போராட்டக்களம் இது தான்...!

4. ஒட்டு மொத்த உலக வரலாற்றில் லட்சத்திற்கு மேல் கூடிய மக்கள் கூட்டத்தில்..இது வரை சாராய / சிகரெட் வாசனை வீசாத ஒரே போராட்டம் இது தான்...இது மட்டும் தான்....!

5. நூற்றுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் காட்சிகள் இருக்கும் இத்திருநாட்டில், எந்த கட்சியும் சாராத மக்கள் போராட்டம் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. (ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் திராவிட கட்சிகள் முன்னெடுத்தது, சுதந்திர போராட்டம் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தது )

6. காவல்துறை முழுமனதாக ஏற்று ஒத்துழைப்பு கொடுத்த ஒரே போராட்டம் இது தான் (நேற்று வரை அரசியல் கூத்தாடிகள் பேச்சை கேட்டு மக்களை தடியடித்த காவல் துறையை தான் இது வரை நாம் பார்த்திருக்கிறோம்). இனிமேலும் காவல்துறை ஏவல்துறைஆக இல்லாமல் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படும் என நம்புவோம் 

7. ஒட்டு மொத்த போராட்டக்காரர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது..உணர்வாக போராடுபவர் யார்...விளம்பரத்திற்காக போராடுபவர் யார் என்று...! உண்மையானவர் வரவேற்கப்பட்டார்...வேடதாரிகள் வெளியேற்றப்பட்டார்கள்...! (பிரபலமானவர்கள் பல பேர் பல்பு வாங்கி ஓடிப்போனார்கள்)

8. பொது மக்களுக்கு இடையூறு இல்லமால் நடக்கின்ற ஒரே புரட்சி போராட்டம் இது தான்...!

நமக்கு தெளிவாக தெரிகிறது...என்  தமிழ் சமூகம் விழித்துக்கொண்டு விட்டது...இனி இவர்களை ஏமாற்ற முடியாது...!

அரசியல் வியாபாரிகளே, பன்னாட்டு நரிகளே, இனி உங்கள் பருப்பு இங்கே வேகாது...! வேறு இடம் தேடி ஓடுங்கள்..!

என்  தாய் தமிழகம் நீடுதுயில் நீக்கி விழுதெழுந்து விட்டது...! இனி இது இளைஞர் யுகம்...அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் எம் தாய்திருநாட்டை வளமாக்குவதை...!

இப்போது விதைக்கப்பட்டிருப்பது விதை மட்டுமே...இனிமேல் தான் இருக்கிறது...உலகமே காத்திரு...! 


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்






எல்லாம் கடந்து போகும்..ஆனால் இது மட்டும் என்றும் நினைவில் நிற்கும்...!

"எங்கிருந்து தொடங்கியது இது? எப்படி இவ்வளவு பெரிய  கூட்டம் கூடியது ? நடிகனின் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதும் இளம் பெண்களை கிண்டல் செய்வதுமே கிளர்ச்சி என்று கிடந்த இளைஞர் சமூகம் எப்படி இப்படியொரு எழுச்சி கொண்டது? 

இத்தனை ஆண்டுகளாக குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்த தமிழ் கூட்டம், திடீரென்று எப்படி எழுந்து கொண்டது?

வீதிக்கு வந்தது இளைஞர் கூட்டம் தான் என்றால் அவர்களை தடுத்து வீட்டோடு வைத்திருக்க வேண்டிய பெற்றோரும் மற்றோரும்  சேர்ந்து அல்லவா வீதிக்கு வந்து போராடுகிறார்கள் ? இது என்னடா நம் அரசியல் வாழ்வுக்கு வந்த சோதனை?"

நாட்டுகாளைகள் பெருக்கக்கூடாதென்று ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டது தவறா ? பெரும் அக்கப்போராக இருக்கிறதே?

இன்று மத்திய மாநில அரசுகளின் அரசியல் தூண்களும் அதிகார தூண்களும் விடை காண முடியாமல் தவிக்கும் மிகப்பெரிய கேள்வி இது தான்.

இன்று நேற்றல்ல, காலம் காலமாக இன்று வரையில் டெல்லி கூட்டத்தை பொறுத்தவரை 'இட்லி வடை தின்னும் மதராஸிகள்' தாம் நாமெல்லாம். இதனை செவ்வனே அறுதியிட்டு உறுதிப்படுத்திவர்கள் தான் நாம் ஒட்டு போட்டு அனுப்பி வைத்த M.P கள்.

ஆனால் என்றாவது ஒரு நாள் மாற்றம் வரும், தமிழினம் துவண்டு ஏழும் என்ற என்போன்றோரின் பல்லாண்டு கனவு இன்று நினைவாகி இருக்கிறது.

நிச்சயம் இது ஒரு வரலாற்று சாதனை. எந்த அரசியல் பின்புலமும் இன்றி, கொடி, கட்சி கோஷம் இன்றி, தனி ஒரு தலைவன் இன்றி, அத்துணை பேர்களுமே தலைவனாய் தலைவியாய் புரட்சி செய்து கொண்டிருக்கிறது தமிழ் இளைஞர் சமூகம்...!

மங்காத தமிழ் என்று வெண் சங்காய் முழங்குகின்றது இளைய சமூகம்..! இந்த முறை சங்கு சத்தம் திக்கெட்டும் உரக்க ஒலிக்கின்றது....!

போராட்டத்தின் பலனை அனுபவிக்க துடித்த கொள்ளைக்கூட்டம் காணும்போதே விரட்டியடிக்கப்பட்டது. இதுகாறும் தமிழர்கள் தலையை நக்கி தின்ற நரிக்கூட்டம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

இது தான் தொடக்கம்..! நாம் எதிர் பார்த்து காத்திருந்த தொடக்கம்..! இனி நம் தேவைக்கு நாமே போராடுவோம்..! உதவாத அரசியல் வாதிகளை ஒதுக்குவோம்...!

தமிழ் கலாச்சாரம் காக்க புறப்பட்ட இளைஞர் படையே...இத்தோடு ஒடுங்கி விடாதே..! இதை தொடக்கம் என்றே கொள் ...நீ நம் சமூகத்திற்காக சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய..! எழுந்த கனலை ஆற்றி விடாதே..! இன்னும் எரியவிடு....அதே நேரம் உன் கல்வியும் குடும்பமும், எல்லாவற்றையும் விட மிக முக்கியம்..! அதையும் நினைவில் கொள் ...!

படித்துக்கொண்டே போராடலாம் தப்பில்லை..! தட்ட தொடங்கி விட்டோம், இனி தட்டிக்கொண்டே இருப்போம்...! திறக்க வில்லை என்றால்  மட்டும் மீண்டும் வீதிக்கு வந்து போராடுவோம்..!

கேட்டதை செய்யவில்லை என்றால், இவர்கள் வீதிக்கு வருவார்கள் என்ற பயமே ஆண்டைகளை அசரவைக்கும்..நமக்கான வழியும் பிறக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம்..! இந்தியா மட்டுமல்ல உலகமே இனி தமிழினைத்தை வேறு மாதிரி பார்க்கும்...! 

அதற்கு வித்திட்ட அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த "நன்றி"


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்