எல்லாம் கடந்து போகும்(Sept 2016)....!

சங்க காலத்து யுத்தம்ன்னாலே, அதோட பயங்கரத்த உணர்த்த 'ரத்த ஆறு' ஒடியதுன்னு சொல்வாங்க...! நாம படிச்சிருப்போம்...!

ஆனா நிஜமாவே ரத்த ஆறு ஓடி பாத்திருக்கீங்களா...! அதுவும் சமீபத்துல...?

கொஞ்சம் நஞ்சம் இல்ல...! 3 கிலோமீட்டருக்கு மேல ஓடிச்சு...! 

அந்த ரத்த நதி பாய்ஞ்சது பக்கத்துல இருக்கிற பங்களாதேஷ் தலைநகர் 'டாக்கா'வில தான். 

ஈத் பண்டிகைக்காக முஸ்லீம் சகோதரர்கள் குர்பானி கொடுக்கறது வழக்கம் தான்னாலும், கண்ட எடத்துல வெட்டாம, அதுக்குன்னு இடம் ஒதுக்கி கொடுத்திருந்தது காவல் துறை. 

பண்டிகைன்னா நம்ம ஆளுங்க சட்டத்தையெல்லாம் மதிப்பங்களா...! சகட்டு மேனிக்கு வீட்டு வெளிய, கார் பர்கிங்க்ல னு வெட்டி தள்ளிப்புட்டாங்க. 

பத்தாததுக்கு கொஞ்ச நேரத்துல நல்ல மழை வேற பெய்ய...பாருங்க நிஜ ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடின அழகை..!

Youtubeல தேடினா HD Video வாவே  பார்க்கலாங்க...! 

ரத்தத்த பார்த்தாவே மயக்கம் வர்ற ஆளுங்க மட்டும் ஒதுங்கி போய்டுங்க...!

சுத்தமும் சுகாதாரமும் பண்டிகை சந்தோஷத்தை விட ரொம்ப முக்கியம்னு அரசாங்கம் எவ்வளவு தான் புலம்பினாலும், எங்க கேக்கறாங்க..! ஏற்கனவே சுத்தம்னா கிலோ என்ன விலைன்னு கேக்கற டாக்கா காரங்க, இந்த சுகாதார சீர்கேட்டால ஏற்படப்போற பரவப்போற வியாதிகளையும் எதிர்கொண்டாக வேண்டி இருக்கு...!

*************************

'பசங்க வீட்டுக்கு வெளிய வந்து விளையாடினாங்க' அப்படிங்கறது ரொம்ப சாதாரணமா நடக்க கூடிய விஷயம். 
'ஒரு நாள் முழுக்க விளையாடினாங்க' அப்படினா ஏதாவது விடுமுறை நாளா இருக்கும்...சீதோஷ்ண நிலை சரியா இருக்கவே நாள் முழுக்க விளையாடி இருப்பாங்க..இதுல என்னையா விஷேஷம்...?

ஆனா சர்வதேச செய்திகள்ல இந்த வாரம் மொத இடம் பிடிச்சிருக்கறது இந்த விஷயம் தான். உலகமே 'அப்புடியா சந்தோஷமா விளைடாடுங்க', இது நிலைக்கணும்னு வாழ்த்து சொன்னது ஆச்சர்யமான விஷயம் தானே.

சிரியாவை பத்தி கேள்விப்படிருப்பீங்க. அரசாங்கத்துக்கு ரஷ்யா சப்போட்டு, அரசாங்கத்த எதிர்க்கறவங்க அத்தனை பேருக்கும் அமெரிக்கா சப்போட்டு. உள்நாட்டு போராலயும், ஐஸிஸ்சோட  புண்ணியத்தாலும் 4 வருஷமா கொத்துபரோட்டா போடப்பட்ட மக்களுக்கு சதோஷம்கிறது ஏது. பசங்கள பத்தி சொல்லவே வேணாம். 

ஏதோ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, ரஷ்யாவும் அமெரிக்காவும் கொஞ்சம் ஓய்வெடுக்க நினைச்சாங்க போல...கொஞ்ச நாளா குண்டு எதுவும் வெடிக்கல. யாரும் காணாம போகல. 

கிடைச்ச கொஞ்சநஞ்ச நேரத்தையும் வீணாக்க கூடாதுன்னு எல்லா குழந்தைகளும் வீட்ட விட்டு வெளிய வந்து நாள் முழுக்க விளையாடி கொண்டாடி இருக்காங்க...!

எந்தப்பக்கம் பார்த்தாலும் இடிஞ்சு கெடக்கற வீடுகளுக்கு மத்தில அவங்க விளையாடின அழகை உலகமே சந்தோஷமா பார்க்குது....!






ஆனா, இவங்க சந்தோஷம் நிச்சயமா நிரந்தரம் இல்ல. அமெரிக்காவும் ரஷ்யாவும் லீவு முடிஞ்சு திரும்ப எந்த நேரமும் வரலாம். எதனாலயோ கம்முன்னு கிடைக்கற ஐஸிஸ் அரக்கனுங்க மறுபடியும் நாட்டை ரத்தக்களரி ஆக்கலாம். 

அடுத்த நிமிஷம் உயிரோட இருப்போமான்னே தெரியாத நிலையிலும் கெடச்ச கொஞ்ச சந்தோஷத்தையும் இழக்க இந்த குழந்தைங்க விரும்பல.  பாருங்க..அவங்க முகத்துல காட்டற உணர்ச்சிகளுக்கு விலையே கிடையாது.

இவங்க நெலமைக்கு, நாமெல்லாம் கொசுக்கடியோட வாழ்ந்தாலும் சொர்க்கத்துல வாழறோம் சாமியோவ்....!
***********************************

மானதமிழ் சமூகத்துக்கு 'சரக்கு' ஒரு இன்றிமையாத விஷயம். (மலேசியா சரக்கு இல்லீங்க), அரசாங்கமே விக்குதுன்னாலும் கொஞ்சம் கூட சுணங்காம சரக்க வாங்கி போதை ஏத்திக்கறது நம்ம ஆளுங்களோட அன்றாட பழக்கம். 

இந்தப்பக்கம் பார்த்தா...புருஷன் குடியிலேர்ந்து விடுபடணும்னு நாகாத்தம்மனுக்கு விரதம் இருபாங்க மான தமிழச்சிங்க. பாம்பு சம்மந்தம் இல்லாத கடவுளே நம்ம கோவில்ல கெடையாதுங்கறதாலே கும்பிட்ட திக்கெல்லாம் நாகம் தான் முன்னால நிக்குது.

ஆனா, சீனாவுல ஆரம்பிச்சு இன்னைக்கு கொரியா, வியட்நாம்ல சக்க போடு போடற 'கிக்கான' மேட்டர் என்ன தெரியுங்களா? சரக்குக்கும் சற்பத்துக்கும் கொடுத்த கனெக்ஷன் தாங்க...!

இது கொஞ்சம் சரக்கு அதிகமா போய் கொத்து உட்டு வாந்தி எடுக்குற மேட்டர் தான். சுதாரிச்சிக்கிட்டு மேற்கொண்டு படிங்க....!

ஓரளவுக்கு மேல சாராய போதை சலிச்சுப்போன சில பக்கிக, ஓடுற பாம்பை எடுத்து சாராயத்துல முக்கி வெக்க, இது தெரியாம வேற ஒரு பக்கி வந்து அத குடிச்சு பாத்துட்டு, மயங்கி விழ....உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான கண்டுபுடிப்பான 'பாம்பு சாராயம்' உருவானது....!

'ஒரு குடுவையில் சாராயத்தை அளவாக ஊற்ற வேண்டும். பிற்பாடு உயிரோடு இருக்கும் கொடிய விஷமுள்ள நல்ல பாம்பை அந்த குடுவையில் இட்டு, மூன்று மாதங்களுக்கு மூடி வைத்து விட வேண்டும்' னு  கிட்டத்தட்ட 23ஆம் புலிகேசி பார்முலா தான்னாலும் கற்பனை இல்ல....உண்மை...! அப்படி தான் உருவாச்சு இந்த பாம்பு சாராயம். இன்னைக்கு உலக அளவுல முப்பது மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி ஆகுற பணம் கொழிக்கிற விஷயம்ங்க இது...!

100 வருஷ பழமையான ஸ்காட்ச் கொடுக்கிற போதைய விட இந்த பாம்பு சாராயம் கொடுக்கிற போதை பலமடங்கு அதிகம்னு குடிச்சு பார்த்தவங்க சொல்லறாங்க . எந்த விளம்பரமும் இல்லாம வாய்மொழி விளம்பரத்திலியே சக்க போடு போடும் வியாபாரமாகிடுச்சு இந்த விஷயம்.

கொடுமை என்னனா கூடவே மெடிக்கல் சர்டிபிகேட்டும் இலவசமா சேர்த்து வெச்சு விக்கறாங்க....அதாகப்பட்டது இந்த சரக்கு போதை ஏத்துமே தவிர உயிருக்கு தீங்கு விளைவிக்காது அப்படீன்னு.

வியட்நாம்ல தயார் ஆனாலும், சீனா வழியா இது அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியானு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு...பாவம் பாம்புகளோட ஜனத்தொகை தான் கணிசமா கொறஞ்சுகிட்டு வருது.

செய்முறை எல்லாம் ரொம்ப சாதாரணம். கண்ணாடி குடுவை நெறைய சரக்கு..அது எந்த கருமாந்திர சரக்காவது இருந்துட்டு போகட்டும்...! 5 வயசுக்கு மீறாத நல்ல பாம்பை, கவனிக்கணும் கொடூர விஷத்தன்மை உள்ள நல்ல பாம்பை அந்த குடுவைக்குள்ள போட்டு மூடிடனும். சுவாசிக்க காத்து கிடைக்காத அவஸ்தையில  பாம்பு படமெடுத்து ஜாடிக்குள்ளையே டான்ஸ் ஆடும்..ஆடி...ஆடி..செத்தும் போய்டும்..அப்புறம் தான் மேட்டரே...அடுத்த மூணு மாசத்துல பாம்போட உடல் சாராயத்துல ஊறி ஊறி...போதும் உவ்வே...!

விஞ்ஞானிகள் இதை ஆராய்ஞ்சு பாத்துட்டு...அதிக போதை எல்லாம் இல்லீங்க, பாம்பு விஷம் ஊறின சரக்கு என்பது கொடுக்கும் உளவியல் ரீதியான போதை தான் இது...வேற ஒண்ணும் இல்ல அப்படீன்னு சொல்லிட்டாலும்...சரக்கு விற்பனை என்னவோ அமோகம்..!

என்ன..சும்மா ஒருக்கா..ஒரு கல்பு அடிச்சு பார்க்கலாமான்னு யோசிக்கிறீங்களா, வெலை அதிகமில்லை ஜென்டில்மேன்....ஒரு பாட்டில் ஆரம்ப விலை 35,000 ரூபாய் தான்...!

பல அரசாங்கங்கள் இதுக்கு தடை போட்டாலும், இன்டர்நெட்லயும் கள்ள மார்கெட்லயும் வித்துக்கிட்டு தான் இருக்காங்க...திருட்டு dvd மாதிரி...!

இவங்க டார்கெட்டே மேற்கத்திய பேச்சுலர் பார்ட்டி தான். நண்பர்களுக்கு ஷாக் கொடுக்க நினைக்கும் வெள்ளை வெத்து வேட்டுங்களுக்கு  $500 பெரிய விஷயமில்லை தானுங்களே...!

இப்போ 2016ல புதுசா வந்திருக்கிற சரக்கு ரொம்ப டாப்பு...பாம்போட கருந்தேளையும் சேர்த்து விட்டுட்டாங்க பக்கிக...! செம்ம சூடா விற்பனை ஆகிகிட்டு இருக்கு இந்த அதிரி புதிரி காம்பினேஷன் .....!
************************************


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

No comments:

Post a Comment