"எங்கிருந்து தொடங்கியது இது? எப்படி இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது ? நடிகனின் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதும் இளம் பெண்களை கிண்டல் செய்வதுமே கிளர்ச்சி என்று கிடந்த இளைஞர் சமூகம் எப்படி இப்படியொரு எழுச்சி கொண்டது?
இத்தனை ஆண்டுகளாக குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்த தமிழ் கூட்டம், திடீரென்று எப்படி எழுந்து கொண்டது?
வீதிக்கு வந்தது இளைஞர் கூட்டம் தான் என்றால் அவர்களை தடுத்து வீட்டோடு வைத்திருக்க வேண்டிய பெற்றோரும் மற்றோரும் சேர்ந்து அல்லவா வீதிக்கு வந்து போராடுகிறார்கள் ? இது என்னடா நம் அரசியல் வாழ்வுக்கு வந்த சோதனை?"
நாட்டுகாளைகள் பெருக்கக்கூடாதென்று ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டது தவறா ? பெரும் அக்கப்போராக இருக்கிறதே?
இன்று மத்திய மாநில அரசுகளின் அரசியல் தூண்களும் அதிகார தூண்களும் விடை காண முடியாமல் தவிக்கும் மிகப்பெரிய கேள்வி இது தான்.
இன்று நேற்றல்ல, காலம் காலமாக இன்று வரையில் டெல்லி கூட்டத்தை பொறுத்தவரை 'இட்லி வடை தின்னும் மதராஸிகள்' தாம் நாமெல்லாம். இதனை செவ்வனே அறுதியிட்டு உறுதிப்படுத்திவர்கள் தான் நாம் ஒட்டு போட்டு அனுப்பி வைத்த M.P கள்.
ஆனால் என்றாவது ஒரு நாள் மாற்றம் வரும், தமிழினம் துவண்டு ஏழும் என்ற என்போன்றோரின் பல்லாண்டு கனவு இன்று நினைவாகி இருக்கிறது.
நிச்சயம் இது ஒரு வரலாற்று சாதனை. எந்த அரசியல் பின்புலமும் இன்றி, கொடி, கட்சி கோஷம் இன்றி, தனி ஒரு தலைவன் இன்றி, அத்துணை பேர்களுமே தலைவனாய் தலைவியாய் புரட்சி செய்து கொண்டிருக்கிறது தமிழ் இளைஞர் சமூகம்...!
மங்காத தமிழ் என்று வெண் சங்காய் முழங்குகின்றது இளைய சமூகம்..! இந்த முறை சங்கு சத்தம் திக்கெட்டும் உரக்க ஒலிக்கின்றது....!
போராட்டத்தின் பலனை அனுபவிக்க துடித்த கொள்ளைக்கூட்டம் காணும்போதே விரட்டியடிக்கப்பட்டது. இதுகாறும் தமிழர்கள் தலையை நக்கி தின்ற நரிக்கூட்டம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
இது தான் தொடக்கம்..! நாம் எதிர் பார்த்து காத்திருந்த தொடக்கம்..! இனி நம் தேவைக்கு நாமே போராடுவோம்..! உதவாத அரசியல் வாதிகளை ஒதுக்குவோம்...!
தமிழ் கலாச்சாரம் காக்க புறப்பட்ட இளைஞர் படையே...இத்தோடு ஒடுங்கி விடாதே..! இதை தொடக்கம் என்றே கொள் ...நீ நம் சமூகத்திற்காக சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய..! எழுந்த கனலை ஆற்றி விடாதே..! இன்னும் எரியவிடு....அதே நேரம் உன் கல்வியும் குடும்பமும், எல்லாவற்றையும் விட மிக முக்கியம்..! அதையும் நினைவில் கொள் ...!
படித்துக்கொண்டே போராடலாம் தப்பில்லை..! தட்ட தொடங்கி விட்டோம், இனி தட்டிக்கொண்டே இருப்போம்...! திறக்க வில்லை என்றால் மட்டும் மீண்டும் வீதிக்கு வந்து போராடுவோம்..!
கேட்டதை செய்யவில்லை என்றால், இவர்கள் வீதிக்கு வருவார்கள் என்ற பயமே ஆண்டைகளை அசரவைக்கும்..நமக்கான வழியும் பிறக்கும்.
ஒன்று மட்டும் நிச்சயம்..! இந்தியா மட்டுமல்ல உலகமே இனி தமிழினைத்தை வேறு மாதிரி பார்க்கும்...!
அதற்கு வித்திட்ட அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த "நன்றி"
மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்
No comments:
Post a Comment