நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவில், பஞ்சாப்பில் படு தோல்வி, கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸை முந்த முடியாத நிலை என்ற நிதர்சனல்களை மீறி, உத்ரகாண்டில் பெற்ற வெற்றியை விட...மோடி & அமித் ஷா கூட்டணியின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு மிக மிக முக்கிய காரணம் உத்தர பிரதேசத்தில் கிடைத்திருக்கும் மாபெரும் மக்கள் ஆதரவு.
5 மாநிலங்களில் தேர்தல் என்றாலும், மோடியும் அமித் ஷாவும் குறிவைத்த துல்லிய இலக்கு உத்தர பிரதேசம் தான். 2014 மக்களவை தேர்தலில் 71 எம்.பிக்களை பா.ஜ.க விற்கு வாரிக்கொடுத்த பூமி இது.
இந்த வெற்றி என்பது, ஏற்கனவே கொஞ்சம் எதிர்பார்த்தது தான் என்றாலும் மோடி அரசின் தற்போதய சில பல சொதப்பல்கள் தேர்தல் முடிவில் எதிரொலிக்குமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்ததென்னவோ உண்மை. அது மோடியின் அசுர பிரச்சாரத்தில் பிரதிபலிக்கவே செய்தது. ஆனால், உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். நாங்கள் உங்கள் பக்கம் தான் என்று சொல்லி அடித்திருக்கிறார்கள் 8 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள்.
"வளர்ச்சியை நிலைப்பாடாக கொண்ட புதிய இந்தியா உருவாகி வருகிறது" என்று மோடி சொன்னாலும், "பா.ஜ.க வின் கொள்கைகளை நிலைப்பாடாக கொண்ட மோடி இந்தியா உருவாகிறது" என்பதே உண்மை.
இந்த மோடி இந்தியாவின் உருவாக்கத்திற்கு இதுவரை இருந்த அத்தனை தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தற்போது கிடைத்திருக்கும் உத்தர பிரதேச வெற்றி முற்றிலுமாக தகர்த்து விட்டது.
மக்களவை மட்டுமின்றி, மாநிலங்களவையிலும் அறுதி பெரும்பான்மையோடு, கூடிய விரைவில் ஜனாதிபதி மாளிகையும் ஒரு தேசியக்கட்சியின் கைக்குள் வரப்போகிற நிலை என்பது கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகார அரசு முறைக்கான திறவு கோல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அடுத்த 2 ஆண்டுகள் மோடி அரசு செயல்படுத்த நினைக்கும் எந்த திட்டங்களையும், சட்டங்களையும், செயல்பாடுகளையும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, மோடி உருவாக்கும் இந்த இந்தியா சாமானிய மக்களுக்கு வரமா சாபமா ?
சற்று பின்னோக்கி போய், தொடக்கத்திலிருந்து அலசவேண்டிய விஷயம் இது..தொடங்கலாமா ?
*********************************************************************************
26 மே 2014 ஆம் தேதி, 'நரேந்திர தாமோதர் தாஸ் மோடி ஆகிய நான்' என்ற அறிவிப்போடும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பெரும்பான்மை பலத்தோடும் சுதந்திர இந்தியாவின் பதினான்காவது பிரதமராக திரு. மோடி அவர்கள் பதவி ஏற்றபொது ஒட்டுமொத்த உலகமே இந்தியர்களோடு சேர்ந்து அவரை உற்சாகமாக வரவேற்றது.
முந்தய கூட்டணி அரசின் கையாலாகாத்தனமும், ஊழல்களும், அதற்கு நேர்மாறான குஜராத் மாநிலத்தின் அசுர வளர்ச்சியும், இவரின் இந்துத்துவ முகத்தை மறக்கடித்து, இந்திய தேசத்தை நல்வழியில் முன்னேற்றப்போகும் நாயகனாக, மக்கள் முன்னால் நிற்கவைத்து.
இவரால் மக்களின் மனதில் கனவுகளை விதைக்க முடிந்தது. தன்னால் மட்டுமே, எண்ணிப்பார்க்க முடியாத தேசிய வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும் என்று உறக்கச்சொல்லி நம்ப வைக்க முடிந்தது. திட்டமிட்ட பிரச்சாரத்தாலும், ஊடக விளம்பரங்களாலும் சாமானியர்களை சரிகட்ட முடிந்தது. அதுவே இறுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு விளைந்த மாபெரும் வெற்றியில் முடிந்தது.
பத்தாண்டு கால பசியோடு இருந்தவர்களுக்கு மோடி இனிப்புகள் கொடுத்தார். என்னை ஆளவிட்டால் உங்களுக்கு விருந்தே போடுவேன் என்று வார்த்தை ஜாலம் காட்டினார்...!
இதை நம்பியது இந்திய மக்களின் விதியா இல்லை காலத்தின் சதியா ..?
50 வருட அரசியல் வாழ்க்கையின் மூலம், லால் கிருஷ்ண அத்வானியால் கூட பெற முடியாத ஒட்டுமொத்த தேசிய மக்களின் நம்பிக்கையை, கற்பனை வளர்ச்சி எனும் கடை பரப்பி, குஜராத் என்னும் பொம்மையை காட்சிப்பொருளாக்கி, 282 மக்களவை தொகுதிகளாக இவர் அறுவடை செய்தது...இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நிகழ்வு.
அழுத்தமாய் அவர் மீது முத்திரை இடப்பட்ட காவிக்கரையை வெற்றியோடு மோடி கழுவிப் போட்டபோதே முளைத்து வளரத்தொடங்கி விட்டன, இவர் விதைத்த இந்தியக்கனவுகள்.
இந்த 2.10 வருட மோடி ஆட்சியின் செயல் திறன், இந்திய அளவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பின் அதிர்வுகள் என்ன என்பது நமக்கு மிக முக்கியமானவை. இதனை கொஞ்சம் கவனத்தோடு ஆழ உழுது பார்க்கவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இவை தான் மீதமிருக்கும் 2.2 வருடத்தின் விளைவுகளை நிர்ணயிக்கபோகிறவை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் பதவி என்பது, கையில் மந்திரக்கோல் வைத்துக்கொண்டு மாயாஜாலம் நிகழ்த்தக்கூடிய சாத்தியக்கூறுகள் அற்ற ஒரு பொறுப்பு என்பது நிதர்சனம்.
மொழியால் வேறுபட்ட, காலத்தால் ஒன்றிணைந்த ஒரு தேசத்தில் அமையும் மத்திய அரசு என்பது நியாயமான வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டிருக்குமானால், மேற்கொண்டு பயணிக்க இரண்டு வேறுபட்ட பாதைகளில் ஒன்றை தேர்வு செய்தே ஆகவேண்டியிருந்தது.
ஒன்று: தற்போது இருக்கும் இயல்பு நிலையோடு பயணித்து, மேலும் சந்தையை விரிவு படுத்தி, வேலை வாய்ப்புகளை பெருக்கி, மக்களின் வாங்கும் திறனும் பணப்புழக்கமும் அதிகரித்து, பிறகு உள்கட்டமைப்பை சீரமைப்பது.
இரண்டு: தற்போதிருக்கும் நிலையை மாற்றி, அடிப்படை தேவைகளை தேசிய அளவில் நிறைவேற்றி, அழுத்தமான உள்கட்டமைப்புகளின் மூலம் உற்பத்தியை பெருக்கி நாட்டின் வளத்தை சீராக்குவது.
முதல் பாதையில் பயணிப்பதாய் தான் மன்மோகன் சிங் சொன்னார். அதற்காகவே பா.ஜா.க வால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மோடிக்கும் அவர் சார்ந்த கட்சியின் கொள்கைகளுக்கும் முரண்பாடான இரண்டாம் பாதை இந்திய இறையாண்மையை கொஞ்சம் காவு வாங்கக்கூடியது..!
ஆனால் பிரச்சாரங்களில் மோடி தன்னை முற்போக்கு சிந்தனாவாதியாகவே காட்டிக்கொண்டார். நான் எல்லோர்க்கும் பொதுவானவன் என்றார்.
ஜாதி, மதம், சமயம் மூலம் நாட்டை துண்டாடும் சக்திகளை, துண்டுதுண்டாக்கும் சக்தியை எனக்கு கொடுங்கள். ஏழை இந்துக்களும் ஏழை முஸ்லிம்களும் தங்களுக்கு எதிராக அல்ல..ஏழ்மைக்கு எதிராகவே போராட விரும்புகிறார்கள்....!
திரு. நரேந்திர மோடி,
ஹூங்கார் ராலி, பாட்னா 27அக்டோபர் 2013.
தனது ஆட்சி, முதல் பாதையிலேயே பயணிக்கும் என்ற மோடியின் சூசக நம்பிக்கைகள் ஏனோ பா.ஜ.க மற்றும் ஜன சங்கங்களால் கண்டுகொள்ளப்படவே இல்லை. மோடியை பேசவிட்டு அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள், உதட்டோர புன்னகையோடு. மக்களில் ஒரு சாறார் மட்டும் இதனை தீவிரமாக பார்த்தார்கள். நம்பினார்கள் என்று கூட கொள்ளலாம்.
தேர்தல் முடிந்து பதவி ஏற்பின் போது வெளிப்பட்டதோ வேறு முகம். 'பொருளாதார சீர்திருத்தங்களால் மட்டுமே இந்திய வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும்' என்ற மோடியின் பேச்சு, அவர் தேர்ந்தெடுத்த பாதையை தெளிவு படுத்தி, பிரச்சாரங்களில் அவர் பூசிக்கொண்ட முகப்பூச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதற்கு பிறகு மோடி பேசவே இல்லை..தனது செயல்பாட்டின் மூலமாகவே தான் பயணிக்கும் பாதையை வரையறுக்கிறார்...அவர் போகும் பாதை சரிதானா என்கிற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது.
'என்னால் தான் பா.ஜ.க, பா.ஜ.க வால் நான் இல்லை' என்று ஒதுக்கி விட்டு அவரால் வேறு பாதையை தேர்ந்தெடுத்திருக்க முடியும். எனினும் ஜன சங்கங்களின் சேவக முகமூடியை கழற்ற மோடியால் முடியவில்லை. அது உடன் பிறந்து ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பு காட்டிய 'முற்போக்கு சிந்தனையாளன்' என்ற முகத்தையும் மோடியால் முற்றிலுமாக துறக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் கடுமையை காட்டாமல், தள்ளிப்போனார்..எளிமையாக தவிர்க்கிறார்..!
உள்கட்டமைப்புகளை புரட்டும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லவே இல்லை..என்பதை பிரதமரான மூன்றே மாதத்தில் பறக்க தொடங்கிய மோடியின் சர்வதேச விமானம் கட்டியம் கூறியது. அடுத்த வருடத்தில் அது இந்தியாவில் தரை இறங்கவே இல்லை. 2017இல் கொஞ்சம் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது மீண்டும் பறக்க.
150 நாட்களுக்கும் மேல் மோடி இந்தியாவிலேயே இல்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட மோடியின் பயணங்களின் பலன்கள் இது வரை பொறுமையை சோதிப்பதாகவே இருக்கிறது.
தான் போட்ட இரண்டாங்கெட்டான் முகமூடியை தனது அமைச்சரவைக்கு மோடியால் போட முடியவில்லை. இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே பறந்து போனதாய் வெளியான மாற்றுப்பிரச்சாரங்கள் மக்களின் கவனத்தை கவர்ந்தன என்பதே உண்மை.
காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலைத்திட்டம், ஆதார் அடையாள அட்டை, போன்றவற்றை கடுமையாக எதிர்த்த மோடி, பிரதமரான பின் இவற்றை ஒதுக்காமல், தனது அரசாங்கம் இவைகளை முறைபடுத்தி செம்மையாக செயல்படுத்தும் என்று சொன்னபோது, மன் மோகன் சிங்கின் மறு உருவமே வெளிப்பட்டது.....!
-ராஜ் செங்கப்பா இந்தியா டுடே
மோடி அரசு வகுத்துக்கொடுத்த இந்தியாவின் மூன்றாம் ஆண்டின் முடிவு நிலைமை என்ன? நடுநிலை பொருளாதார நிபுணர்களின் முடிவு இதுதான்:
பளிச்சென மேலே தெரியும் பல பச்சைகள் தனது அரசாங்கத்தின் சாதனைகளாக மோடி சொல்லிக்கொள்ளலாம். ஆனால் இவை பெரும்பான்மை கொண்ட அரசின் இயல்பு நிலையே என்ற எதிர்வாதத்தை தவிர்க்க முடியாது.
கல்வியறிவு வளர்கிறது. வளர்ச்சிக்கடன்கள் பெருகி இருக்கிறது, சம்பளம் உயர்வதால் மக்களின் வாங்கும் திறன் வளர்ந்திருக்கிறது. அதனால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்திருக்கிறது. இவை எல்லாம் வரவேற்கப்படவேண்டிய விஷயங்கள்.
ஆனால், ஏற்றுமதியின் வீழ்ச்சியும், விவசாயத்தின் வீழ்ச்சியும் இங்கே மிக முக்கியம். இவை தான் நமது தேசத்தின் அடிநாதங்கள். பெண் குழந்தையின் பசிக்கு உணவு கொடுக்காமல், அவள் திருமணத்திற்கு பொருள் சேர்த்து வைப்பது நிச்சயம் முட்டாள்தனம்.
மோடி அரசு, இது வரை தனது திட்டங்களின் மாநிலங்களைவை ஒப்புதலுக்கு, பிற கட்சிகளை நம்பி இருக்கவேண்டி இருந்தது...! அதையே பல முறை குற்றச்சாட்டாகவும் வைத்தது...!
*********************************************************************************
மீண்டும் வருவோம். தற்போதைய நிலை மாறிவிட்டது. இனி அனைத்தும் பா.ஜ க விடம் தான்.
என்ன செய்யப்போகிறார் மோடி ?
சாவின் விளிம்பில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மோடி காட்டப்போகும் வளர்ச்சிப்பாதை என்ன?
உலக சந்தையில் இந்தியப்பொருட்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்தி, ஏற்றுமதியை பெருக்க (மென்-பொருள் தவிர்த்து) என்ன செய்யப்போகிறார் மோடி?
Demonetization எனப்படும் பண மாற்றத்தின் மூலம், மக்களின் கையிருப்புகள் வங்கிகளுக்கு வந்து விட்டன. அரசிடம் அதிக நிதி குவிந்திருக்கிறது. இனி இந்த நிதியை வளர்ச்சிப்பாதையில் திருப்பிவிட மோடி அரசாங்கத்திற்கு எந்தத்தடையும் இல்லை...!
மோடி, தனது ஆட்சி முறையை சற்றே மாற்றி, தீவிர வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினால்..அதுவே சாமானிய இந்தியனுக்கு வரம்...!
அப்படி இல்லாமல் கிடைத்திருக்கும் பெரும்பான்மையை கொண்டு, 3 ஆண்டு ஓட்டத்தின் களைப்பு தீர மிச்சமிருக்கும் 2 ஆண்டுகளில் ஓய்வெடுக்கும் நிலையை மோடி தேர்ந்தெடுத்தால்...அதுவே சாமானிய இந்தியனுக்கு சாபம்...!
வாரமோ சாபமோ...போகப்போக தெரிந்து விடும்...! நம்பிக்கையோடு காத்திருப்பது மட்டுமே இன்றைய இந்தியனின் நிலை...!
மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்
thankalathu kadduraikal milira vaalththukiren
ReplyDelete