ரஜினிகாந்த் எனும் மாய நதி...! (ஒரு உளவியல் பார்வை)

மஹாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து, திரைப்பிழைப்பு தேடி தமிழகம் வந்த 'சிவாஜி ராவ் கெய்க்வாட்'க்கு இப்பொழுது 65 வயது என்பதும், அவர் பேரன் பேத்திகள் கண்ட குடும்பஸ்தர் என்பதும், முடி கொட்டி நரை தட்டிப்போன ஒரு முதியவர் என்பதும், இன்ன பிற என்பதுமான நிதர்சனங்கள் எல்லாம் ஏனோ பெரும்பாலும் கண்டு கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு, தமிழ் சார்ந்த நல்லுலகத்தால் 'ரஜினிகாந்த்' என்கிற பிம்பம் மட்டும் முன் நிறுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.....!

ஊடகங்கள், 'மாபெரும் கலைஞன்' என்று போற்றிப்பேசினாலும், 'வெற்றுக் கூத்தாடி' என்று தூற்றிப்பேசினாலும், நிதர்சனத்தை மாற்றிப்பேசினாலும், எதற்கும் அசராமல் நீண்டகாலமாக நிலைத்திருக்கிறது அந்த பிம்பம்....மக்கள் மனதில்....!

அந்த பிம்பத்திற்கு உச்சத்தில் ஒரு இடம் கொடுத்து உட்காரவைத்திருக்கிறது தமிழகம்...! இது உளவியல் ரீதியான அங்கீகாரத்தின் விளைவால் கொடுக்கப்பட்ட இடம்..! மேதைகளுக்கும், சிந்தனையாளர்களுக்கும் கூட கொடுக்கப்படாத இடம்...! இன்னும் சொல்லபோனால் சினிமா, பொழுதுபோக்கு, நடிப்பு, இவற்றுக்கெல்லாம் கூட அப்பாற்பட்ட ஒரு இடம்...!
கூகுளில் 'Rajinikanth' என்று தேடினால், கிடைக்கும் 1.8 கோடிக்கு அதிகமான தேடல் முடிவுகள், வேறு எந்த இந்திய திரை பிரபலத்துக்கும்  இது வரை கிடைக்கவே இல்லை..! 
இடம் கொடுக்கப்பட்டு விட்டது...! கொடுத்தது ஏற்றுக்கொள்ளப்பட்டும் விட்டது...! இந்த கொடுத்தலுக்கும், ஏற்றலுக்கும் இடையிலான பந்தம் / பிணைப்பு என்பது ரஜினிகாந்த் என்ற நடிகன் விரும்பி வாங்கிய வரம்...அதுவே ரஜினிகாந்த் என்ற மனிதன் விரும்பாமல் பெற்ற சாபம்...!

உச்சத்தில் ஒரு இடம் என்பது, காரணமில்லாமல் கொடுக்கப்படவில்லை. காரணமும் மிக எளிதான ஒன்று தான்.

திரையில் அவன் அப்பாவி, நல்லவன், கருப்பு நிற காவலன்,. அருமையான காதலன், அநீதி கண்டு பொங்கி எழுபவன். வாரி வழங்கும் வள்ளல், அதர்மத்தை அழிப்பவன்..எப்பொழுதும் வெல்பவன்...! ஆகவே தமிழன் தனித்தனியாய் காணும் கனவுகளின் மொத்தத்தொகுப்பு அவன்..!

நிஜஉருவில், அவன் எளிமையானவன், பக்தியுள்ளவன், பகுத்தறிவு பேசாதவன், மிக மிக நல்லவனாய் காட்டிக்கொள்பவன்...!  ஆகவே மொத்தத்தமிழனின் முழு உருவமாய் நிற்பவன்...!

உள்ளேயும், புறத்தேயும் முற்றுமாய் ஒத்துப்போனதால் தமிழகம் தானே விரும்பி கொடுத்தது தான்..இந்த வரமும் சாபமும்...!

ஏழாவது வயதில் எனக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால் இதுதான்.

நீ இந்த sideஆ அந்த sideஆ ? ரஜினியா கமலா ?

நண்பன் ஒருவன் சொன்னான்: 'கண்ண மூடு..யோசி..எந்த உருவம் உன் மனசுல தெரியுதோ நீ அந்த side.

கண்ணை மூடி நான் கண்ட உருவம் கருப்பாக இருந்தது...! என்னைப்போலவே...!
ரஜினிகாந்த் என்ற ப்ரதிமை (Icon) உருவான விதத்தை மூன்று பரிமாணங்களாக அணுகலாம். மூன்றுமே சமூக மானுடவியல் அடிப்படையில் முக்கியமானவை. முதல் பரிணாமம்: ரஜினி தன்னளவில் செய்த பங்களிப்பு. இரண்டாவது: மக்கள் ஆதரவு மற்றும் ரசிக மனோபாவங்களின் இயக்கம். மூன்றாவது: வணிக ஊடகங்களின் பிம்ப உருவகத்தேவை மற்றும் ஆற்றல். இவை மூன்றும் இணைந்ததாலேயே ரஜினிகாந்த் என்ற ப்ரதிமை சாத்தியமாயிற்று.
காலத்தை வென்றவன் - இந்தியா ட்டுடே   
எனக்கு ரஜினிகாந்த் என்ற பிம்பம் பெருந்திரையில் அறிமுகமானது 'தளபதி' படத்தின்போது. அந்த மாயத்தோற்றம் என்னுள் இறங்கி செய்த வித்தைகள் ஏராளம்...! எனக்கு மட்டுமே அந்த மாயம் நிகழ்ந்தது என்று நினைக்க நான் ஒன்றும் முட்டாளில்லை. ஏனெனில் அந்த மாயத்தோற்றம் தளபதிக்கு முன்னும் பின்னுமாக, கோடிக்கணக்கான மனங்களில் ஊடுருவி வித்தைகள் செய்து கொண்டுதான் இருக்கிறதெம்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

அந்த உளவியல் வித்தை ஒரு தொடர் சங்கிலி....! அது ஒரு விதமான போதை...! போதையேறியவன், புதிதாய் வருபவனுக்கு  கற்றுக்கொடுத்தே தீருவான்....! இது உலக நியதி...!

Cricket விளையாட்டின் இடையே கொஞ்சம் ஓய்வு எடுத்த போது தம்பி ஒருவன் என்னிடம் வந்தான்.

'என்னாண்ணே சும்மா சும்மா ரஜினி பேர பெனாத்திக்கினே  இருக்கிற...! அப்டி என்னா அந்தாளு பெரிய சூப்பர் ஸ்டார்' ?

தம்பி...நீ படையப்பா படத்த தியேட்டர்ல போய் பார்த்தியா ?

எங்கணே...காசு கேட்டாலே அப்பா உதைக்கிறாரு...!

சரி வா.................நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்..படம் பார்த்துட்டு சொல்லு...அவரு சூப்பர் ஸ்டாரா இல்லையான்னு...!

'டோய்..அண்ணன் நம்மள நாளைக்கு படையப்பா கூட்டிட்டு போறாறாம்லே...!

ஒண்ணே ஒண்ணு  என்று நான் நினைத்தது பல்கி பெருகினாலும், சளைக்காது அத்தனை பேரையும் கூட்டிபோனேன்.

படம் முடிந்து அவன் சொன்னான்...!

'ஒத்துக்கறேண்ணே, இந்தாளு அப்புடியே நம்மள முழுங்கறார்ணே ..கைல காசு மட்டும் இருந்தா உங்கள மாதிரியே நானும் பத்து பேரையாவது படம் பாக்க கூட்டியாருவேன்ணே..! தலைவன்ணே, தெய்வம்ணே...!

திருப்தியோடு அவனை வாழ்த்தி வழி அனுப்பிவைத்தேன்.   எனக்கொருவன் கிடைத்தது போல் அவனுக்கு நான். இப்படி எத்தனையோ...!

இந்த தொடர் சங்கிலியின் முற்றுப்பெறாத எழுச்சி தான் மேலே சொன்ன அந்த இடம்...ரஜினி என்ற பிம்பத்திற்கு கொடுக்கப்பட்ட இடம்...! A default parallel execution...!

Style என்கிற  வார்த்தைக்கு ஆங்கில அகராதியில் வேறு பொருள். தமிழ் அகராதியில் வேறு பொருள். ஆங்கில வாசனையே தெரியாத தமிழ் சமூகத்திற்கும் இந்த வார்த்தை தெரியும் அதன் அர்த்தமும் புரியும். 

இரண்டு முறை இந்தத்தொடர் சங்கிலி சற்றே விடுபட்டுப் போனதுண்டு..!

ஒன்று ' பாபா ' இன்னொன்று 'லிங்கா' (குசேலன் & கோச்சடையானை பொதுவார்ந்த தமிழ் சமூகம் ரஜினி படமாக ஏற்கவில்லை)

மக்களுக்குப் பிடித்தவற்றை செய்து காட்டியதால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார். இதை விடுத்து, தனக்கு என்ன பிடிக்குமோ அதை மக்களிடம் திணிக்க முயன்று தோற்றது தான் பாபா.

லிங்கா ?

லிங்கா அக்மார்க் ரஜினி படம் தான். சொல்லப்போனால் வெற்றிப்படமும் கூட..! (காசுக்காக சில சிங்காரவேலர்கள் கூவியதை நாம் பொருட்படுத்த தேவையில்லை)

ஆனால், என்னைப்பொறுத்த வரை, ரஜினியைப் பொறுத்தவரை அது தோல்விப்படம் தான்...! நேற்றைய, இன்றைய, ரசிகனுக்கு விருந்தாக இல்லாமல் போனாலும், ஓரளவு பசியாற்றிய 'லிங்கா', நாளைய ரசிகனுக்கு எட்டிக்காயாய் கசந்து துப்ப வைத்தது...!

'படையப்பா' பார்த்துவிட்டு என்னால் ரஜினி ரசிகனான ஒருவனின் தொடர்ச்சி ரசிகன், தன் இளைய கூட்டத்திற்கு 'லிங்காவை' காட்டி தோற்றுப்போனான்...! வாழ்த்தி வழி அனுப்ப வேண்டியவன், வசை வாங்கி ஒடுங்கிபோனான்...!

ஆனால், சங்கிலி விடுபட்டுபோனதே தவிர அறுபட்டுபோகவில்லை..! ரஜினி என்கிற அந்த பிம்பம் அறுபட்டுப்போகவும் விடாது...! விடுபட்டதை கூட உடனே ஒட்டிவிடும்...!

ரஜினி என்கிற குதிரை, விழுந்தவுடன் சோர்ந்து போகாது, சட்டென்று எழுந்து சந்திரமுகியாக பெருக்கெடுத்து ஓடிக்காட்டியது வரலாறு. கிழ குதிரையானாலும் இன்றும் அதனால் சட்டென்று எழுந்து ஓடமுடியும்..! ஓடவேண்டும்...!

M.G.R. என்ற பிம்பம் தமிழ் சமூகத்தின் மீது கொண்டிருந்த ஆளுமை என்பது ரஜினியால் கூட கைப்பெற முடியாத ஒன்று. அதேபோல் ரஜினி என்ற பிம்பம் தமிழ் சமூகத்தின் மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கிற தாக்கம் என்பது இனி வேறு எவராலும் கைப்பெற முடியாத ஒன்று...!

பள்ளி, கல்லூரிக்காலங்களின் கிளர்ச்சியில், விசிலடித்து, கைத்தட்டி கொண்டாடியதெல்லாம் இப்போது நகைப்பை கொடுத்தாலும், காலம் கொடுத்த முதிர்ச்சி, ரஜினி என்ற பெயரை கேட்டவுடனேயே என்னை அடிக்கடி ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்குகிறது...!

நிச்சயம் 'ரஜினிகாந்த்' ஒரு மாய நதி...!

எங்கு தொடங்கியது, எங்கு முடியும் என்றெல்லாம் தெரியாமல், பூப்பாதையிலும் போக முடியாமல், சிங்கபாதையில் மட்டுமே பயணிக்கும் மாய நதி...!

கண்மூடினால் மட்டுமே காணப்பெறும் இந்த நதியில் மூழ்கி நனைந்து போக காத்துக்கிடக்கிறது தமிழ் சமூகம். அந்த கற்பனை குளியலிலேயே  குற்றாலத்தின் குளிர்ச்சியையும் காண்கிறது....!

உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு, ஒரு கூட்டம் அந்த நதியில் சாமி கும்பிடுவது தான் சகிக்க முடியவில்லையே தவிர, நதி தூய்மையாய் தான் இருக்கிறது....!

மூன்று தலைமுறைகளாய் ரஜினி என்ற இந்த மாய நதியில் அவ்வப்பொழுது நடைபெறும் மகாமகம் இன்னொரு முறை நிகழவிருக்கிறது, கபாலி என்ற பெயரில்.

வீழ்ந்து கிடக்கும் குதிரை எழுந்தாகவேண்டும். சென்ற முறை போல் இது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல. இந்த முறை ஏற்படப்போகும் எழுச்சி என்பது ரஜினிக்கு மட்டுமல்ல, அவருடைய ரசிகர்களுக்கும் முக்கியமானது. ஏனெனில், எழுச்சியில் கொஞ்சம் சுணங்கினாலும் கொத்திகுதற சில வல்லூறுகள் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன.

கே.வி.ஆனந்திடம் முதலில் பேசி, பிறகு கௌதம் மேனனிடம் கதை கேட்டு, முடிவில் யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழ் திரையுலகின் பாலகனான ரஞ்சித்தின் கரம் பற்றியிருக்கிறது இந்த கபாலி குதிரை...எழுவதற்கு.

உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்தாலும், 40 வருட திரை அனுபவம் நம்பிக்கை அளிக்கவே செய்கிறது, இந்தக்குதிரை எழுந்து ஓடுமென்று.

மாய நதி தான்.....கற்பனை தான்....! ஆனாலும்..ஏனோ மனம் இன்னும் அந்த நதிக்கரையை விட்டு நீங்க மறுக்கிறது...! அதிசயமாய் இந்த நதியில் மட்டும் அலைகள்....! பாய்ந்து வரும் அலைகள், கால்களை நனைக்க, உச்சி வரை குதூகலிக்கிறது...! 'ஓ' வென உரக்க கத்த வேண்டும்போல் இருக்கிறது...!

எல்லா நதிகளின் விதியைப் போல, இந்த நதியும் கடலை நோக்கித்தான் பயணிக்கும். விரைவில் கடலில் கலந்து காணாமல் போகக்கூடும்...! அதுவரைக்குமாவது நனைந்து கொண்டிரு மனமே....!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

2 comments:

  1. Well said bro. sriram shambthkumar.
    I'm in 36 now still as rajini fan and reading news about rajini and kabali with interesting as i was in 15
    Everything has begnining as well as end
    But as a rajini fan i will not allow his defeat in hand and mouth of stupidest such as seeman, singarevelan and some politicians etc...
    I wish him a life long success

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பா.
    ரஜினி என்னும் சக்தி மக்களை இன்னமும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையே. அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம். கீழ் கொடுக்கப்பட்டுள்ள என்னுடைய பதிவை பார்த்து, உங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    கபாலி - திட்டமிட்டு சதி செய்து அடைந்த வெற்றி
    http://vaangapesalamvaanga.blogspot.se/2016/07/blog-post_28.html

    ReplyDelete