உலகின் தலை சிறந்த பத்து பொறியாளர்கள்: Part 3

2. நிகோலா டெஸ்லா (Nikola Tesla):


அது நடந்தது கி.பி 1884ஆம் ஆண்டு. 

உலகத்தையே கலக்கிக் கொண்டிருந்த ஒரு மிகப் பெரிய தொழில் அதிபரிடம் வேலை கேட்டு, Franceஇல் இருந்து அமெரிக்கா வந்தார் ஒருவர். கையோடு ஒரு சிபாரிசு கடிதமும் கொண்டு வந்திருந்தார். கடிதம், தொழில் அதிபருக்கு 'சார்லஸ்' என்கிற மிக நெருங்கிய நண்பரிடமிருந்து வந்திருந்தது. சில வாசகங்களே இருந்தன அந்த கடிதத்தில்...!

"இந்த பிரபஞ்சத்தில் மிகச் சிறந்தவர்களாக நான் நினைப்பது இரண்டு பேரை மட்டுமே. ஒன்று நீங்கள். இன்னொன்று இந்த கடிதம் கொண்டு வந்திருப்பவர்".

தொழில் அதிபரும் மறுபேச்சில்லாமல் வேலையில் சேர்த்துக் கொண்டார். தனது ஆராய்ச்சியில் முடிக்கப்படாமல் இருக்கும் விஷயங்களை முடித்து தருமாறு கேட்டுகொண்டார். 

வேலை கொடுத்தவர் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன், சேர்ந்தவர் பெயர் நிகோலா டெஸ்லா.

தனக்கு வேலை கொடுத்த எடிசனையே பின்னுக்கு தள்ளி விட்டு '20ஆம் நூற்றாண்டை வடிவமைத்த, தன் நிகரில்லாத பொறியாளன்' என்ற புகழோடு இரண்டாம் இடத்தை இந்த டெஸ்லா கெட்டியாக பிடித்து கொண்டதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. உண்மையும் நிதர்சனமும் அது தான். சொல்லபோனால் நமக்கு தெரிந்து, வாழ்ந்து-மறைந்த பொறியாளர்களில் இவர் தான் உலக நாயகன் (World No. 1), இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

இவர் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என்று கேட்டால், ஒரு பெரிய ஆமாம் தான் போட வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் மின்புரட்சிக்கு  (Electrical Revolution) வித்திட்டவர் இவரே.

'மின்சாரம்' என்று சொன்னாலே எடிசன் பெயர் மட்டும் நினைவிற்கு வருவது திட்டமிட்டு  அமெரிக்க ஊடகங்கள் பரப்பிய சதி. சத்தியமாக... உண்மையாக...டெஸ்லா பெயர் தான் நினைவிற்கு வர வேண்டும். ஏன் ?இந்தாளு மட்டும் இல்லன்னா...நமக்கெல்லாம் 'கரண்ட்டு' என்கின்ற ஒன்று எப்படி எல்லாம் பயன்படும்னு முழுசா தெரிஞ்சே இருந்திருக்காது. 

எடிசன் கண்டு புடிச்ச பல்பு மின்சாரத்தை பயன்படுத்தி வெளிச்சம் கொடுக்கும், ரைட்டு...! ஆனா ஊர் முழுக்க நட்டு வெச்ச பல்புகளுக்கு மின்சாரம் எப்படி போய் சேரும் ? அதாங்க...மின் விநியோகம்...! இங்க தான் வர்ரார் நம்ம தலைவர். மின்சாரத்தை சேதாரமில்லாமல் கம்பி வழியாகவும் கம்பி இல்லாமலும் கடத்தும் (Wired & Wireless Transmission of Electricity) வித்தை இவருக்கு தான் கைவந்தது. 

இந்த AC & DC கரண்ட்டு (Alternative Current & Direct Current) கேள்விப்பட்டதுண்டா? ட்ரான்ஸ்பார்மர் (Transformer)? இண்டக்ஷன் மோட்டார் (AC Induction Motor) ? சரி விடுங்க! வெளிச்சத்துக்கு மட்டும்னு இல்லாம, இன்னைக்கு எந்த-எந்த விஷயங்களுக்கு எல்லாம் மின்சாரம் பயன்படுதோ அதெல்லாம் இவரோட கடத்தும் தத்துவத்தின் அடிப்படையில் தான். 

மின்சாரக்கடத்தலின் சூட்ஷமமான 'காந்தப்பாய-அடர்த்தி' (Magnetic Flux Density) இவர் பெயரால் தான் அளக்கப்படுகிறது.

கம்பியில்லா தொடர்பு (Wireless Communication) இவரது கண்டுபிடிப்பே. இது தான் இன்றைய ரிமோட் கண்ட்ரோலுக்கு (Remote Control) ஆதாரத்தத்துவம்.

மின்சாரத்தை உருவாக்கும் ஜெனரேட்டர், டைனமோ, காற்றாலை, மின்சாரத்தை சேமிக்கும் பாட்டரி, மின்சாரத்தை கடத்தும் காந்தச் சுருள், மின்காந்த அலைகள், சூரிய சக்தி/நீர்/அனல்/புனல் மின்நிலையங்களின் கட்டமைப்பு, என இவர் சொல்லி சொல்லி அடித்தது எல்லாமே கில்லி தான்.

எடிசனிடம் இருந்து விலகி, தனியாக ஒரு நிறுவனம் தொடங்கி, பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி, எடிசனுக்கே போட்டியாளர் ஆகி, நின்னு விளையாடி ஜெயிச்சவர் இவர். 

தொழிற்துறையிலும் அரசாங்கத்திலும் அதீத ஆளுமையுடன் இருந்த எடிசனையே வீழ்த்தி நயாகரா நீர்வீழ்ச்சியில் மின்நிலையம் அமைத்தது இவரது வரலாற்று சாதனை.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் எடிசனிடம் இவரது பருப்பு வேகாமல் போனதற்கு ஒரே காரணம்..எடிசனை போன்று சந்தைப்படுத்தி பொருள் ஈட்டும் சாமர்த்தியம் இல்லாமல் போனது தான்...!

ஒருபுறம் எடிசன் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்று செம்மையாக கரன்சிகளை அள்ளிக் கொண்டிருக்க, இவரோ உலகத்துக்கே விலைஇல்லா மின் விநியோகம் செய்கிறேன் பேர்வழி என்று சொந்தக் காசையும், வட்டிக்கு கடன் வாங்கிய காசையும் போட்டு மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையம் (Massive Power Plant) கட்டும் பணியை தொடங்கினார். 

கி.பி 1990ஆம் ஆண்டு, வார்டன்கிளிபே (Wardenclyffe) எனப்படும் அந்த ப்ராஜெக்ட் தொடங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஆனால் சிறிது காலத்திலேயே, ஏடாகூடமாய் பட்ஜெட் எகிறி பாதியில் நின்று போன தமிழ் படம் போலாகி முடங்கிப் போனது. அடி விழுந்தது என்னவோ உண்மை, அது சாதாரண அடியாக இல்லாமல் மரண அடியாக விழுந்தது  தான் மிகப் பெரிய சோகம்.

அதற்கு பிறகு அவருடைய முயற்சிகளுக்கு எந்த ஆதரவும் கிடைக்காமல் போனது. பெயரும் புகழும் நிறைய கிடைத்தது, பொருள் மட்டும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு பைத்தியகாரனை போல் மிச்ச வாழ்கையை கழித்து...ஒரு அனாதையை போல் தனது 86ஆவது வயதில், நியுயார்க்கில் இருந்த ஒரு வாடகை அறையில் செத்துப்போனார். 

ஆனால் டெஸ்லா செய்து விட்டுப் போனது மானுட சமுதாயத்திற்கே ஒரு அளப்பறியா கொடை.

டெஸ்லா என்றொரு மனிதன் பிறக்காமல் போயிருந்தால், மின்சார ரயில் இல்லை, மோட்டார் சாதனங்கள் இல்லை, மின் ஆலைகள் இல்லை, தொழிற் புரட்சி இல்லை, இன்னும் கூட உலகம் சூரிய வெளிச்சதிற்காய் காத்துக் கொண்டு இருந்திருக்கும் என்பது நிதர்சனம். 

சந்தேகமே இல்லாமல், மின்பொறியியல் (Electrical Engineering) துறையின் தந்தை, தாய், தாத்தா, பாட்டி எல்லாம் இவர் தான்.

குறிப்பு 1: செர்பியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர், படிப்பில் படு சுட்டியாயினும், பட்டம் பெற வில்லை. எனினும் அமெரிக்க பல்கலைகழகங்கள்  3 முறை முனைவர் பட்டம் கொடுத்து கவுரவப்படுத்தின.

குறிப்பு 2: இவருக்கும் எடிசனுக்கும் நடந்த 'நீயா நானா' போட்டி என்பது உலகப் பிரசித்தி பெற்ற ஒன்று. ஊடகத்துறை இதனை 'மின்சார யுத்தம்' (War of Currents') என்றே குறிபிடுகின்றது. 

எடிசன் கண்டு புடிச்ச (Direct Current எனும் நேர் கடத்தி மின்சாரத்தை பயன்படுத்தி வெளிச்சம் கொடுக்கும்) பல்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது .

என்ன தான் பல்பு கண்டு புடிச்சாலும் அதனை சந்தையில் விற்று காசு பண்ணுவதற்கு இரண்டு விஷயங்கள் அவருக்கு தடையாக இருந்தன.

1. தொடர்ந்து பல்பு எரிய தேவையான மின்சாரத்தை தயாரிக்கும் ஜெனரேடர் (Direct Current Generator).
2.  தயாரிக்கும் மின்சாரத்தை பல்பு வரை தடையில்லாமல் கொண்டு சேர்ப்பது (Electricity transmission)

 இந்த இரண்டு விஷயங்களையும் சரி படுத்தாவிட்டால் யாரும் பல்பை நயா பைசாவிற்கு கூட வாங்கமாட்டார்கள் என்பதே நிலைமை. தலையில் கைவைத்துக்கொண்டு எடிசன் உட்கார்ந்திருந்த அந்த சமயத்தில், வேலை கேட்டு வந்த டெஸ்லாவிடம் 'சிக்கிடாண்டா சேகரு' என்று மொத்த வேலையையும் தூக்கி கொடுத்து விட்டார்.

ஒரு மாதத்தில் இந்த இரண்டு தடைகளுக்கும் தீர்வை கண்டுபிடித்து விட்டால் $50,000 மொத்தமாய் உனக்கே உனக்கு என்று வேறு எடிசன் ஆசை காட்ட, புலி வேகமாய் களத்தில் குதித்தது. சொன்னபடியே சாதித்தும் காட்டி, காசு கேட்ட போது எகத்தாளமாய் சிரித்தார் எடிசன், "தம்பி போய் வேலைய பாரு.. வேணும்னா மாச சம்பளத்தில் கொஞ்சம் கூட்டி தாரேன்"

தான் எடிசனால் மழுங்க மொட்டை அடிக்கப்பட்டதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. "போயா நீயும் உன் வேலையும்" என்று வெளியேறி பிறகு அவர் கண்டு பிடித்தது தான் மாற்று மின்சாரம் எனும் 'Alternative Current'.

இந்த மாற்று மின்சாரத்தை வைத்துகொண்டு சொந்தமாக ஒரு கம்பெனி தொடங்கி, எடிசனை 10 வருடங்கள் சொல்லி சொல்லி டெஸ்லா அடித்தது தான் 'மின்சார யுத்தம்' (War of Currents').

பிறகு ? அதான் அந்த 'வார்டன்கிளிபே', டெஸ்லாவை சூப்பராக வாரி விட்டதை முன்னம் பார்த்தோமே...!

குறிப்பு 3: ரேடியோவை கண்டு பிடித்தது மார்கோனி, X-Rayவை கண்டு பிடித்தது ரோன்ட்ங்கன். ஆனால் இருவரும் தன்னுடைய ஆராய்சிக் குறிப்புகளை காப்பி அடித்து தான் இதை சாதித்தார்கள் என்று இருவருடனும் டெஸ்லா சண்டை போட்டு இருக்கிறார். 

குறிப்பு 4: மானுட சமூகமே இவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது எதனால் என்றால்...மின்சார ஆராய்ச்சி என்பது மரணத்தோடு விளையாடுவது போன்றது. 27 முறை ஆராய்ச்சியின் போது இவர் தூக்கி வீசப்பட்டிருகிறார். ஒரு முறை 11 மாதங்கள் கோமாவில் இருந்து பிறகு மீண்டிருக்கிறார். பலமுறை மின்சாரம் தாக்கி உடலின் சில பாகங்கள் மரத்துப்போய் அவதிப்பட்டிருக்கிறார், ஆனால்...என்ன ஆனபோதும் தனது ஆராய்சிகளை மட்டும் கை விடவே இல்லை. 

அது தான்...அது ஒன்று தான்....இன்றும் இவர் பெயரை கேட்ட உடன் கையெடுத்து கும்பிட தோன்றுவதற்கு ஒரே காரணம்....!

சரி.... இந்த தண்டி ஆளையே "கொஞ்சம் தள்ளி விளையாடு தம்பி"னு சொல்லிட்டு மொத எடத்துக்கு வந்த அந்த சூப்பர் ஸ்டார் யாருங்க....?

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடரலாம்.

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்


1 comment: